Published:Updated:

என் ஊர்!

மாடக் கோயிலும் நடராஜர் வீதி உலாவும்!

என் ஊர்!

மாடக் கோயிலும் நடராஜர் வீதி உலாவும்!

Published:Updated:
##~##

''கிராமியப் பண்பாடும் நகர்ப்புற நாகரிகமும் கை கோத்துத் தாலாட்டும் ஊர், எங்க குடவாசல் (குடவாயில்). ஒரு பக்கம் சோழ சூடாமணி ஆறு, இன்னொரு பக்கம் குடமுருட்டி ஆறு. இரண்டும் போட்டி போட்டுக்கிட்டு தண்ணியை வாரி வழங்கும் பூமி. தென்னையும் நெல்லுமாக் காட்சி தரும் செழிப்பான செம்மண் பூமி. இயற்கை வளங்களும் வரலாற்றுப் பெருமைகளும் செழித்தோங்கிய ஊர், எங்க குடவாசல்!

 2,000 வருஷங்களுக்கு முன் தமிழுக்கு வளம் சேர்த்த பெரும்புலவர்களான குடவாயில் கீரத்தனார், குடவாயில் நல்லாதனார் வாழ்ந்த ஊர் இது. சங்கக் காலச் சோழர்களின் நிதி சேமிப்புக் கிடங்கும் சிறைக் கோட்டகமும் இங்கேதான் இருந்தன. அகநானூறு, நற்றிணை போன்ற சங்க இலக்கியங்களில் குடவாசலைப்பற்றிய குறிப்புகள் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

இங்கு உள்ள கோட்டவம் பகுதியில் கருவேலங்காடு இருந் துச்சு. அப்போ நான் பள்ளிக்கூட மாணவன். மழை நேரங்கள்ல அந்தக் காட்டுப் பகுதிக்கு விளையாடப் போவோம். மழை விட்டதும் மண்ணுக்கு வெளியில பழங்காலத்துச் செப்புக் காசுகள் நிறையத் தென்படும். எனக்குள் வரலாற்று ஆர்வம் இப்படித் தான் தொடங்குணுச்சு.

என் ஊர்!

எங்க ஊர் கோணேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் பெரிய கோயிலைவிட பழமையானது. மாடக் கோயில்னு ஊர்ல சொல்வாங்க. உயரமான படிக்கட்டுகளைக்கொண்ட மேடையில் இந்தக் கோயில் இருக்கும். கோயிலைச் சுத்திதான் எங்க ஊரே அமைஞ்சு இருக்கு.

மார்கழி மாசம் ஆதிரை நட்சத்திரத்தில், ஆருத்ரா திருவிழா நடக்கும். அப்ப நடராஜர் வீதி உலா வருவது...  கண்கொள்ளாக் காட்சி! அதேபோல, சித்திரைத் திருவிழாவும் ரொம்பப் பிரசித்தம். 20 நாட்கள் ஒட்டுமொத்த ஊரும் கொண்டாட்டத்தில் இருக்கும்.

கோயிலைச் சுத்தி நாலு ரத வீதிகள். அதில், மேல வீதிதான் கடை வீதி. எங்க ஊரும், சுத்துபட்டுக் கிராம மக்களும் ஒண்ணு கூடுற இடம். சாயங்கால வேளைகள்ல வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக்கிட்டு விருப்பப் பட்டதைச் சாப்பிடுறதுன்னா, அவ்வளவு சந்தோஷம்.

ஊருல செங்குந்த முதலியார் தெரு, இஸ்லாமியர் தெரு, ரெட்டை அக்ரஹாரத் தெரு, மீன் பிடிப்பவர்கள் தெருனு அந்தந்தத் தொழில் செய்றவங்க கூடி வாழுறதுக்குன்னு தனித் தனி தெருக்கள் உண்டு. ஆனா, பாகுபாடெல்லாம் கிடையாது.

கீழ வீதி மகாலெட்சுமி மாணிக்கம் நடுநிலைப் பள்ளிக்கூடம் அப்ப தேசியத் தொடக்கப் பள்ளிங்கிற பேர்ல இருந்துச்சு. அங்கேதான் எங்கள் ஊர் புள்ளைங்களோட படிப்பு தொடங்கும். அகர ஓகைப் பகுதியில் இப்போ அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிற இடம் அப்ப 'போர்டு ஹை ஸ்கூல்’. நூற்றாண்டு கண்ட பள்ளிக்கூடம் இது. அதைவிட முக்கியம் பல பிரபலங்கள் ஆசிரியர்களாகவும், மாணவர்களாகவும் இருந்த பள்ளிக்கூடம். எழுத்தாளர்    தி.ஜானகிராமன் இங்கே கொஞ்ச காலம் ஆசிரியரா வேலை பார்த்தார். ஏழை மாணவர்களுக்கு மிகப் பெரிய அளவில் இலவச கல்விச் சேவை செஞ்சுட்டு இருக்கும் சுவாமி தயானந்த சரஸ்வதி இங்கேதான் படிச்சார். அங்கதான் நானும் படிச்சேன்.

பள்ளிக்கூடத்தைப்பத்திப் பேச ஆரம்பிச்சா, புண்ணியமூர்த்தி அய்யா நெனைப்பு வரும்.  அப்ப அவர்தான் பள்ளிக்கூட நூலகர். புத்த கங்களைப்பத்தி விலாவாரியாத் தெரிஞ்சு வெச்சிருப்பார். என்னை மாதிரியே என்னோட நண்பர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தராஜன், ஷேக் அலாவுதீன், ஜெயகுமார்னு எல்லாருமே வரலாறு, அறிவியல்னு சின்ன வயசுலேயே ஒரு தேடலோட இருந்ததுக்கு அவர் அறிமுகப்படுத்திய புத்தகங்களும் காரணம்.

அந்தக் காலத்துல எங்க ஊர்ப் பக்கம் தெருக்கூத்துகள் ரொம்பப் பிரபலம். அதுவும், ஆண்டான்கோவில்ல நடக்குற மனுநீதிச் சோழன் நாடகம் அங்க மட்டுமே நடக்கும். காத்தையா வாத்தியார்தான் அதுல கதாநாயகன். குதிரையில வந்து இறங்குவார். ஊரே வண்டி கட்டிகிட்டுப் போய்ப் பார்க்கும். அப்புறம், நாடகம் எல்லாம் குறைஞ்ச காலத்துல 'பிலிப்ஸ் தியேட்டர்’ வந்துச்சு. இன்னைக்கும் அந்த தியேட்டருக்கு எங்க ஊருல மவுசு இருக்கு.

அப்புறம் அமைதி வேண்டிப் போற இடம்... பெருங்குடித் தோப்பு. காக்கைகளோட சரணாலயம் இது. இங்க எந்நேரமும் ஆள் நடமாட்டம் இருக்கும். ஆனாலும், சாயங்கால நேரங்கள்ல பல்லாயிரக்கணக்கான காகங்களை இங்கே பார்க்கலாம். அரை மணி நேரம் இங்க உட்கார்ந்திருந்தாப் போதும்... காக்கா சத்தம் மன அமைதியைத் தானா கூப்புட்டுக்கிட்டு வரும்.

ஆய்வுக்காக ஊர் ஊரா சுத்துறேன். வேலை விஷ யமா தஞ்சாவூர்லேயே தங்கிட்டேன். ஆனாலும், மாசத்துக்கு ஒருவாட்டியாவது குடவாசல் போயிடணும். இல்லாட்டி, எதையாவது பறிகொடுத்த மாதிரி ஆயிடும். என் ஊர் இல்லையா?''

- கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன், ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism