Published:Updated:

என் ஊர்!

பள்ளிங்குத்தும் கொலைச் சிந்துகளும்!

என் ஊர்!

பள்ளிங்குத்தும் கொலைச் சிந்துகளும்!

Published:Updated:
##~##

'தஞ்சாவூர் மாவட்ட எல்லையில், செங்கிப்பட்டி அருகே உள்ள ஆச்சாம்பட்டிதான் நான் பொறந்து, வளர்ந்த மண். சின்ன ஊர்கள்ல பெருசா மலைக்க வைக்கும் விஷயங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனா, மண்ணோடு ரொம்பவும் ஆழமான உறவை உருவாக்குறது சின்ன ஊர்கள்தான்!''

 நெகிழ்ச்சியோடு தொடங்கினார் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலரும் 'தமிழர் கண்ணோட்டம்’ இதழின் ஆசிரியருமான பெ.மணியரசன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரொம்பவும் சின்ன ஊர் எங்க ஆச்சாம்பட்டி. அந்தக் காலத்தில் டீ குடிக்கக்கூட நாங்க செங்கிபட்டி தான் போகணும். ரொம்ப பின்னாடிதான், ராமஜெயங் கிறவர் கூரைக் கொட்டகையில் ஒரு டீக்கடை வெச்சார்.

என் ஊர்!

அப்போலாம் ஆச்சாம்பட்டியில் இருந்து செங்கிப் பட்டிக்கு நடத்துதான் வரணும். இப்போ மேடு, பள்ளமாகக் கிடக்கும் தார் சாலைபோல கிடையாது, சமமான செம்மண் சாலை. வெயில், மழைன்னு அந்தந்தப் பருவத்தை எங்கள் ஊர் செம்மண் சாலைப் பிரதிபலிக்கும். ஊர்ல எல்லோருமே தாயா புள்ளையா, ஒட்டும் உறவுமா இருப்போம்.

என் ஊர்!

எங்க ஊரின் கொண்டாட்டம், சந்தோஷம் எல்லாமே இங்க உள்ள அரசர் கோயில்தான். ஊர்ல எல்லா சமூகத்தினருக்கும் அவங்க அவங்க குடும்பங் களுக்குன்னு தனியா கோயில்கள், சாமிகள் உண்டு. ஊர் மொத்தமும் கொண்டாடுற தெய்வம் அரசர். ஊருல பெரிய விசேஷம்னா, வைகாசி மாசம் நடக்குற ஏழு நாள் திருவிழா. ஊர்க்காரவங்க எல்லோரும் எங்க இருந்தாலும் அப்ப இங்கே கூடிருவாங்க.

அதேபோல, அரசர் கோயில் கிடாவெட்டும் முக்கியம். ஊரே மணக்கும் வகையில் விருந்து நடக்கும். அதில் என்ன விசேஷம்னா, இங்கேயே வேண்டுதல்காரர் சமைச்சு ஊர் மக்களுக்கு சாப் பாடு போடணும். வீட்டுக்கு எடுத்துகிட்டுப் போகக் கூடாது. அந்தக் கிடா விருந்து சுவையை நான் வேற எந்த விருந்திலும் ருசிச்சது இல்லை!    அரசர் கோயில்லயே அய்யனாரும் உண்டு. அந்த மாதிரி விருந்து நடக்கும்போது அவருக்குத் தனி சைவ விருந்து. அய்யனார் கண்களைக் கட்டிட்டுதான் கிடாவே வெட்டுவோம்.

பெரியவங்களுக்கு அரசர் கோயில் உள்ளே இருக்கும் சாமி எவ்வளவு முக்கியமோ, சின்னப் பசங்களுக்கு வெளியே நிற்கும் குதிரையும் தாய்ச்சி குளமும் அவ்வளவு முக்கியம். தண்ணீர் கருத்துக் கிடக்கும் குளம் முழுவதும் தாமரை பூத்திருக்கும். கரையில் இருந்து தாவிக் குதித்து உடல் களைப்பு வரும் வரையில் தண்ணீருக்குள்ளேயே கிடப்போம். குளத்தில் இருந்து பார்க்கும்போது அந்தக் குதிரை சிலைதான் எத்தனை அழகு?

எங்க ஊரை ஓட்டி இருக்கும் ஆச்சான் ஏரி பிரமாண்டமான ஏரி. கரையோரம் மரங்கள் நிறைய இருக்கும். இங்கே உள்ள நாவல் மரங்கள்ல பழங்கள் அவ்வளவு ருசியா இருக்கும். அதனால், விடுமுறை நாட்கள்ல எங்க ஊர் பசங்க அங்கதான் இருப்பாங்க!

எங்க ஊர் பசங்களோட அந்நாளைய விளை யாட்டு, இப்போது 'சடுகுடு’ன்னு அழைக்கப்படுற பள்ளிங்குத்து. இன்னிக்கும்கூட பள்ளிங்குத்து ஆடும்போது பாடுற பாட்டு ரத்ததுல கலந்து கிடக்குது.

'பள்ளிங்குத்து அடிக்கவே
பல்லு ரெண்டும் போகவே
உன் ஆயிக்கும் அப்பனுக்கும்
ரெண்டு பணம் தெண்டம் தெண்டம்...’

இதுல தொடர்ந்து 'தெண்டம்’ என்கிற வார்த்தையை மூச்சுவிடாமல் பாடி விளையாடணும்.

அந்தக் காலத்துல வேலு பண்டிதர், அருளானந் தம்... இவங்க ரெண்டு பேரும் எங்க ஊர் கதாநாயகர்கள்,  வேலு பண்டிதர் சித்தர் பாடல்களைஅவ்வளவு அற்புதமாப் பாடுவார். அருளானந்தம் கொலைச் சிந்துகள் பாடுவதில் கில்லாடி. வள்ளலார் பாடல்களைப் பாடுவதில் வித்தகர் மூக்கையன். காலையில தாய்ச்சிக் குளத்துல குளிச்சிட்டுக் கிளம்புனா, இவர் பாடுற பாட்டு ஊர் முழுக்கக் கேட்கும்.

அப்பல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷங்களில்தான்  வீடுகளில் இட்லி சுடுவாங்க. எங்க வீட்டுக்குப் பக்கத்துத் தெரு வில், ஒரு வீட்டுல தினமும் இட்லி சுட்டு வியாபாரம் செய்வாங்க. அப்பா, சந்தோஷமா இருக்கும் நாட்கள்ல அங்கிருந்து இட்லி வாங்கிட்டு வருவார். பொழுதுபோக்குன்னா, அபூர்வமா பூதலூர் டூரிங் டாக்கீஸுக்கு அழைச்சுக்கிட்டுப் போவாங்க. எல்லார் வீட்டுக் கதையும் இதுதான்!

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய ஊர் எங்க ஊர். மகாத்மா காந்தி வெள்ளைக்காரனை எதிர்த்து, அயல்நாட்டுத் துணிகளைப் புறக்கணிக்கச் சொன்னப்ப, இங்கே வெளிநாட்டுத் துணி எதிர்ப்புப் போராட்டம் பெரிய அளவில் நடந்தது.  அந்தப் போராட்ட உணர்வு இந்த மண்ணுல இன்னைக்கும் அதே உயிர்ப்போடு இருக்கு. என்னை இயங்க வைக்கிறதும் அதோட அடிநாதம்தான்!''

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்

என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism