Published:Updated:

என் ஊர்!

முருகன் எத்தனை முருகனடி!

என் ஊர்!

முருகன் எத்தனை முருகனடி!

Published:Updated:
##~##

''எல்லா ஊருலயும் கோயில் இருக்கும், சாமி இருக்கும். ஆனா, அது மக்களோட அன்றாட வாழ்க்கைக்கு வெளியிலதான் இருக்கும். எங்க ஊருல அப்படி இல்லை. எங்களோட அன்றாட வாழ்க்கையில ஓர் அங்கம் கோயில். முருகன் கோயிலோடு சேர்ந்த வாழ்க்கை சுவாமிமலை மக்க ளோடது!'' பக்தி மணம் கமழ சுவாமிமலை பற்றிய நினைவு களைப் பகிர்ந்துகொள்ளத் துவங்குகிறார் கலை விமர்சகர் தேனுகா.

என் ஊர்!

''அதிகாலை அஞ்சு மணிக்கு ஒலிக்கும் முருகன் கோயில் மணிதான் எங்க ஊருக்கு அலாரம். முருகன் நீராடும் நேரத்துல நாங்களும் குளிச்சுடுவோம். என்ன அவசர வேலை இருந்தாலும், முருகனுக்கு ஒரு கும்புடைப் போட்டுட்டுதான் வேலையை ஆரம்பிப்போம். இங்கே உள்ள முருகனுக்குப் பெயர் சுவாமிநாத சுவாமி. எங்க ஊர்ல வந்து 'சாமிநாதன் வீடு எது’ன்னு கேட்டால், ஒரே சமயத்தில் பல வீடுகளை நோக்கி கை காட்டுவாங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் குறைஞ்சது ஒரு சாமிநாதனாவது இருப்பார். பிள்ளைகளைக் கூப்பிடும்போதுகூட 'குமார் முருகா’, 'சீனிவாச முருகா’ன்னு முருகனைச் சேர்த்துதான் கூப்பிடுவோம். பெரும்பாலும் எல்லா வீட்டுக் கல்யாணமும் கோயில்லதான் நடக்கும். அதனால முகூர்த்த நேரத்துல  சமயங்களில் எழுபது, எண்பது கல்யாணங்கள்  இங்கே சர்வ சாதாரணமா நடக்கும். அதேபோல கல்யாணமாகி பத்து நாளைக்குள் முருகனுக்கு காவடி எடுத்துடுறது எங்க ஊர் பழக்கம்!

'சுவாமிமலைக்காரன் ஒண்ணு கலைஞனா இருப்பான்... இல்லை ரசிகனா இருப்பான்’னு சொல்வாங்க. இசைக் கலைஞர்கள், நெசவாளர்கள்,  சிற்பிகள்னு ஊரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கலை சார்ந்த வாழ்வியல்தான் நிறைந்திருக்கும். வெவ்வேறு தொழில் பண்ணாலும் கலைஞர்களுக்கு இடையில மரியாதையான உறவு உண்டு.

சுவாமிமலையின் பெருமை ஐம்பொன் சிற்பக் கலை. இந்தக் கலையின் பிறப்பிடமே சுவாமி மலைதான். அதனாலதானோ என்னவோ தஞ்சாவூர் பெரிய கோயில் தலைமைச் சிற்பி வீரசோழன் குஞ்சர மாமல்லன் வழிவந்தவர்கள் எல்லோரும் இங்கேதான் குடியேறுனாங்க. எங்க ஊர் ராஜவீதி முழுக்க சிற்பிகள் நிறைஞ்சிருப்பாங்க. இங்கிருந்துதான் உலகம் முழுக்க சுவாமி சிலைகள் போகும். புகழ் பெற்ற சிற்பிகளான தேவசேனா ஸ்தபதி, ராமசாமி ஸ்தபதி, அண்ணாசாமி ஸ்தபதினு பல சிற்பிகள் வாழ்ந்த ஊர் இது.

சிற்பங்களுக்கு இணையா எங்க ஊர் பேர் சொல்லுற இன்னொரு விஷயம் இசை. 'மருதமலை மாமணியே முருகையா...’-னு பாடுன இசை மேதை 'பத்மஸ்ரீ’ மதுரை சோமுவின் பூர்வீகம் சுவாமிமலை. புகழ்பெற்ற தவில் கலைஞர் கோவிந்தராஜ பிள்ளையோட ஊரும் இதுதான். நாகஸ்வர இசையில் பெரிய சாதனைகள் புரிந்த சாமிநாதம் பிள்ளை, சுப்ரமணியம் பிள்ளையும் எங்க ஊருதான். ராமலிங்க அடிகளாரின் அருட்பாக்களை ராகத்தோடு பாடிப் புகழடைந்த அருட்பா சீனிவாசம் பிள்ளையும் இந்த ஊர்க்காரர்தான். ராஜவீதி எப்படி சிற்பிகளால நிறைஞ்சு இருக்குமோ அதேபோல, கீழ சந்நிதி தெரு முழுக்கவே இசைக் கலைஞர்களால நிறைந்திருக்கும்.

கலைஞர்கள் நெறைஞ்ச பூமிங்கிறதால, எங்க ஊர் பொழுதுபோக்குகளும் அம்மானை பாரதம், கந்தபுராணம், லாவணி, கரகம்னு பாரம்பரிய கலைகளாகவே இருக்கும். தத்ரூபமாக கதை சொல்லக் கூடிய கதை சொல்லிகள் பலர் இங்க வாழ்ந்திருக்கிறாங்க.

  இப்படிக் கலையில மட்டுமல்ல, விவசாயத்திலும் எங்கள் ஊருக்குன்னு தனித்துவ அடையாளங்கள் உண்டு. தமிழ் நாட்டுல வேற எங்கேயும் எங்க ஊர் கொய்யாவுக்கும் வெள்ளரிக்கும் இணையா பார்க்க முடியாது. காய்கறிகளும் அவ்வளவு பசுமையா, சுவையா இருக்கும்.

என் ஊர்!

ஆனா, கலையோ..  காய்கறியோ.. சுவாமிமலை சிறப்பு அவ்வளவுக்கும் காரணம் காவிரித் தண்ணிதான்! அதோட ஆசீர்வாதம் தான் எல்லாத்தையும் வளமாக்குது. என்னையும் ஆளாக்கி இருக்கு.

எவ்வளவோ பேர் வாங்கிட்டேன். எத்தனையோ விருது வாங்கிட்டேன். ஆனா, என்னோட பெருமை எல்லாம் அதுல இல்லை. சுவாமிமலைக் கோயில் நாகஸ்வர வித்வான் முருகையா பிள்ளைக்கு நான் மகன். சுவாமிநாதன் பிள்ளைக்கு நான் தம்பி. அவங்களோட வாத்திய இசையிலதான் இந்த ஊர் முழிச்சுது. நான் இந்த ஊரோட பிள்ளை. இந்தப் பெருமையைத் தாண்டி வேற என்ன இருக்கு சொல்ல?!''

- கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ந.வசந்தகுமார்

என் ஊர்!