Published:Updated:

என் ஊர்!

ஆயிரங்கால் மண்டபமும் நாகஸ்வர கச்சேரிகளும்!

 ##~##
''தி
ருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலைதான் என் ஊர். 'என் ஊர்’னு சொல்றதைவிட அதை என் குடும்பம்னே சொல்லலாம். ஏன்னா, ஊர்ல பாதிப் பேர் எங்களுக்குச் சொந்தக்காரங்க!'' மனதின் உற்சாகம் வார்த்தைகளில் வழியப் பேசுகிறார் சிவ கார்த்திகேயன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''திருவீழிமிழலைன்னு சொன்னவுடனே எல்லாருக்குமே ஞாபகம் வர்ற விஷயம், வீழிநாத சுவாமி கோயிலும் அங்கே உள்ள ஆயிரங்கால் மண்டபமும்தான். 'சேது’ படத்தில் விக்ரமை சங்கிலியால் கட்டிப் போட்டு இருப்பாங்களே..... அதே மண்டபம்தான்!

என் ஊர்!

அந்தக் கோயிலுக்கு அடுத்து எங்க ஊர் நாகஸ்வரம் உலகப் பிரசித்தம்.  'கூகுள்’ல திருவீழிமிழலைன்னு தட்டுனாக்கூட நாகஸ்வரம்தான் முன்னாடி வந்து நிக்கும். மகா கலைஞர்கள் பொறந்த புண்ணிய பூமி. இந்த ஊர்லதான் முதன்முதலா ரெண்டு பேர் சேர்ந்து நாகஸ்வரம் வாசிக்கிற பாரம்பரியம் தொடங்குச்சு. அந்தப் பாரம்பரியத்தை உருவாக்கின குடும்பத்துலதான் நானும் பொறந்தேன். இந்தியாவோட தலைசிறந்த கலைஞர்கள்னு பேரு வாங்கின சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ரெண்டு பேரும் என்னோட கொள்ளுத்தாத்தாக்கள். 'திருவீழிமிழலை சகோதரர்கள்’னு பேர் வாங்கின கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை ரெண்டு பேரும் என் தாத்தாக்கள்!

என் ஊர்!

அப்பா, சிறைத் துறைக் கண்காணிப்பாளரா திருச்சியில் வேலை பார்த்தார். அதனால், சின்ன வயசு முழுக்க திருச்சிதான். ஆனாலும் தீபாவளி, பொங்கல்னு விசேஷ நாட்களில் எந்த வேலை இருந்தாலும்  அப்பாவோட புல்லட் திருவீழி மிழலைக்கு வந்துடும்.

ஊர் எல்லையில இருக்குற பாலத் தைக் கடந்ததுமே, எங்க சேட்டை ஆரம்பிச்சுடும். எங்கே பாத்தாலும் கூட்டங்கூட்டமா சொந்தக்காரங்களா இருப்பாங்க. அவங்க அன்புக்கும் பாசத்துக்கும் முன்னாடி வேற எதுவும் பெருசா தெரியாது. விசேஷத் தோட முக்கியமான கொண்டாட்டம், ஆயிரங்கால் மண்டபத்துல நடக்குற நாகஸ்வர கச்சேரியும் சின்னப் பசங்களுக்குள்ள நடக்குற போட்டியும்தான்.  

கச்சேரியில பெரியவங்க கலக்குவாங்க. பசங்களுக்கு ஆட்டம் பாட்டம்னு ஜாலி சங்கதிகள். ஆனா, எங்க ஊர்ப் பசங்ககூட போட்டி போடுறது கஷ்டம். ஆட்டம், பாட் டத்துல அவங்ககூட மல்லு கட்ட முடியாது. வேற என்ன வழி? எனக்குத் தெரிஞ்ச குரல்ல மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சேன். இப்படித்தான் இந்த சிவகார்த்திகேயன் உருவானான்.

என் ஊர்!

'சூப்பர் சிங்கர் ஷோ’வைத் தொகுத்து வழங்கிட்டு இருந்த சமயம். போட்டியாளர்களிடம்  பேசிட்டு இருந்தப்ப, நான் திருவீழிமிழலையைச் சேர்ந்தவன்னு தெரிஞ்சதும் அவங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமாப்போச்சு. அதுவும் என் குடும்பத்துல ரெண்டு பேர் 'பத்மஸ்ரீ’ விருது வாங்கினவங்கன்னு தெரிஞ்சதும் மிரண்டுட்டாங்க. அவ்வளவு பெரிய இசைப் பாரம்பரியமிக்க குடும்பத்துல பிறந்த நான்... அந்தக் கலையைத் தொடர முடியலைன்னு நினைக்குறப்போ, வாழ்க்கையில எதையோ பெருசா இழந்துட்ட மாதிரி இருந்தது. ஆனா, பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கிற மாதிரி கலைத் துறையின் ஏதோ ஒரு மூலையில் சின்ன அடையாளத்தோட இருக்கேன்னு ஒரு ஆறுதல்!

  இப்போ சமீபத்துல ஊருக்குப் போயிருந்தப்ப, ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குக் கூப்பிட்டாங்க. பேசி முடிச்சதும் ஊரே வந்து கட்டிக்கிட்டு.... அதே பாசம், அதே நெருக்கம்... திருவீழிமிழலை என் ஊர் இல்லைங்க... என் குடும்பம்!''

- ச.ஸ்ரீராம்,படங்கள்: பா.காளிமுத்து