Published:Updated:

என் ஊர்!

குதிரைத் திருவிழாவும் சுக்குக் காபியும்!

##~##

''ரொம்பச் சின்ன ஊரு எங்க ஊரு. ஆனா, ஊர் பேருக்கு ஏத்தாப்புல ஒரு பெரிய சுனை, பெரிய குளம், பக்கத்துலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க பல்லவர் கால ஓவியங்கள், கிறிஸ்துவர்களும் இந்துக்களும் ஒண்ணுகூடி நடத்துற திருவிழானு எங்க ஊருக்குன்னு சிறப்பான தனி அடையாளங்கள் உண்டு.''-பெருஞ்சுனையின் பெருமையைப் பேசத் தொடங்கினார் சகாயம். தன்னுடைய நேர்மையான செயல்பாடுகளால், தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த  மதுரை மாவட்ட ஆட்சியர்!

என் ஊர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 ''புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை போற மெயின் ரோட்டுல இருக்குற ஒரு குட்டி கிராமம்தான் பெருஞ்சுனை. ஒரு காலத்துல ஒரு ராஜா இந்த ஊரைச் சேர்ந்த ஒரு ஆசாரிக்கு, இந்த ஊரையே இனாமா எழுதிக் குடுத்துருக்காரு. அவரு பேருலதான் இந்த ஊரே இருந்திருக்கு. ஒரு காலத்துக்கு அப்புறம், ஊரு மொத்தத்தையும் ஒரு செட்டியாரை வெச்சி நிர்வாகம் செஞ்சி இருக்காரு அந்த ஆசாரி. ஒரு கட்டத்துக்கு மேல ஊரு மொத்தத்துக்கும் வரி கட்ட முடியாமப் போக, ஊருல இருந்த எல்லாருக்கும் நிலங்களைப் பிரிச்சுக் குடுத்துருக்காரு. அப்புறம், வந்த ஜமீன் முறை ஒழிப்புச் சட்டத்தால் இந்த ஊரைச் சேர்ந்த எல்லாருக்கும் அவங்கவங்க அனுபவிச்ச இடம் சொந்தமாயிருச்சி.

எங்க ஊருக்கு இந்தப் பெயர் வரக் காரணமே ஊருக்கு வெளியில இருக்குற பெரிய சுனைதான். அந்தக் காலத்தில் எங்கே தண்ணி வத்திப் போனாலும் அந்தச் சுனையில மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கும். அதில்தான் குளிக்கிறது, துவைக்கிறது எல்லாமே. அந்தச் சுனையோட கரையில் ஒரு சிவன் கோயில் இருக்கு. அதுவும் பழமை வாய்ந்த கோயில். சுனையில குளிச்சிட்டு எல்லாருமே அந்தச் சாமிய கும்பிட்டுட்டுதான் போவாங்க. கோயிலுக்கு முன்னால், பெரிய குளம். எந்த ஊருலயும் இவ்வளவு பெரிய குளத்தைப் பார்க்க முடியாது. நான் சின்னப் பிள்ளையா இருக்கப்ப அந்தக் குளத்துக்குக் குளிக்கப் போனா, வீட்டுல இருந்து யாராவது வந்துதான் அழைச்சிக்கிட்டுப் போகணும். அவ்வளவு நேரம் பசங்களோட சேர்ந்து தண்ணியில விளையாடிட்டு இருப்போம்.

எங்க ஊருல அஞ்சாம் கிளாஸ் வரைக்கும்தான் இருந்துச்சு. ஆறாவது படிக்க நாங்க எல்லாம் இங்க இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற எல்லைப்பட்டிங்குற ஊருக்குப் போகணும். அதுவும் நடந்துதான் போவோம். ரொம்ப தூரம் நடக்கணும்கிறதால, நாலஞ்சு பேரு ஒண்ணு சேர்ந்து எல்லாரோட புத்தகப் பையையும் ஒரு கம்புல கோத்து மாத்தி மாத்தி தூக்கிட்டுப் போவோம்.

