Published:Updated:

என் ஊர்!

சோழன், பாண்டியன்!

என் ஊர்!

சோழன், பாண்டியன்!

Published:Updated:
##~##
''ரா
ஜேந்திர சோழன் தன்னுடைய தலைநகராக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரத்தின் அருகில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் உட்கோட்டை. அது அப்பாவின் ஊர். அம்மாவின் ஊர் அருகில் இருக் கும் அரியலூர். ஒரே பிள்ளையான நான் பிறந்தது கோவையில் என்றாலும், 'என் ஊர்’ என்று என்னை பெருமைகொள்ள வைப்பது அன்றைக்கும் இன்றைக்கும் உட்கோட்டைதான்!

விவசாயமும் நெசவும் ஊர் மக்களின் பிரதான தொழில்கள். ஒரு சாரார் விவசாயத்தில் மட்டுமே ஈடுபட்டு இருப்பார்கள். இன்னொரு சாரார் நெசவில் மூழ்கி இருப்பார்கள். கலப்பை ஒலியும் தறி சத்தமும் ஒருசேரக் கேட்ட வீடுகளில் எங்களுடையதும் ஒன்று. அந்த நெசவின் பிரபல்யத்தில் நூல் பிடித்துக்கொண்ட அப்பாவை, கோவை நெசவாலை ஒன்று அதிகாரி ஆக்கியது. தொடக்கப் பள்ளி ஆசிரியையாக அம்மாவும் அங்கேயே பணிபுரிந்தார். ஆனால், சேர்ந்தாற்போல விடுமுறை கிடைத்தால், குடும்பத்தோடு உட்கோட்டையில் ஆஜர் ஆகிவிடுவோம்.

என் ஊர்!

ஊர் என்றதும் முதல் நபராகக் கிளம்பும் முனைப்பில் என்னைவிட அப்பா ஆர்வமுடன் இருப்பார். ஊரின் வரலாற்றுப் பெருமை, வழி வழிக் கதைகள், சம்பவங்கள் என என் மனதில் ஊரின் பிம்பத்தைத் திடமாக்கியது அப்பாதான். இன்றும் வேர்களுடனான என் உறவு ஈரத்தோடு இருப்பதற்கு அவரே காரணம்.

கிட்டத்தட்ட பாரதிராஜா படங்களில் வரும் கிராமத்தை வார்த்திருக்கும் அப்போதைய உட்கோட்டை. அதிலும் எங்கள் ரத்த சொந்தங்கள் மட்டுமே எப்படியும் 60 பேர் வருவார்கள். காதுகுத்து, கல்யாணம் என்றாலே, ஏதோ ஊர்த் திருவிழாபோல ஜேஜே என்று இருக்கும். விடுமுறையில் மட்டுமே வரும் சிறுவன் என்பதால், உறவினர் களிடம் கண்டிப்பு கொஞ்சம் நமுத்து இருக்கும். நீண்டு இருக்கும் ஒரு தெரு முழுக்க ஏதேதோ உறவுகளின் பெயரில் என்னுடைய வீடாகவே இருக்கும். ஒரு வீட்டில் விளையாடி, இன்னொரு வீட்டில் சாப்பிட்டு, மறுவீட்டில் தூங்கி எழுந்து... என் சோட்டுப் பசங்களுடன் லூட்டி அடித்தபடி கழிக்கும் ஒவ்வொரு விநாடியும் என்னைப் பொறுத்தவரை சொர்க்கம். மரங் களில் தாவி, ஓடையில் நீந்தி, ஊர் சுற்றி, என் பால்யத்தின் கொண்டாட்டக் கோட்டையாக இருந்தது உட்கோட்டை.

என் ஊர்!

உள்ளூர் மட்டுமல்ல; வரலாற்றுப் பெருமை வாய்ந்த பக்கத்து ஊர்களும் எங்கள் விடுமுறைப் பயணத்தில் இலக்குகளாக இருக்கும். அரச வம்சத்து மாளிகைகள் புதையுண்ட மாளிகை மேடு, கோயில் கோபுரப் பணிக்காக பரணி அமைத்த ஊரான பரணம், சுண்ணாம்பு தயாரித்த சுண்ணாம்புக் குழி, பாண்டியர்களைத் தோற்கடித்த மீன்சுருட்டி, ஜெயங்கொண்டார் நினைவாக ஜெயங்கொண்டம்... இன்னும் இன்னும் ஒவ்வோர் ஊருக்குப் பின்னேயும் ஒரு வரலாறு உண்டு.

அந்த வரலாறோடு கொஞ்சம் புனைவுகள் சேர்த்த கதைகளோடு இரவு உணவு காத்திருக் கும். முந்தைய இரவுச் சோற்றோடு ஊட்டப்பட்ட அந்தக் கதைகளில் உள்ள ஊர்களைத் தேடி எங்கள் பயணம் அடுத்த நாள் இருக்கும். அருகருகே இருந்த அந்த ஊர்களில் இன்றைக்கும் இருக்கும் தொல்லியல் ஆதாரங்கள் எங்கள் கற்பனையைச் சிறகடிக்கச் செய்யும். பட்ட ணத்துச் சிறுவன் என்ற துருப்புச் சீட்டு அந்தத் தொல்லியல் ஆதாரங்களை அவற்றுக்கு காவல் இருப்போரையும் மீறி நெருங்கச் செய்யும். வாள், அதற்கான உறை, கவசம், கேடயம் எனச் சிலவற்றைச் சுமந்தும் சிலவற்றைச் சுமக்க முடி யாமலும் சில நிமிட அரசர்களாவோம். அந்த நினைவுகளைச் சுமந்தே ஏனைய நாட்கள் கழியும்!

பலரும் கேட்டதுபோல எனக்கும் அந்தக் கேள்வி மிச்சம் இருக்கிறது. கோவை, ஒரு குளு குளு பிரதேசம். அரியலூர் பிராந்தியமோ கந்தக பூமி. கோடையில் வெம்மையின் தீண்டலைச் சொல்லவே வேண்டாம். ஆனாலும், கோவை யின் குளிர்ச்சியை மீறி உட்கோட்டையின் வெப்பத்தைத் தீண்ட நான் ஆசைப்பட்டதற்கு என்ன காரணம்? என் சொந்த ஊரின் நினைவுக் குளிர்ச்சியை உள்ளுக்குள் சுமந்ததுதான் காரணம்!  

என்னுடைய திருமணமும்கூட அங்கேதான் நடந்தது. குலதெய்வமான ஊரின் பெரியாண் டவர் பெரியநாயகி கோயிலில் திருமணத்துக்கு ஒப்புதல் பெற பூப்போட்டு பார்த்தார்கள். சொந்தங்கள் கூடிய அந்தச் சடங்கே ஒரு திருமணத்தைப்போல நடந்தது. என்னுடைய மனைவியால் அந்த மண்ணில் கிடைத்தது என் பாக்கியம்!

என்னுடன் விளையாடித் திரிந்த என் பால்ய நண்பர்கள் வளர்ந்து ஊரைவிட்டு விலகி பலரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கி றார்கள். உட்கோட்டையிலும் பச்சைக் காடுகள் பறிபோய் கான்க்ரீட் காடுகள் தென்படுகின்றன. ஆனாலும், கிராமத்து வாசம் என் சுவாசத்தில் இன்னமும் இழையோடிக்கொண்டு இருக் கிறது.

திரை உலகத் தொடர்புக்குப் பின் கோவையை விட்டும் வெளியேறிவிட்டோம். நடைமுறை நிர்பந்தங்கள் சென்னை நகரோடு பிணைத்து இருந்தாலும் அடிக்கடி உட்கோட்டைக்கு குடும்பத்தோடு சென்று தங்கி இருந்து ரீ-சார்ஜ் செய்துகொள்வோம்.

எனது பாட்டி சாப்பிட்ட கிராமத்துக் கலசத்தை எடுத்து வந்து தினசரி அதிலேயே சாப்பிடும் என் அப்பா, இப்போது எல்லாம் தனது பேரனுக்கு ஊரின் கதை களை அதிகம் சொல்கிறார். எத்தனை முறை கேட்டு சலித்து இருந்தாலும் நானும் அந்தக் கதைகளில் என்னை மறந்து போகிறேன் இப்போது!''

- சுமன்