Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

''ஆம்பாலப்பட்டு களவாணி நான்!''

##~##

''பச்சைப் பசேல்னு வயக்காடு. அங்கனைக்கு அங்கன குளம். அது நெறையத் தாமரை... என் ஊரோட பேரை உச்சரிச்சாலே, என் ஞாபகத்துல இதுதான் வரும்!'' - ஆம்பலாப்பட்டைப் பற்றி பசுமையான நினைவுகளோடு தொடங்கினார் 'களவாணி’ பட இயக்குநர் சற்குணம்.

 ''தஞ்சாவூர் மாவட்டக் கிராமங்களுக்குன்னு பொதுவா ஓர் அடையாளம் உண்டு. அதேபோல, ஒவ் வொரு கிராமத்துக்கும் தனித்தனி அடையாளமும் உண்டு. ஆம்பலாப்பட்டும் அப்படி ஒண்ணு!

என் ஊர்!

மொத்தம் 18 தெருக்கள்தான் ஆம்பலாப்பட்டு. பெரிய கிராமம். வடக்கு, தெற்குனு ரெண்டு ஊராட்சி நிர்வாகம். எங்களோட சந்தோஷம், துக்கம், கொண் டாட்டம் எல்லாமே இந்த 18 தெருவுக்கும் சேர்ந்ததுதான். நீங்க 'களவாணி’ படம் பார்த்து இருப்பீங்க. அதுல வர்ற கிராமம், மனிதர்கள், அவங்களோட வாழ்க்கை, சந்தோஷம் இதெல்லாம் என் ஊர்ல இருந்து நான் களவாண்டதுதான்.

என் ஊர்!

எங்க ஊர் வாழ்க்கையோட முக்கியமான அங்கம் மாரியம்மன் கோயில். பொதுவுல ஊர் கூடுற இடமும் அதுதான். எங்க ஊர் மாரியம்மன் ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம். இது தொடர்பா ஒரு கதை உண்டு. கரம்பயம் மாரியம்மன் கோயில் இந்தப் பக்கம் ரொம்பப் பிரசித்தம். ஒரு சமயம் கோயில் விசேஷத்தப்ப ஏதோ ஒரு சின்ன சலசலப்பு உண்டாகி, பெரிய பிரச்னை ஆகிருச்சு. அப்ப அங்கே இருந்து வந்த எங்க ஊர்ப் பெரியம்மா ஒண்ணு, கரம்பயம் மாரி யம்மன் கோயில் வேப்ப மரக் கிளையை உடைச்சிக் கிட்டு வந்து, 'சக்தி உள்ள அம்மனா இருந்தா பொழைச்சுக்க’னு சொல்லி எங்க ஊர்ல நட்டு இருக்காங்க. அந்த வேப்பங்கிளை மரமாத் தழைச்ச இடத்துலதான் இன்றைக்கு மாரியம் மன் கோயில் கட்டி, நாங்க வழிபட்டுக்கிட்டு இருக்கோம். அவ்வளவு சக்தி எங்க அம்மனுக்கு!

என் ஊர்!

எங்க ஊரோட கொண்டாட்டம், அம்மன் கோயில் திருவிழா. மொத்தம் 10 நாள் விசேஷம். ஊர்ல உள்ள அத்தனை தெருக்காரங்களுக்கும் தனித்தனி மண்டகப்படி. பெரிய தெருக்காரர்கள் தனித்தனியாவும், சின்னத் தெருக்கள் ரெண்டு தெருக்களாகவும் சேர்ந்துக்குவோம். 'உன் மண்டகப்படி விசேஷமா, என் மண்டகப்படி விசேஷமா?’னு போட்டா போட்டியா, கோலா கலமா இருக்கும். திருவிழாவோட முக்கியமான அம்சம், ராத்திரி வர்ற போட்டிக் கரகாட்டம். எங்க பக்கம் எல்லாம் சாதா கரகாட்டம்னாலே ரகளை பறக்கும். போட்டிக் கரகாட்டம்னா... சுத்துப்பட்டு கிராமம் மொத்தமும் அங்கனதான் குவியும்!

