Published:Updated:

வானம் பார்த்த சலூன்!

கிராமாயணம்

##~##

புதுக்கோட்டை மாவட்டம், கூளியன்விடுதி கிராமம். பூட்டிக் கிடக்கும் ஒரு வீட்டுக்கு முன், கட்டாந்தரையில் சின்ன சில்வர் கிண்ணத்தில் தண்ணீர், சோப் நுரையுடன் பழைய பிரஷ், தேய்ந்து போன படிகாரக்கல் சகிதம் உட்கார்ந்து இருக்கிறார் ராமையா.

 ''எனக்குச் சொந்த ஊரு மாந்தங்குடிங்க. தாத்தா காலத்துல இருந்து இந்த ஊருக்குத் தொழில் பாத்துக்கிட்டு இருக்கோம். எங்க அப்பாவுக்குப் பொறவு நான்தான் இந்தத் தொழில் பாக்கு றேன். அதுவும் இந்த ஊருலதான் பாக்குறேன். இந்த ஊரு எள வட்டத்துல இருந்து பெருசுங்க வரைக்கும் நம்ம கைதான். யாரும் வெளில போய் மொக சவரம்கூட பண்ணிக்க மாட்டாக.

வானம் பார்த்த சலூன்!

இந்த ஊருல இருக்குற எல்லாக் குடும்ப நல்லது கெட்டதுகளும் பாக்குறதுன்னு ஏதோ பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு. இங்க சம்பளமெல்லாம் அப்பப்ப வாங்குறதுல்ல. ஒரு வருஷம் முடிஞ்சதும் ஒரு ஆளுக்கு ஒரு மூட்டை நெல்லுனு சம்பளமாக் குடுத்து ருவாக. அதை வெச்சிதான் வருஷம் முழுசும் பிளேடு வாங்குறது, சோப்பு வாங்குறது எல்லாம்.

வானம் பார்த்த சலூன்!

முன்னெல்லாம் ஒரு கத்திய வெச்சி தீட்டித் தீட்டி வருசக் கணக்குல வேலை பாப்போம். வரட்டு வரட்டுனு இழுத்தாலும் யாரும் ஒண் ணும் சொல்ல மாட்டாக. இப்ப அதெல்லாம் காணாமப்போயிருச்சி. இந்த ஊரு எளவட்டம் லாம் ஆளுக்கு ஒரு பிளேடு மாத்தணும்னு கண்டிசனா சொல்லிட்டாக. வேற வழி யில்லாம, அவுக சொன்ன மாரியே ஒரு ஆளுக்குப் பாதி பிளேடு மாத்திக்கிட்டு இருக் கேன். 10 பிளேடு வாங்கினா, ஒரு நாளைக்குத் தான் வருது. இந்த ஊரைப் பொறுத்தவரைக்கும் என்னை ஒரு தொழிலாளியா நெனைக்க மாட்டாக. தீவாளி, பொங்கல், திருவிழா நல்ல நாள், பெருநாளுக்கு, ஆளாளுக்கும் கையில கெடைக்கிற காசைத் தருவாக. அப்புறம் நமக்கென்ன கொறைச்சல்னு நானும் சளைக்காம வந்து வேலை செய்றேன்.

காலையில எட்டு மணிக்கு இங்க வந்தா, சாயந்திரம் நாலு மணிக்கு தான் வூட்டுக்குப் போவேன். மத்தியானம் யாரு வூட்டுலயாவது ரெண்டு சோறு போட்டுருவாக. இந்த ஊருல மூணு மரத்தடி இருக்கு. அங்கங்கவச்சி வேலை பாத்துட்டு முடிய அள்ளிக்கிட்டுப் போயிருவேன். இந்த ஊருக்கு வந்து வேலை பாக்குறது என்னோட காலத்தோட போயிரும் போலருக்கு. ஏன்னா, எம் மவன் சின்னதா ஒரு கடைய வெச்சிக்கிட்டு உக்காந்துட்டான்''  - வெள்ளந்தியாகப் பேசுகிறார் ராமையா.

இதற்குள் அவரைச் சுற்றி ஒரு சின்ன கூட்டம் சேர, தொழி லைக் கவனிக்கத் தொடங்குகிறார் ராமையா. வரிசையில் நின்றுகொண்டு இருந்த ஆறுமுகம் ஆரம்பித்தார்.

வானம் பார்த்த சலூன்!

''எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இவர்கிட்டதான் முடி வெட்டி சவரம் செஞ்சிக்கிறேன். அறுப்பு முடிஞ்சதும் என் வூட்டுல இருந்து ஒரு மூட்ட நெல்லு குடுத்துருவேன். அப்பல் லாம், காலைல ஆறு மணிக்கெல்லாம் ஊருக்குள்ள  வந்தா, அதுக்கு முன்னாடியே முதல்ல யார் முடி வெட்டிக்கிறதுன்னு ஒரு பஞ்சாயத்தே நடக்கும். அப்பறம் இவர் வந்து 'மொதல்ல வந்த ஆளு வந்து உக்காரு’ம்பாரு. வேலையே இல்லன்னாலும் அடிச்சிக்கிறதுக்கு காரணம், இவர் வெச்சிருக்குற அந்த சவரக் கத்தி. மொத நாளு தீட்டுனதோட இருக்குற அந்தக் கத்தில சவரம் செய் றப்போ லேசாதான் எரியும். அப்பறம் அப்புறம் சவரம் செய்ற ஆளுக்கெல்லாம் மொகத்துலருந்து காதோரம் வரைக்கும் எரியும் பாருங்க, தாங்கவே முடியாது. அதுக்கப்புறம்தான் இந்த வெள்ளைக்கல்லு வந்துச்சி. இப்ப அதை எல்லாம் தாண்டி என்னென்ன மருந்தோ மொகத்துல தடவி எரிச்சலக் கொறைக்கிறாங்க. ஆனாலும், எங்க ராமையா இன்னும் கல்லு வெச்சி மொகத்துல தேய்ச்சிதான் மொகம் கெட்டுப் போகாமப் பாத்துக்கறார். ஆயிரம்தான் சொல்லுங்க, நம்ம ஊருல நம்ம மரத்தடில உக்காந்து நல்ல காத்த வாங்கிக்கிட்டு சவரம் பண்ற சொகம் வேற எங்க போனாலும் கெடைக்காது தம்பி.''

''அப்பா, அடுத்த ஆளு வாய்யா'' - ராமையா அழைக்கக் கிளம்புகிறார் ஆறுமுகம்!

-வீ.மாணிக்கவாசகம், படங்கள்:பா.காளிமுத்து

வானம் பார்த்த சலூன்!
அடுத்த கட்டுரைக்கு