என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

''சேவலுக்கும் ராசி உண்டுங்க!''

நாகை ஆடுகளம்!

##~##

நாகை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் அது. ஊருக்கு ஒதுக்குப்புறமான தோப்பில் கூடி இருந்தார்கள் சேவல் சண்டைப் பிரியர்கள். கார், பைக் என்று வாகனங்கள் ஒருபுறம் அணிவகுத்து இருக்க, மரத்துக்கு மரம் சேவல்கள் கட்டப்பட்டு நிற்கின்றன. சரியாக மாலை 4 மணி... ''வர வேண்டியவங்க எல்லாம் வந்தாச்சாப்பா?'' எனக் கேட்கிற பெரிய மீசைக்காரர், ''எல்லோரும் அவங்கவங்க சேவலைக் கொண்டாங்கப்பா!'' என்று உத்தரவிடுகிறார். சேவல் எடுத்து வந்து இருக்கும் எல்லோரும் இரு பிரிவுகளாக,  எதிரெதிரே உட்கார்கிறார்கள். அனைவரின் கைகளிலும் அணைப்பாக சேவல்கள் கொக்கறிக்கின்றன.

 பொறி வெள்ளை, வளவி, கோழி, கீறி, கருஞ்செவலை என்று அதனதன் நிறம் மற்றும் அமைப்பை வைத்து, சேவல்களுக்குப் பெயர்கள்.

சேவல் வைத்து இருப்பவர்கள் தவிர, சேவல்கட்டிகள் எனப்படும் சேவலைச் சண்டைக்கு விடுபவர்கள், பட்சி சாஸ்திரம் பார்ப்பவர்கள், சேவல்கட்டிகளுக்கு உதவுபவர்கள் என வேறு பலரும் இரண்டு பிரிவு களிலும் இருக்கிறார்கள்.

''சேவலுக்கும் ராசி உண்டுங்க!''

சாதிக் தனது பொறிவெள்ளைக்கு ராஜா வின் செவலையைச் சண்டையிட கேட்க, ராஜா தரப்பில் பட்சி சாஸ்திரம் பார்க்கப் படுகிறது. 'கட்டலாம்... வெற்றி உறுதி!’ என்று பட்சி உத்திரவாதம் கொடுக்கப் பட்டதும் சண்டைக்கு சம்மதித்தார் ராஜா.

மற்ற சேவல்கள் விலக்கிக்கொள்ளப்பட்டு, செவலையும் பொறிவெள்ளையும் களத்தில் சந்தித்தன. பொறிவெள்ளையை சேவல்கட்டி செல்வம்  நேக்காகக் களம் இறக்கினார். எதிரே கண்ணன் செவலையைத் தயார் செய்து களம் இறக்கினார். முதலில் இரு சேவல்களுமே தங்களைத் தற்காத்துக்கொள்ளத் தான் எதிரியைத் தாக்கின.

ஆனால், ஒரு கட்டத்தில் தற்காப்பு... கோபமாக மாறி, மிக உக்கிரமான மோதல் ஆரம்பித்தது. ஆக்ரோஷம் அதிகமானபோது, சேவல்கட்டிகள் தத்தமது சேவல்களைத் தூக்கி காதுகளில் ஊதியும் தண்ணீர் கொடுத்து தடவிக் கொடுத்தும் ஆசுவாசப்படுத்தினார்கள். எவ்வளவு ஆசுவாசப்படுத்தினாலும் களம் இறங்கும்போது, கோபம் முட்டிக்கொள்கிறது சேவல்களுக்கு!

''சேவலுக்கும் ராசி உண்டுங்க!''

சண்டையின் போக்கில் பொறிவெள்ளையின் கை (கால்) பலவீனமானது. அதற்கு ஆபத்தான கட்டம் வரும்போது எல்லாம் அதன் சேவல்கட்டி செல்வம் அதைக் கையில் எடுத்து தடவிக் கொடுக்கிறார். ஒருகட்டத்தில் செவலையின் உக்கிரத் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் களத்தைவிட்டு ஓட்டம் எடுக்கிறது பொறிவெள்ளை. தோற்றுப்போன பொறிவெள்ளையை ராஜா கையில் ஒப்படைத்தார் செல்வம்!

மறுபடி திரும்பவும் எல்லா சேவல்களும் களத்துக்கு கொண்டுவரப்பட்டு, எந்தெந்த சேவல்கள் மோதுவது என்று முடிவு செய்யப்பட்டு சண்டைக்கு விடப்படுகின்றன.

''சண்டையின்போது நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதற்கு உட்பட்டால்தான் சேவலைக் களம் இறக்கவே முடியும். சேவல் ஓடினாலோ, பறக்க முடியாமல் படுத்துவிட்டாலோ, தோற்றதாக அர்த்தம். அதை  வெற்றி பெற்ற சேவல்காரருக்குக் கொடுத்துவிட வேண்டும். அதேபோல, ஒவ்வொரு கட்டுக்கும் குறிப்பிட்ட நேர இடைவெளிதான் இருக்க வேண்டும். அதைத் தாண்டி நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது. சேவல்களிடமும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் நம் சேவலைத் தூக்கும்போது, எதிர்சேவல்காரர் அதை உடனடியாகத் தூக்க வில்லை என்றால், அது பறந்து நம்மைத் தாக்கிவிடும்!'' என்று சண்டையின் கட்டுப்பாடுகளையும் நீக்கு போக்குகளையும்பற்றிச் சொல்கிறார்கள்.

இந்தக் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கும்போது, இரு தரப்பினருக்கும் இடையே சச்சரவுகள் ஏற்படுகின்றன. பொதுவானவர்கள் சமாதானப்படுத்துகிறார்கள்.

''சேவலுக்கும் ராசி உண்டுங்க!''

''பட்சிதாங்க முக்கியம். பறவை களின் நிறம், வடிவம், குணம் ஆகிய வற்றைவைத்து, அதனதன் வெற்றியைத் தீர்மானிக்க முடியும் என்பதை நம் முன்னோர்கள் அனுபவப்பூர்வமா உணர்ந்து சாஸ்திரமாக்கி வைத்து இருக்கிறார்கள். அதன்படி, பார்த்து சேவல்களைக் களம் இறக்கினால் வெற்றி நிச்சயம். ஆனால், எதிரே நிற்கும் சேவலின் ராசியை சில நேரம் சரியாகக் கணிக்காதபோதுதான் நமது கணிப்பு தப்பாகும்.

இந்த சாஸ்திரம் நமக்கும் பொருந் தும். நாம் நம்முடைய வகை எதுவென்று தெரிந்து, அந்த சாஸ்திர பலன்களுடன் நடந்தால், வெற்றிகளைக் குவிக்க முடியும்'' என்று சேவலில் இருந்து மனி தனுக்கு சாஸ்திரத்தைப் பொருத்துகிறார் 'பட்சி’ பாஸ்கர்.

அடுத்தடுத்து, சேவல்கள் இரவு 7 மணி வரை களம் இறக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இரு தரப் பிலும் வெற்றி, தோல்வி என இரண் டுமே சகஜமாக இருக்கிறது. ஆனாலும் யாரும் சோர்ந்து  ஓய்ந்துவிடவில்லை. சேவல்களும் முடிந்தவரை சமாளிக் கின்றன. எதிராளியின் தாக்குதலுக் குப் பாய்ந்தும் பதுங்கியும் பதில் தாக்குதலைத் தொடர்கின்றன. போராடிப் பார்த்து இறுதியில் வீழ்கின்றன. இதுதானே மனித வாழ்க்கையும்!

- கரு. முத்து, படங்கள்: ந.வசந்தகுமார்