என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர்!

கம்மாக்கரைப் பாட்டு ஆக்காட்டி வேட்டு!

##~##

''தீரர் சத்தியமூர்த்தி பிறந்த பூமியடா
தெம்மாங்குப் பாட்டுதானே சோறு போடும் சாமியடா
திருமயம்தான் ஊரு-ஆக்காட்டி ஆறுமுகம்தான் பேரு''

ஊரைப்பற்றி பேசச் சொன்னால், பாடத் தொடங்கிவிட்டார் நாட்டுப்புறப் பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம்!

'' 'திருமெய்யம்’னா உண்மையின் இருப்பிடம்னு அர்த்தம். அதுதான் மருவி மருவி 'திருமயம்’னு ஆச்சு. உலகத்துல எங்கேயுமே காணக் கிடைக்காத அளவு, சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் பக்கத்துப் பக்கத்தில் குகைக் கோயில்கள் இந்த ஊர்லதான் இருக்கு. விஷ்ணு கோயில் கல்வெட்டுல, கி.பி. 8-9ம் நூற்றாண்டுல இந்தப் பகுதியை முத்தரைய மன்னன் சாத்தன் மாறன் ஆட்சி செய்த ஆதாரமா, அவரது பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கு. அதுக்குப் பிறகு, சோழர்கள், பாண்டியர்கள், இந்தப் பகுதியை ஆட்சி செஞ்சதா வரலாறு சொல்லுது.

என் ஊர்!

எங்க ஊரோட அடையாளமே இங்கே இருக்கும் கோட்டைதான். கம்பீரமாக் காட்சி தர்ற இந்தக் கோட்டையை வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைதான் கட்டினார்னும், இந்தக்

என் ஊர்!

கோட்டையில் ஊமைத்துரை ஒளிஞ்சிருந்தார்னும் கதை கதையா சொல்வாங்க. அதனாலதான், இந்தக் கோட்டைக்கு ஊமையன் கோட்டைன்னு இன்னொரு பேரு. ஆனா, இந்தச் செய்திகளுக்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடையாது!

இப்படி ஆளாளுக்கு இந்தக் கோட்டையைப் பத்திச் சொன்னாலும், ராமநாதபுரம் சேதுபதி மன்னன் கிழவன் சேதுபதி காலமான 1676-ல்தான் இது கட்டப்பட்டது. கோட்டைக் கட்டுமானத்தின்போது, இரண்டு மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டதா செப்பேட்டுச் செய்தி சொல்லும்.

கோட்டையைச் சுத்தி ஏழு மதில் சுவர்கள். வெளி மதில் சுவரைச் சுத்தி முதலைகளும் நச்சுப் பாம்புகளும் நிறைஞ்ச பெரிய அகழி இருந்ததாம். வடக்கு, தெற்கு, தென் கிழக்குனு மூணு திசைகளில் வாசல்கள். வடக்கு வாசல்ல பைரவரும், தெற்கு வாசல்ல அனுமன், சக்தி, கணபதியும், தென் கிழக்கு வாசல்ல கருப்பரும் காவல் தெய்வங்களா இருக்காங்க. கோட்டையில் பாறையிலேயே குடையப்பட்ட குகையும் இருக்கு. அது ஆயுதக் கிடங்கா இருந்திருக்கலாம்னு சொல்றாங்க. அங்கே கண்டெடுத்த பீரங்கிகள், குண்டுகள், சங்கிலிப் போர் உடைகள், உடை வாள்கள், பூட்டுகள் எல்லாம் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் இருக்கு.

அலுமினியப் பாத்திரத்தில சமைச்சா, சோறுன்னும்... மண் பானையில் சமைச்சா, கூழுன்னும் முடிவு பண்ணிக்கிற குடும்பத்துல பொறந்தாலும், ஒரு ராஜாவுக்குள்ள கௌரவம் திருமயம் காரவகளுக்கு இருக்கும். அதுக்குக் காரணம் இந்த ஊரோட பெருமைதான்!

அந்தக் காலந்தொட்டு எங்க ஊர் ஆளுங்களுக்கு கபடின்னா... உசுரு. எனக்குந்தான். நான் சின்ன பையனா இருக்கும்போது,  'வெண் புறா கபடிக் குழு’னு ஒரு டீம் இருந்துச்சு. அவங்க எங்கே விளையாடப் போனாலும், நானும் போயிருவேன். வெளையாடும்போது அவங்களோட ட்ரவுசர், கைலி, சட்டையை நான் வெச்சிருப்பேன். அவங்கள்ல யாருக்காவது அடிபட்டுட்டா, அவங்களுக்குப் பதிலா நான் இறங்கி வெளையாடுவேன். அதுக்கப்புறம் நானே ஒரு பிளேயர் ஆகிட்டேன்!

அந்தக் காலத்துல, இந்தப் பக்கம் கலப்பு தோசை ரொம்பப் பிரபலம். அறுவடைக் காலங்கள்ல நெல் அடிக்கும் களத்துல இந்தத் தோசையைக் கொண்டாந்து கொடுப்பாங்க. ரெண்டு தோசை ஒட்டினாப்புல நடுவுல வெல்லம்வெச்சு இருக்கும். கல்லாப்பட்டி ஆத்தானு ஒரு ஆத்தா அதைக் கொண்டாரும். அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப அதெல்லாம் காணாமப் போச்சு!

என் ஊர்!

எங்க ஊரோட விசேஷம், பிடாரியம்மன் கோயில் திருவிழா. பங்குனி மாசம் காப்பு கட்டிருவாக. கிட்டத்தட்ட ஒரு மாசம் நடக்கும். திருவிழா சமயத்துல ஊருல இருக்குற யாரும் வெளியூர்ல ராத் தங்கக் கூடாது. தங்க மாட்டோம். அதே மாதிரி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவும் விசேஷம். இந்தத் திருவிழா நாட்கள்ல ஒவ்வொரு நாளும் 'வள்ளித் திருமணம்’, 'சத்திய வான் சாவித்திரி’, 'பவளக்கொடி’னு வரிசையா ஒரு நாடகம் நடக்கும். அப்புறம் பக்கத்துல கடியாபட்டியில ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்துச்சு. சாயங்காலமே ராத்திரி சாப்பாட்டை சமைச்சுச் சாப்புட்டுட்டு, குடும்பம் குடும்பமா சினிமாவுக்கு நடந்தே போவோம். எங்க சந்தோஷம் எல்லாம் அந்த நாள்ல அதுதான்.

எங்க வாழ்க்கையோடு ஓட்டுன சந்தோஷம்னா, எங்க ஊரைச் சுத்தியுள்ள கண்மாய்ங்க. தாமரைக் கண்மாய், வேங்கை கண்மாய், சின்ன கண்மாய், பெரிய கண்மாய், வெட்டி கண்மாய்னு ஏகப்பட்ட கண்மாய்கள் இங்கே இருக்கு. சாயங்கால நேரத்துல அந்தக் கம்மாகரைப் பக்கம் போனா, சாதாரண மனுஷனும் கவிஞன் ஆயிடலாம். நமக்கெல்லாம் பாட வந்தது அப்படித்தான்!''

- வீ.மாணிக்கவாசகம் ,படங்கள்: பா.காளிமுத்து