என் ஊர்!

அப்ப நாராயணசாமினு ஒரு சார் இருந்தார். என்னை எப்பப் பார்த்துப் பேசினாலும், 'நீ கலெக்டராயிடுப்பா’னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. ஏன்னா, நான் அந்த அளவுக்கு நல்லாப் படிப்பேன். படிப்பு முடிஞ்சதும் என்னோட ஆசிரியர் சொன்ன மாதிரியே நானும் கலெக்டர் ஆயிட்டேன். நேரா எங்க நாராயணசாமி சாரைப் பார்த்து, 'அய்யா நீங்க சொன்ன மாதிரி நான் கலெக்டர் ஆயிட்டேன்’னு சொல்லி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்தேன்.

எங்க ஊரு, மெயின் ரோட்டுல இருந்தாலும் அப்ப ஒரே ஒரு பெட்டிக் கடை இருக்கும். அந்தக் கடையில்தான் எல்லாப் பொருட்களும் வாங்கணும். அந்தக் கடையை வெச்சிருந்தவரு பேரு இந்த ஊருல பெரும்பாலானவங்களுக்குத் தெரியாது. பொட்டிக் கடைக்காரர்னுதான் எல்லாரும் கூப்பிடுவாங்க.

என் ஊர்!

எங்க ஊருல கிறிஸ்துவர்களும் இந்துக்களும் இருக்காங்க. இங்க ஒரு மாதா கோயிலும் ஒரு அய்யனார் கோயிலும் ஒரு பிடாரியம்மன் கோயிலும் இருக்கு. இந்த மூணு கோயிலுக்கும் சாதி மதம் பார்க்காம எல்லா வீட்டுலேயும் வரி வசூலிச்சுதான் திருவிழா நடத்துவோம். மாதா கோயிலுக்கு எல்லா வீட்ல இருந்தும் வந்து மெழுகுவத்தி ஏத்தி, சாமி கும்பிடுவாங்க. அதே மாதிரி, எங்க ஊரு அய்யனார் கோயில்ல குதிரைத் திருவிழா ரொம்பப் பிரபலம். பக்கத்துல இருக்குற திருவேங்கைவாசல்ல மண் குதிரை செய்வாங்க. அந்த ஊருக்குத் தாரை, தப்பட்டையோட போய் வீட்டுக்கு ரெண்டு குதிரையைத் தூக்கி வந்து அய்யனார் கோயிலுக்குக் காணிக்கை செலுத்துவோம். அதே மாதிரி, எங்க ஊரு பிடாரி அம்மன் கோயில் திருவிழா. நாலு நாள் நடக்குற அந்தத் திருவிழாவுல நடக்கும் நாடகம் ரொம்பப் பிரமாதமா இருக்கும். 'வள்ளி திருமணம்’, 'அரிச்சந்திரா மயான காண்டம்’, 'சத்தியவான் சாவித்திரி’னு நாளுக்கு ஒரு நாடகம் போடு வாங்க. நான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப எங்க அப்பா என்னை மல்லுக்கட்டி அந்தக் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போவாங்க. விடிய விடிய விழிச்சிருக்க வெச்சி நாடகம் முடிஞ்சதும் கூட்டி வருவாங்க. ஒவ்வொரு நாளும் கூட்டம் அலை மோதும். திருவிழா நாட்கள்ல அங்க சுக்குக் காபி விப்பாங்க. தூக்கம் வரும்போதெல்லாம் அதுல ஒண்ணு வாங்கிச் சாப்பிட்டா தூக்கம் எல்லாம் கலைஞ்சிடும். இன்னைக்கும் கிராமம் நெனைப்புல வந்தா, நாடகம் நெனைப்புக்கு வந்துடும். சுக்குக் காபி நெனைப்புக்கு வந்துடும். ஊரை நெனைச்சுக் கிட்டுதான் காலம் ஓடுது!''

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: பா.காளிமுத்து