Published:Updated:

டூரிங் டாக்கீஸுக்குப் போவோமா?

டூரிங் டாக்கீஸுக்குப் போவோமா?

டூரிங் டாக்கீஸுக்குப் போவோமா?

டூரிங் டாக்கீஸுக்குப் போவோமா?

Published:Updated:
##~##

திருக்கோகர்ணம். சாயங்காலம் மணி 6.    'ஏ ஒன்’ திரையரங்க உச்சியில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கியில் 'மருதமலை மாமணியே முருகையா’ என மதுரை சோமுவின் குரல் கம்பீரமாக ஒலிக்கிறது. அக்கம் பக்க டீக்கடைகளில், ''ஏயப்பா... பாட்டு போட்டுட்டாங்க. ஒரு டீயைப் போடு!'' என ஆர்டர் கொடுத்துவிட்டு பெஞ்சில் வசதியாக கால் நீட்டி அமர்ந்துகொள்கின்றனர். 'மருதமலை மாமணியை’த் தொடர்ந்து சில சினிமா பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருக்கும்போதே, 'கிர்ர்ர்ரிங்...’ என மணியோசை கேட்கிறது.

 முன்பெல்லாம் முதல் பாட்டின்போதே அலையடித்த கூட்டம், இப்போது மணி அடித்த பின்பும் காணவில்லை. டீ குடித்துக்கொண்டு இருந்த ஒரு சிலரும் மெதுவாய் நகர்ந்து டிக்கெட் கவுன்டருக்குள் நுழைகின்றனர். கவுன்டருக்கு ஓர் ஆள் என தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட், சேர் டிக்கெட் என மூன்று கவுன்டர்களில் டிக்கெட் கொடுத்த காலம் போய்விட்டது. ஒருவர்தான் டிக்கெட் கொடுக்கிறார். மேனே ஜரும் அவரே, டிக்கெட் கொடுப்பவரும் அவரே. ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டூரிங் டாக்கீஸுக்குப் போவோமா?

10.

டூரிங் டாக்கீஸுக்குப் போவோமா?

பெரும்பாலானவர்கள் பெஞ்ச் டிக்கெட் வாங்கி உள்ளே போய் மணல் தரையில் அமர்ந்துவிடுகின்றனர். சரியாக 6.30 மணிக்கு மீண்டும் ஒரு 'கிர்ர்ர்ர்ரிங்...’ மிக மெல்லிதாக வெளிச்சம் உமிழ்ந்து கொண்டு இருந்த ஒரே ஒரு விளக்கும் அணைகிறது. அரங்குக்குள் இருந்த 40 பேருக்காக, படத்தை ஓடவிடுகிறார்கள். 7 மணி வரை டிக்கெட் கொடுக்க, அதுவரை ஒவ்வொருவராக வந்துகொண்டே இருக்கிறார்கள். படம் ஓடத் தொடங்கியதும், ஹாலிவுட் கதாநாயகன் தமிழ் பேசுகிறான். விசில் பறக்கிறது.

டூரிங் டாக்கீஸுக்குப் போவோமா?

ஆபரேட்டர் அறையில் புரொஜெக்டரின் ஒளியைச் சரிசெய்தவாறே பேசத் தொடங்கினார் ஆபரேட்டர் மாரியப்பன்.

''முன்னெல்லாம் சாயங்காலம் 6 மணிக்கே கூட்டம் அலைமோதும். அதுவும் தீவாளி, பொங்கல்னா கேக்கவே வேணாம். கூட்டத்தை அடிச்சு விலக்க போலீஸ்லாம் வருவாக. அந்த மாதிரிப் பண்டிகை நாள்ல ஒரு நாளைக்கு ரெண்டு படம்கூட போடுவோம். 6 மணி ஆட்டம் ஒரு படம், 10 மணி ஆட்டம் இன்னொரு படம். அப்போலாம் டூரிங் டாக்கீஸ்ல வேலை பாக்குறதே பெருமைதேன். டிக்கெட் சலுகையாக் கிடைக்கும்னு ஊர்ல பெரிய மனுஷங்ககூட நம்மகிட்ட சிநேகிதம் புடிப்பாக. ரீல் சுத்த ஒரு பொடியன், அதை எடுத்துவைக்க ஒரு பொடியன்னு ஏகப்பட்ட பசங்க வந்து சும்மாவே வேலை பாப்பாங்க. அந்தக் காலம்லாம் இப்ப மலை ஏறிப்போச்சு.  வெள்ளிக்கிழமை கூடுற கூட்டம் 'ஒளியும் ஒலியும்’ பார்க்க டி.வி. இருக்குற வீடுகள்ல ஒதுங்க ஆரம்பிச்சதுல இருந்தே, எங்களுக்கு சிரம தசை ஆரம்பிச்சிருச்சு. இப்ப வீட்டுக்கு வீடு டி.வி., அமுக்க அமுக்க சேனல். இதுக்கு ஏது மரியாதை?'' என்று பெருமூச்சுவிட்டார்.