எங்க வாழ்க்கையோட பிரிக்க முடியாத இன்னோர் அம்சம்... கபடி. ஊர்ல ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கபடி கோஷ்டி உண்டு. ஆனா, வெளியூர் கோஷ்டியோட போட்டின்னா... அவ்வளவு பேரும் ஒண்ணா இணைஞ்சு ஒரே கோஷ்டியாப் போவோம். பொதுவா கபடி விளையாட வெளியூர்ப் போனா, பட்டினியாத்தான் திரும்பணும்னு சொல்வாங்க. எங்க ஊருக்கு அது பொருந்தாது. எங்க ஊர்ல கபடிப் போட்டி நடக்கிறப்ப, விடிய விடியப் பொது சமையல், பொதுப் பந்தி நடக்கும். யார் வேணும்னாலும் சாப்பிடலாம்.

மன்னார்குடி, பட்டுக்கோட்டைனு ரெண்டு பெரிய ஊர் பக்கத் துல இருந்தாலும், எங்களோட சந்தை மதுக்கூர்தான். சின்ன வயசுல, சந்தை நாளுன்னா... வீட்ல சாயங்காலம் தின்ன என்ன இருக்கும்கிற நெனைப்புதான் இருக்கும். மதுக்கூர் சந்தை வெள்ளை முறுக்குக்குப் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு!

எங்க ஊர் மக்களோட தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு, நாடகம். இன்னைக்கும் அலுக்காம நாடகம் பாக்குறோம். எங்க ஊர் சுப்பையன் வாத்தியார் நாடகக் குழுவுக்கு, ஊர் எல்லைகளைத் தாண்டியும் பெரிய வரவேற்பு உண்டு. அதேபோல, பக்கத்துல உள்ள ஆலந்தூர் 'வெங்கடேஸ்வரா டூரிங் டாக்கீஸ்’ இன்னைக்கும் எங்க விருப்பமான பொழுதுபோக்கு இடம். ஊர்ல இளவட்டங்க கூடுற இடம் மாரியம்மன் கோயில்கிட்ட இருக்கும் படிப்பகம்.

கம்யூனிஸ சித்தாந்தத்துல வலுவா ஊறின ஊர் இது. தமிழ்நாட்டுல ஜமீன்தாரி முறை ஒழிப்பில் முக்கியப் பங்கெடுத்துக்கிட்டது எங்க ஊர். அதனால், சாதிப் பாகுபாடு ஒரு நாளும் இருந்தது இல்ல. மாமா, மச்சான், மாப்ளே, பங்காளினு ஒண்ணா உறவாடுற ஊர். ஊர்ல கம்யூனிஸ இயக்கத்தில் தீவிரமாச் செயல்பட்ட பல பெரிய தலைகளுக்கு, எங்க கிராமத்தோட வளர்ச்சியில் முக்கியமான பங்கு உண்டு. 'செத்தாலும் பரவாயில்லை; வாட்டாக்குடி இரணியனைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்’னு சித்ரவதையை எதிர்கொண்ட தியாகி ஆறுமுகம் எங்க ஊர்க்காரர்தான்!

ஆம்பலாப்பட்டுல இப்ப சிவனுக்கு ஒரு கோயில் கட்டிக்கிட்டு இருக்கோம். கட்டி முடிச்சா, தஞ்சாவூர் மாவட் டத்துலயே பெரிய ராஜ கோபுரம் உள்ள கோயில் இதுவாத்தான் இருக்கும். எங்க மக்கள் மனசோட உயரத்தை அந்தக் கோபுரம் சொல்லும்!''

- ச.ஸ்ரீராம், படங்கள்:பா.காளிமுத்து

என் ஊர்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு