Election bannerElection banner
Published:Updated:

எல்லாக் கரை வேட்டியும் ஒண்ணாத்தான் காயுது!

மாந்தாங்குடி அக்னி ஆறு கவரேஜ்

##~##

புதுக்கோட்டை மாவட்டம், மாந்தாங்குடி அக்னி ஆற்றுப் பாலத்தில் இருந்து பார்க்கும்போதே, கண்களைப் பறிக்கின்றன வெள்ளைத் துணித் தோரணங்கள். ஒரு கூட்டமே அழுக்குத் துணிகளை அடித்து வெளுத்துக்கொண்டு இருந்தார்கள்.

 அத்தனை பேருமே பெருங்களூர் கிராமத்துக்காரர்கள்.

''நாங்க தெனமும் இங்கனதான் வந்து, துணி தொவைக்கிறோம்'' என்கிறார்  பெருமாள்.

சில பல வருஷங்களாக வெளுப்பவருக்குள் அத்தனை நினைவலைகள். ''அப்பல்லாம் இப்டியா? ஊருக்குள்ள இருக்குற அத்தனை வீட்டுலயும் அழுக்குத் துணி எடுத்து தொவைச்சிக் குடுப்பம். வருஷக் கடைசில வீட்டுக்கு ஒரு மூட்டை நெல்லு குடுப்பாக. அந்த நெல்லு மூட்டைகளைவெச்சே வருஷத்தை ஓட்டிருவோம்.

எல்லாக் கரை வேட்டியும் ஒண்ணாத்தான் காயுது!

ஊருக்குள்ள யார் வீட்லயாவது பொண்ணுக ஆளாயிட்டா, தலைக்குத் தண்ணிவுட்டதும், நாங்க மாத்துத் துணி குடுத்துத்தான் கட்டுறது ஒரு சம்பிரதாயம். அதே மாதிரி எந்த வீட்ல தேவைன்னாலும் அ­ங்க பந்தலுக்கு அலங்கார வேட்டி கட்டுறது, சாப்புடறதுக்கு உட்கார மாத்துத் துணி விரிக்கிறதுன்னு எங்க பொழப்பு ஓஹோன்னு இருந்துச்சி.

வேலை முடிஞ்சதும், அரிசி, நெல்லு, தேங்கா, வெத்தலப் பாக்குவெச்சி, பணம் குடுப்பாக. சந்தோஷமா வாங்கிட்டுப் போவோம். அப்பல்லாம் வெளுக்குற செலவும் கொஞ்சம் கொறச்சதேன். அழுக்குத் துணிய எடுத்தாந்த ஒடனே, சேங்கொட்டைய வெச்சிக் குறி போட்டுருவம்.

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குறிவெச்சிருப்போம். குறியை மாத்திப் போட்டம்னா, பெரிய பிரச்னை ஆயிரும். குறி போட்ட ஒடனே, வெறும் உவர் மண்ணுல துணிய ஊறப்போட்டு அப்படியே வெள்ளாவில வெச்சி அவிச்சி, மறுநாக் காலையில ஆத்துக்கு அள்ளியாந்து அடிச்சித் தொவச்சிருவம். இங்கனயே காயப்போட்டு அதுகள்ள காறை ஏதாச்சிம் இருந்தா, அதுக்கு மட்டும் கொஞ்சம் மருந்து போட்டுக் காறைய எடுத்துட்டு இன்னொருக்க தொவச்சிக் காயவெச்சித் தேச்சிக் குடுத்துருவம்.

எல்லாக் கரை வேட்டியும் ஒண்ணாத்தான் காயுது!

ஒவ்வொரு வீட்டுக் குறியையும் மனசுல மறக்காம வெச்சிருந்து, அந்தந்த வீட்டுல கொண்டுபோய்த் துணியக் குடுக்கணும். அழுக்குத் துணியையும் நாங்க சொமக்க வேண்டிய செரமம் இல்ல. வீட்டுக்கு நாலு கழுதைக கெடக்கும். அதுக முதுவுல ஏத்திவுட்டம்னா, ஆத்துக்குக் கொண்டுவந்துரும்.

இப்பல்லாம் கழுதயப் பாக்குறதே அபூர்வமா இருக்கு. ஏன்னா, அதுகளக் கட்டி மேய்க்கிறதே பெரும்பாடு. தெரியாத ஆளுக முன்னால போனா கடிக்கும்; பின்னால போனா ஒதைக்கும். பொம்பளப் புள்ளகளால, அதுகளப் புடிக்க முடியாது. அதனாலயே, எல்லாரும் கழுதைகள வித்துட்டாக. இப்ப அங்ஙன, இங்ஙன ஒண்ணு ரெண்டு கழுதைகதேன் கெடக்கு. இப்ப ஏதேதோ சாமான்களைக் கடையில வாங்கியாந்து அவங்கவங்க வீட்டுக்குள்ளயே வெளுத்துக்குறாக. தொவைக்கிற மெஷினு வந்தப்புறம், எங்க தொழில் கெட்டுப்போச்சு. ஏதோ வேற தொழிலு தெரியாததால... பொழப்ப ஓட்டிக்கிட்டிருக்கம்'' என்றார் பெருமாள் ஆதங்கத்துடன்.

சலவைத் தொழிலாளி லெஷ்மணனுக்கோ இன்னும் ஏக்கம்...  ''முன்னாடி எல்லாம், வீட்டுல இருக்குற ஆணு பொண்ணு எல்லாரும் தொறைக்கு வந்துருவாக. ஆனா, இப்ப கட்டிக்கிட்டு வர்ற பொண்ணுக டி.வி. பாக்கவும் வீட்டு வேலை பாக்கவும்தான் ஆசப்படுதுக. அதனால, ஆம்பளயதான் இப்ப தொறைக்கு வர்றம். தொணைக்கி வயசான பொம்பளய வர்றாக. ஊருக்குள்ள அழுக்குத் துணி எடுக்குறதும் கொறஞ்சிப்போச்சி.

புதுக்கோட்டை டவுனுக்குப் போய் லாண்டரி கடையில துணி எடுத்தாந்து வெளுத்துக் குடுக்குறோம். ஒரு உருப்படிக்கு மூணு ரூவா கெடைக்கிது. அதுலயும், சோடா உப்பு, கரி, நீலம்னு எல்லாம் போவ, ஏதோ கொஞ்சந்தான் மிஞ்சும். அத வெச்சித்தேன் காலத்த ஓட்ட வேண்டி இருக்கு.

எல்லாக் கரை வேட்டியும் ஒண்ணாத்தான் காயுது!

காத்தால கௌம்பி ஆத்துக்கு வந்தா, தொவச்சி முடிக்கவே உச்சி ஆயிரும். அப்புறம் கொண்டுவந்த கஞ்சியக் குடிச்சிட்டு, காயவெச்சத் துணிய எடுத்துக்கிட்டுக் கௌம்ப மூணு மணி ஆயிரும். முன்ன மாதிரி தொவச்சமா, காயவெச்சமா, ஏதோ தேச்சமானு, இப்பத் துணியக் குடுக்க முடியல.

கட்சிக்காரவ எல்லாம் கரை வேட்டியக் கட்டிக்கிட்டு வெளில போயி, 'ஏங் கட்சி பெரிசு, ஒங் கட்சி பெரிசு’ன்னு அடிச்சிக்கிறாக. ஆனா, இங்க எல்லாக் கட்சிக் கரை வேட்டியும் ஒண்ணாத்தான் தொவச்சிக் காயப் போட்டுருக்கோம்'' என்றார். போகிற போக்கில் அவர் சொல்லிவிட்டுப் போன அந்த ஒரு வரி... ரொம்பவே யோசிக்க வைத்தது!

- வீ.மாணிக்கவாசகம், ச.ஸ்ரீராம்,  படங்கள்: பா.காளிமுத்து

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு