Election bannerElection banner
Published:Updated:

ஹை... கோல்டன் ஃபிஷ்!

திருச்சி பொருட்காட்சி திருவிழா!

##~##

கோடை காலம் வந்துவிட்டால், திருச்சி மக்களுக்குப் பொருட்காட்சிதான் பொழுதுபோக்கு. இந்த வருடம் பொன்மலை ஜி-கார்னரில், இந்திய நாடாளுமன்ற முகப்போடு திருச்சிவாசிகளை வரவேற்கிறது பொருட்காட்சி!

துள்ளி விளையாடும் வண்ண வண்ண மீன்கள் வரவேற்கின்றன. தொட்டிக்குள் சுற்றிச் சுற்றி வரும் விதவிதமான மீன்களைப் பார்க்க அவ்வளவு கூட்டம். மீன்களை வேடிக்கை பார்ப்பவர்கள், செல்போன் கேமராவால் படம் எடுத்துக்கொள்கிறார்கள். இளம்பெண் ஒருவர் மீன்களைப் போட்டோ எடுப்பதை,  ''அட... ஒரு மானே மீனை போட்டோ எடுக்கிறதே!'' என்று யாரோ கவிதை(?)யாக வர்ணிக்க, திரும்பி முறைத்தார் அந்தப் பெண்!  

ஹை... கோல்டன் ஃபிஷ்!

ஒரு தொட்டி யில் மீனின் விலை 18 ஆயிரம் என்று எழுதப்பட்டு இருக்க... ''அம்மாடியோவ். அவ்ளோ காசுக்கு மீன் வாங்கினா... ஒரு ஊருக்கே விருந்து போடலாமே?'' என்று ஒரு குடும்பத் தலைவி அங்கலாய்க்க... ''உக்கும். உன் சாப்பாட்டுப் புத்தி எங்கே போனாலும் விடமாட்டேங்குதே'' என்று கிண்டல் அடித்தார் அவரது கணவர். மீன் காட்சியகத்தைவிட்டு வெளியே வந்தால், ஃபேன்ஸி ஸ்டோர்ஸ் கடைகள், துணிக் கடைகள், சைனா பஜார்!

'எந்தப் பொருள் எடுத்தாலும் ஏழு ரூபாய்!’ என்கிறார்கள். அடுத்த வரிசை... பொம்மைக் கடைகள். ஃபேன்ஸி அயிட்டங்கள் விற்கும் கடைகளில்தான் பெண்கள் கூட்டம். ஒரு மணி நேரம் அலசோ அலசோ என்று அலசிவிட்டு ஒரு ஹேர்பின்னை மட்டும் வாங்கினாலும், கடைக்காரர் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்வதே  இல்லை. கூட வரும் கணவன்மார்கள்தான் கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். (பட்... மனசுக்குள்ளேதான்!)

ஹை... கோல்டன் ஃபிஷ்!

கடைகளில் அம்மாக்கள் நேரத்தைக் கடத்த...  தூரத்தில் தெரியும் ரங்கராட்டினத்தை ஏக்க மாகப் பார்க்கின்றன குழந்தைகள். ''இவங்க சாமான் வாங்கிட்டு வர்றதுக்குள்ள பொருட் காட்சியை சாத்திட்டுப் போய்டுவாங்கப்பா'' எனத் தனது தங்கையிடம் அலுத்துக்கொள்கிறான் வாண்டு ஒருவன்.

ஆசை தீர பொருட்களை அள்ளிக்கொண்டு ஷாப்பிங்கை முடித்த திருப்தியுடன், ரங்கராட்டினம் மற்றும் உணவகங்கள் இருக்கும் ஏரியாவை நோக்கி நகர்கிறார்கள். பொருட்காட்சி ஆரம்பித்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் இங்கு மட்டும் விதிவிலக்கா என்ன? பெரிசுகள் உணவகங்களில் ஐக்கியமாகிவிட... குழந்தைகளின் கொண்டாட்டம் விளையாடுவதில்தானே? குட்டீஸ்கள் ஆர்வத்துடன் ஓட... ''ஒரு ஆளுக்கு ரெண்டுல மட்டும் விளையாட அனுமதி. எது எதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க'' என்று 'டீலா நோ டீலா’ போடுகிறார் ஸ்ட்ரிக்ட் அப்பா.

ஹை... கோல்டன் ஃபிஷ்!

சறுக்கி விளையாடும் விளையாட்டுக்குப் பணம் கொடுத்து உள்ளே ஒரு சுட்டியை அனுப்பிவைக்க... மேலே ஏற முடியாமல் தவித்தது அந்தச் சுட்டி. அந்தக் குழந்தைக்குப் பதில் வேறு குழந்தையை அனுப்பலாமா என்று தாய் கேட்க... மறுப்பே பதிலாகக் கிடைக்கிறது. சண்டை போட்டு பணத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டு, வெற்றிப் புன்னகையுடன் இடத்தை விட்டு நகர்கிறார் தாய்.

ஒரு பட்டாளத்தோடு வந்து இருந்த உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த உலகநம்பி, ''ஊர்ல இருந்து அக்கா குழந்தைகள் வந்திருந்தாங்க. எல்லோரும் எங்காவது வெளியில போகலாம்னு திட்டம் போட்டோம். முக்கொம்பு, கல்லணைனு ஆளாளுக்கு ஒரு இடம் சொல்லி, கடைசியில பொருட்காட்சினு முடிவு செஞ்சோம்.  எல்லாருக்கும் ஃபேன்சி அயிட்டங்கள், என் பொண்ணுக்குப் பொம்மை, ஆட்டோ செலவுக்குன்னு கிட்டத்தட்ட 3 ஆயிரம் ரூபா செலவாயிடுச்சு. இருந்தாலும், எல்லாருக்கும் இங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்!'' என்று சொல்லும்போதே, ''மாமா... எனக்கு ஜிகிர்தண்டா வேணும்'' என்று குரல் கேட்க... பொறுப்புள்ள அந்தத் தாய்மாமன் ஜிகிர்தண்டாவை நோக்கி நகர்கிறார்!

- ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு