Published:Updated:

என் ஊர்!

கீழவன்னிப்பட்டு கிளிச் சத்தம்!

என் ஊர்!

கீழவன்னிப்பட்டு கிளிச் சத்தம்!

Published:Updated:
##~##

''எப்போதும் கிளி சத்தம் கேட்டுக்கிட்டே இருக் கும். இலுப்பை மரக் காத்து, ஊர் முழுக்க நெறைஞ்சி இருக்கும்!'' கீழவன்னிப்பட்டை பற்றிக் கேட்டதுமே ரம்யமான நினைவுகளுள் அமிழ்கிறார்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலரும் 'தாமரை’ இதழின் ஆசிரியருமான சி.மகேந்திரன்.

என் ஊர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பக்கத்தில் இருக்கு எங்க ஊர். இப்பவும் எங்க ஊருக்குள் பஸ் வர்றது இல்லை. எங்க மக்கள் அதை விரும்புவதும் இல்லை. காலாற நடந்து போயி பஸ் ஏறுறதுதான் ஆரோக்கியம்னு நினைக்குறாங்க. எப்பவும் உழைச்சுக் கிட்டே இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. குறிப்பா, எங்க ஊர்ப் பெண்கள் கடுமையான உழைப்பாளிங்க. முப்பது வருஷத்துக்கு முன்னாடி, கயித்துல ஒரு முனையில பெரிய இரும்பு வாளியையும் இன்னொரு முனையில ஒரு பெரிய கல்லையும் கட்டி தண்ணீர் இறைப்பாங்க. தண்ணியோடு வாளியை மேல கொண்டுவர, அந்தக் கல்லு உதவியா இருக்கும். ஆனா, ஒவ்வொரு முறையும் வெற்று வாளியை தண்ணிக்கு உள்ளார அனுப்புறது ரொம்பக் கஷ்டம். முழு பலத்தையும் காட்டியாகணும்.  இதைக் 'கை இறவை’னு சொல்வாங்க. அப்படி ஒரு கடுமையான உழைப்புக்குப் பழக்கப்பட்டவங்க எங்க ஊர்க்காரங்க!

எங்க ஊரை ராஜா கிராமம்னும் சொல்வாங்க. ஒரத்தநாட்டுல வாழ்ந்த 'முத்தம்மாள்’ங்ற ஒரு பெண்ணோடு சரபோஜி மன்னன் உறவு வெச்சிருந்தாராம். அந்தப் பெண்ணை சரபோஜி குடும்பத்தினர் கொன்னுட்டாங்களாம். அந்தப் பெண்ணின் நினைவா சரபோஜி மன்னன், ஒரத்தநாட்டுல முத்தம்மாள் சத்திரம் கட்டினார். அதன் அன்றாட செயல்பாடுகளுக்கு, அதிக அளவு நிதி வழங்கிய கிராமங்கள்ல, கீழவன்னிப் பட்டும் ஒண்ணு. அந்த அளவுக்கு எங்க ஊர்ல செல்வம் கொழிச்சிருக்கு. நெல், கடலை, கேழ்வரகு, சோளம், கம்பு,  வரகு, மிள காய்னு எல்லாமே நல்லா செழிப்பா விளையுற பூமி இது!

என் ஊர்!

எங்க ஊரின் நீராதாரம் வன்னிப்பட்டு ஏரி. எங்க வளத்துக்கு மூலாதாரமும் அதுதான். தவிர, சின்ன வயசுப் புள்ளைங் களோட பொழுதுபோக்கும் அது. புது ஆத்துக் கால்வாயும் எங்க ஊருல ஓடுது. 1920-கள்ல அந்தக் கால்வாய் உருவாக்கப்பட்டு தண்ணீர் வந்த புது சுல, மக்கள் அதைப் பயத்தோடுதான் பார்த்தாங்களாம். 'கும்பெனிக்காரன் சும்மாவா தண்ணி அனுப்புவான்? ஏதாவது கேடு இருக்கும்’னு முதல் ரெண்டு மூணு வருஷம் அந்தத் தண்ணியைத் தொட்டுக்கூட பார்க்கலையாம். எங்க தாத்தா சொல்வார்!

இப்ப எங்க ஊர்ல இருக்குற ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப் பள்ளி, அப்ப ஸ்ரீரமணா உதவி பெறும் ஆரம்பப் பள்ளிங்கிற பேர்ல இருந்துச்சு. அங்கே இருந்துதான் எங்க ஊர் புள்ளைங்க படிப்பு தொடங்கும். மேல் நிலைப் படிப்புக்கு,  கீழையூருக்கோ, மன்னார்குடிக்கோ போகணும். என் படிப்பும் அப்படித்தான். மன்னார்குடியிலும் தஞ்சாவூர்லயும் தொடர்ந்து படிச்சேன்.

ஊர்ல எல்லாக் காலத்துலேயும் நல்ல தலை வர்கள் உண்டு. எங்க ஊர் பிரசிடென்டா இருந்த கிருஷ்ணசாமி தேவர், மணியக்காரரா இருந்த துரைராஜ் தேவர் இன்னிக்கும் மறக்க முடியாதவங்க. எவ்வளவு பெரிய பிரச்னையா இருந்தாலும், சமயோசிதமா தீர்த்துவெச்சுடுவாங்க.

என் ஊர்!

அப்போலாம் எங்க ஊரு ஆளுங்களுக்கு பொழுதுபோக்கு, பக்கத்து ஊர் கக்கரையில நடந்த நாடகங் கள். அப்புறம் சினிமா. மன்னார்குடிக்கோ, ஒரத்த நாட்டுக்கோ போவோம்.

ஊரோட கொண்டாட்டம் அய்யனார் கோயில் தேர்த் திருவிழா. விசேஷ நாட்கள்ல அய்யனாருக்கு நெய் பணியார படையல். அதோட ருசியே தனி!

வேற எந்த ஒரு கிராமத்துலயும் இல்லாத சமூக இணக்கத்தை இங்கே பார்க்கலாம். ஒரு தலித்துக்கு காப்புக் கட்டித்தான் கோயில் திருவிழாவே தொடங்கும். எல்லா சாதிக்காரங்களும் வந்த பிறகுதான், கோயில்ல படையலை ஆரம்பிப்பாங்க. ஊர்ல யாருக்காவது தீர்க்கப்படாத பிரச்னைகள் இருந்தா, காணும் பொங் கல் அன்னிக்கு அதைத் தீர்த்துவெச்ச பிறகுதான், மாடு அவிழ்த்துவிடும் நிகழ்ச்சி நடக்கும். எல்லார் பேரையும் எழுதிக் குலுக்கிப் போட்டு எடுக்குறதுல,  யார் பேர் வருதோ, அவங்கதான் முதல்ல மாட்டை அவிழ்த்துவிடணும். அவர் எந்த சாதியா இருந்தாலும் சரி, எவ்வளவு ஏழையா இருந்தாலும் சரி, அவருக்குப் பிறகுதான் மத்த வங்க மாட்டை அவிழ்த்துவிடணும். ஊர் ஒத்துமைக்காக எங்க முன்னோர்கள் ஏற்படுத்திய பழக்கம் இது. இன்னிக்கும் அந்தப் பாரம்பரியம் அப்படியே தொட ருது!''

- கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன், மு.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism