Published:Updated:

பூக்களின் பூமியான சாராய பூமி!

முன்னுதாரண கல்லுக்குடியிருப்பு!

##~##

புதுக்கோட்டை மாவட்டம், கும்மங்குடி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கல்லுக்குடியிருப்பு. சுமார் 40 குடியிருப்புகள்கொண்ட சின்னக் கிராமம் இது. கடந்த 2006-ம் ஆண்டு வரை சாராயம்தான் இந்த ஊரின் அடையாளம். ஆனால், இன்றோ புதுக்கோட்டை மாவட்டத்திலேயே தோட்ட வளர்ப்புக்கான எல்லாசெடி களும் கிடைக்கும் ஊராக மாறி இருக்கிறது. இந்த அழகிய மாற்றத்துக்குக் காரணம் பெண் கள்... குறிப்பாக செவ்வந்தி மகளிர்க் குழுவினர்!

 அக்குழுவைச் சேர்ந்த ராக்கம்மாள், ''இந்த ஊரப் பொறுத்தவரைக்கும் வெளியூரு, சொந்தபந்தம் எல்லாம் கம்மிதான். ஏன்னா, ஊருக்கு உள்ளேயேதான் கொள்ளுன குடுப்புன வெச்சிக் குவாக. நான் இந்த ஊருலதான் பொறந்தேன். இந்த ஊருலயே வாக்கப்பட்டேன். யாருமே படிக்காததால, சாராயத் தொழில் இந்த ஊருல நெலச்சுடுச்சி.

பூக்களின் பூமியான சாராய பூமி!

இப்ப இருக்குற புள்ளையளப் படிக்க வெச்சிக்கிட்டு இருக்கோம். இன்னிக்கு எங்க ஊருக்குப் பல மாவட்டங்கள்ல இருந்தும் வந்து செடி வாங்கிட்டுப் போறாக. ஏன்னா ஆயிரம் வகையான அழகுச் செடிகள் வெச்சிருக்கோம் நாங்க. செம்பருத்தில மட்டும் நூத்துக்கும் மேற்பட்ட வகை இருக்கு. எப்படியோ கெடந்த ஊர இந்த அளவுக்கு கொண்டுவந்த பெருமை எங்க காமாட்சி அண்ணியைத்தான் சேரும்!'' என்றார்.

பூக்களின் பூமியான சாராய பூமி!

குழுவின் தலைவி காமாட்சியைச் சந்தித் தோம். ''இப்போ சொல்லிக்கக்கூட வெக்கமா இருக்கு. சாராயம் எரிக்கிறததான் குலத் தொழிலா செஞ்சிக்கிட்டு இருந்தோம். அதோட எங்க ஊரு ஆம்பளைகளும் அதைக் குடிச்சிட்டு படாதபாடு படுத்துவாங்க!

அப்பத்தேன் மகளிர் குழுவப்பத்தி தெரிஞ்சிது. நாமளும் குழு தொடங்குனா என்னன்னு தோணுச்சி. அதுக்கான வேலையில எறங்கி னோம். உடனே எல்லா ஊட்டுப் பொண்டு புள்ளயளையும் அழைச்சி நெலமையை வெளக்கினோம். அவுகளும் சந்தோஷமா சேர்ந்து வந்தாங்க!

பொறவென்ன? குழுவ ஆரம்பிச்சோம். அப்பவே எங்க ஊரு ஆம்பளையெல்லாம் பயங்கரமா எதுத்தாக. ஆனாலும், முன்னெடுத்த காலைப் பின்னவைக்காம நாங்கெள்லாம் உறுதியா இருந்து இன்னிக்கு கல்லுக் குடியிருப்புங்கிற ஊரை பல மாவட்டங்களுக்குத் தெரியவெச்சிருக்கோம்.

ஆரம்பத்துல வெறும் அழகு செடிங்களை மட்டும், கொஞ்சமா உற்பத்தி செஞ்சோம். அப்புறம் கேரளா போய் வெலை ஒசந்த செடிகளை வாங்கியாந்து கூடு தலா உற்பத்தி செஞ்சி வித்தோம். இப்ப மூலிகைச்செடி களும் எங்ககிட்ட இருக்கு. ஒரே எடத்துல வளக்க எடம் பத்தாம அவுகவுக வீட்டுலயும் நர்சரி தோட்டம்போட்டு இருக்கோம். சீக்கிரமே ஊரையே நந்தவனம் ஆக்கிரு வோம்!'' - உற்சாகமாகத் தொடங்கி அதீத உற்சாகத்தில் முடிக்கிறார் காமாட்சி!

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: பா.காளிமுத்து

பூக்களின் பூமியான சாராய பூமி!
அடுத்த கட்டுரைக்கு