''நா கூலி வேலை பாக்குறேன். வீட்ல டி.வி. இருக்கு. ஆனாலும், அதுல போடுற நாடகத்தப் பாக்க சகிக்காம கொட்டாயிக்கு வந்துட்டேன்.  20 வருஷத்துக்கு முன்னால, குடும்பத்தோட சினிமா பாக்க வருவோம். இப்ப என் வூட்டுலயே யாரும் சினிமா பாக்க நினைக்கிறது இல்லை. எல்லாம் இந்தப் பாழாப்போன நாடகத்தைக் கட்டிக்கிட்டு அழுதுங்க. இங்க இருந்து டவுனு கொஞ்ச தூரம்தான். அங்கேயும் கொட்டாயி இருக்கு. ஆனா, நம்ம சவுரியத்துக்கு நீட்டி மடக்கி உக்காந்து சினிமா பாக்க முடியுங்களா? ஏ.சி. போடுறேன்னு தலைக்கு 100 ரூவா புடுங்கிடுவாங்க. படம் பாத்து முடியுற வரைக்கும் வெந்து நொந்து வெளில வர்றதுதான் மிச்சம். இங்கே நாம என்னமும் பண்ணிக்கலாம். அதான் நான் டவுனு கொட்டாயிக்கெல்லாம் போவாம இங்க வந்துடுறது!'' என்கிறார் திரைஅரங்கில் படம் பார்த்துக்கொண்டு இருந்த சேகர்.

டூரிங் டாக்கீஸுக்குப் போவோமா?

''வெறும் அம்பது காசுக்கு பாத்த சினிமா. இன்னிக்கு 10 ரூவாய்க்கி பாக்குறோம். இதுனாச்சும் பரவாயில்ல. தியேட்டருக்குப் போனா 100, 200-னு புடுங்கிறாங்க. என்ன, இப்ப இங்க பாக்குற படத்தை இன்னும் ஒரு மாசம் முன்னாடி அவங்க போடுறாங்க. அவ்வளவுதானே?  பாத்துட்டுப் போறோம். வீட்டுல டி.வி-யைப் பாத்து அழுதுக்கிட்டு இருக்குற பொண்டாட்டிகிட்ட சண்டை போடுறதுக்கு பதிலா, இங்க வந்துட்டா குடும்பத்துக்குள்ளயும் சண்ட சச்சரவு வராது, நமக்கும் சந்தோஷமா போயிடும்!'' என்கிறார் சாமிநாதன்.

தியேட்டர் உரிமையாளர் ரஹமத் அலியைச் சந்தித்தோம். ''புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்ல மொத்தம் 425 தியேட்டர்கள் இருந்துச்சு. அதுல 90 டாக்கீஸும் அடக்கம். இப்ப வெறும் 9 டாக்கீஸ்தான் இருக்கு. புதுக்கோட்டை மாவட்டத்துல இருக்குற ஒரே டாக்கீஸ் இது மட்டும்தான். லைசென்ஸ், கரன்ட் கட்னு ஆயிரம் பிரச்னைகளுக்கு மத்தியிலதான் ஓட்டிக்கிட்டு இருக்கோம். ஆனா, இன்னும் எவ்வளவு நாள் தாக்குப் புடிப்போம்னு தெரியலை!'' என்கிறார் சின்ன சலிப்புடன்!

டாக்கீஸ் வாசலில் படபடத்துக்கொண்டு இருக்கும் போஸ்டர் தட்டியில் படத்தின் பெயரைப் பார்க்கிறோம்...'அழிவின் ஆரம்பம்’!

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: ச.ஸ்ரீராம்,  பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism