Published:Updated:

மாடு மேய்க்கப் போவோமா?

மாடு மேய்க்கப் போவோமா?

மாடு மேய்க்கப் போவோமா?

மாடு மேய்க்கப் போவோமா?

Published:Updated:
##~##

''மாடு மேய்க்கத்தான் லாயக்கு!'' - பள்ளிப் பருவம் தொடங்கி பணிபுரியும் அலுவலகம் வரை நாம் கேட்டுப் பழகிய வசை. மாடு மேய்ப்பது என்பது அவ்வளவு எளிமையானதா என்ன?

 ''அப்படித் திட்டுறவங்களை எங்ககிட்ட வரச் சொல்லுங்க... உண்டு இல்லைன்னு ஆக்கிர்றோம்!'' என்று சிடுசிடுக்கிறார்கள் சின்னையாவும் சுப்பையாவும். மாடு மேய்ப்பதில் 50 வருட  அனுபவசாலிகள்.  புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகில் இருக்கும் தாமரைக்குளத்தில் மாடுகளோடு போராடிக்கொண்டு இருந்தவர்களுடன் அளவளாவினேன்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடு மேய்க்கப் போவோமா?

''பத்து வயசுலயே மாடு மேய்க்க வந்துட்டேன். இப்போ எனக்கு எழுபது வயசு. காலையில எட்டு மணிக்கு பழங்கஞ்சி குடிச்சுட்டு, ஒரு தூக்கு வாளியில கொஞ்சம் கஞ்சியும் ராத்திரிவெச்ச கொழம்புக் காயும் எடுத்துக்கிட்டு, இதுகளை ஓட்டியாந்துருவேன். இப்ப வெய்யக் காலங்கிறதால பொட்டவெளி கெடக்கு. இருந்தாலும், அங்கனைக்கு அங்கனை பயிர் பச்சை போட்டுருக்காக. அதுகள்ல வாய் வெச்சிராம சாக்கிரதயாப் பாத்துக்கணும்.

ஒரு சில மாடுக விட்ட எடத்துலயே கெடக்குற புல்லை மேய்ஞ்சிக்கிட்டு நிக்கும். சிலதுக அண்ணாந்து பாத்தமணியமாவே போய்ட்டு இருக்கும். அதுக எல்லாத்துக்கும் பேர் வெச்சிருக்கேன். கறுப்பு, வெள்ளை, மயிலைன்னு. பயிருப் பக்கம் போகுறப்போ பேரைச் சொல்லி அதட்டினா, லேசாத் திரும்பிப் பாக்கும். பக்கத்துல நாம நிக்கிறது தெரிஞ்சா, அப்படியே திரும்பிரும். கொரல் மட்டும்தான் கேக்குது... ஆளைக் காணலன்னா... அதுக பாட்டுக்குப் போயி மேஞ்சிரும். அப்புறம் ஓடிப் போயி,  ரெண்டு போடு போட்டுத்தேன் திருப்பணும்.

மாடு மேய்க்கப் போவோமா?

இந்த வெயில்ல ஒதுங்கக்கூட எடம் இல் லாம, நாமளும் பொட்டவெளிலதான் நிக்கணும். மத்தியானம் ஆயிருச்சே, கொண்டுவந்த கஞ்சியக் குடிச்சிருவோம்னு உக்காந்தா, ரெண்டு வாக் கஞ்சி குடிக்கிறதுக்குள்ள மூணு தடவ எந்திரிக்கவெச்சிருங்க இதுக. நிம்மதியா சாப்புடக்கூட முடியாது.

முன்னெல்லாம் வயலுக்கு வய கெணறு கெடக்கும். அதுல தண்ணியும் மேல கெடக்கும். இப்பத்தான் கெணறே அத்துப்போச்சே? அத னால, ஒரு பாட்டில்ல தண்ணி கொண்டாந்துருவேன். அது தீந்துருச்சின்னா, திரும்ப எத்தன மணிக்கு வீட்டுக்குப் போறமோ, அப்பத்தான் தவிச்ச வாய்க்குத் தண்ணி குடிக்க முடியும்.

மாடு மேய்க்கப் போவோமா?

முன்னெல்லாம் இந்த மாதிரி பொட்டவெளி நெறைய கெடந்துச்சி. மாடுக மேயவும் தோது இருந்துச்சு. இப்பத்தான் வெளையுற நெலத்தையே துண்டு துண்டா வித்து, வீடு கட்டக் கௌம்பிட்டாய்ங்களே? இப்படியே போனா, இன்னும் கொஞ்ச காலத்துல மாடுகளே அத்துப்போய் மாடுன்னு ஒரு சீவன் இருந்துச்சி, அதை வீடுகள்ல வளத்தாங்கன்னு படிச்சித் தெரிஞ்சிக்க வேண்டிய காலம் வந்துரும்போலருக்கு!'' - கண்கள் கலங்க சின்னையா நிறுத்த, ஆறுதலாக அவர் தோள் தட்டிவிட்டுத் தொடர்ந்தார் சுப்பையா.

''நானும் கிட்டத்தட்ட அம்பது வருஷமா மாடுதான் மேய்க்கிறேன். இப்பனாலும் பரவாயில்ல, ஏதோ சூட்டைத் தாங்கிக்கிட்டு நாங்களும் நிக்கிறோம். மாடுங்களும் நிக்கிது. இதுவே மழைக் காலம்னா மாடு ஒரு எடத்துல நிக்காது. கொறச்சலா ஒரு நாளைக்கி பத்து, இருபது மைலு தூரம் நடக்க வேண்டி இருக்கும். கொஞ்ச நாளுக்கு முன்னால, ஒரு செனை மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டியாந்துட்டேன். இங்க வந்ததும் கன்னு போட்டுருச்சி. அப்புறம் கொவள தொடச்சி, கொலும்பு கிள்ளி, மாடு நஞ்சு போடுற வரைக்கும் பக்கத்துலயே நின்னு பெரிய போராட்டமாயிருச்சி.

என்னதான் கஷ்டப்பட்டாலும், நம்ம மாட்டுல பால் பீய்ச்சிக் குடிக்கிறதுக்கும், பாக்கெட்ல பால் வாங்கியாந்து குடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குதுல்ல? தாய்ப் பால் இல்லாத கொழந்தைக்குக்கூட பசும்பாலை தாய்ப் பாலா குடுத்து உசுரக் காப்பாத்துறமே, அந்தத் திருப்தி ஒண்ணே பத்தாதா? அதே மாதிரி, எந்த வெவசாயம் செஞ்சாலும் மொதல்ல போடுறது நம்ம மாட்டுச் சாணம்தானே? இந்த உரத்துக்கு ஈடா வேற உரம் இருக்கான் உலகத்துல?''

'மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்பது பற்றி இவர் களின் கருத்து இதுதான்...

''அரசாங்கக் காச வாங்கிக்கிட்டு சொகுசா உக்காந்த எடத்துல இருந்து, அதிகாரம் பண்றவங்களுக்கு எப்படி தம்பி தெரியும் எங்க வருத்தம்? கொளுத்துற வெயில்லயும் கொட்டுற மழைலயும் அலைஞ்சி திரிஞ்சா... வலி தெரியும். அப்படிச் சொல்றவங்களை ஒரு நாளைக்கி எங்ககிட்ட வரச் சொல்லுங்க... நாங்க புரியவைக்கி றோம்!''

-வீ.மாணிக்கவாசகம்,  படங்கள்:பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism