Published:Updated:

பழையாறு மீனோய்ய்ய்ய்...

பழையாறு மீனோய்ய்ய்ய்...

பழையாறு மீனோய்ய்ய்ய்...

பழையாறு மீனோய்ய்ய்ய்...

Published:Updated:
##~##

திகாலை 5 மணிக்கே களை கட்டத் தொடங்கு கிறது பழையாறு. மினி வேன்கள், டவுன் பஸ்கள் என்று கிடைக்கும் வாகனங்களில் வந்து இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள். அதிகாலையிலேயே திறக்கப்பட்ட டீக்கடைகளும் இட்லிக் கடைகளும் கலகலக்கின்றன. ஐஸ் கட்டி ஏற்றி வர, மீன்கள் ஏற்றிச் செல்ல, விருந்துக்கு வாங்கிச் செல்ல வந்திருக்கும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்க... துறைமுகம் ஹவுஸ்ஃபுல்!

 காவிரியில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும், அதை அப்படியே வங்கக் கடலில் கொண்டுபோய்ச் சேர்க்கும் கொள்ளிடம் ஆறு, கடலில் கலக்கும் முகத்துவாரம்தான் இந்தப் பழையாறு. நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இது மீன்பிடித் துறைமுகமாக ஆனது. ''கொள்ளிடம் ஆற்று வெள்ளம் பாய்வதால், கடல் இங்கு நல்ல ஆழமாக இருக்கும். 40 கடல் மைல்கூட போய் மீன் பிடித்து வரலாம். நல்ல பாடு கிடைக்கும். இலங்கை எல்லைக்குப் போக வேண்டிய அவசியம் எதுவும் எங்களுக்கு வந்ததே இல்லை'' என்கிறார் மீனவர் கலைமணி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழையாறு மீனோய்ய்ய்ய்...

கிட்டத்தட்ட 260 விசைப் படகுகளும் 300-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளும் தினமும் கடலுக்குப் போய் மீன் பிடித்து வருகின்றன. முதல் நாள் மதியம் கடலுக்குப் போய் மறுநாள் காலை 6 மணிக்குக் கரை திரும்பும் அந்த விசைப் படகுகளுக்காகக் கரையில் காத்து இருக்கிறார்கள் மீனவர்களின் மனைவிகள். கூடை கூடையாக அவர்கள் மீன்களை அள்ளித் தர... அதை வேலை ஆட்கள் வாங்கி வந்து தளத்தில் கிடத்துகிறார்கள்.  படகு உரிமையாளர்களின் மனைவியர் முன்னிலையில் ஏலம் நடக்கிறது. ஒரு கூடை மீனை 'முப்பது, முப்பதேய்’ என்று ஏலத்தைத் தொடங்கிவைக்கிறார் தமிழ்ச்செல்வி.  சில்லறை விற்பனைக்காரர்களால் 50, 100 என்று உயர்ந்து கடைசியில் 500 ரூபாய் வரை ஏலம் போகிறது. ஏலம் எடுத்த பின் அந்த மீன்களில் இருந்து கொஞ்சத்தை ஏலக் கூலியாக எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி பல ஏலங்கள் முடிந்த பின் கிடைத்தவற்றைத் தனியாக ஏலம்விட்டு, 400, 500 என சம்பாதிக்கிறார்கள்.

பெரிய மீன்கள், இறால், நண்டு ஆகியவை தனியாக இனம் பிரிக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. அண்டை மாநிலங்களுக்கு அவை கொண்டுசெல்லப்படுகின்றன. அதற்கு அடுத்த ரகங்கள்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகளால் வாங்கப்படுகின்றன.

பழையாறு மீனோய்ய்ய்ய்...

''1,000 ரூபாய்க்கு வாங்கிட்டுப் போய் தெருத் தெருவா வித்தா, 200 ரூபாய் லாபம் கிடைக்கும். சில நாட்கள் எவ்வளவு அலைஞ்சாலும், அசலை எடுக்க முடியாது. இருந்தாலும், மறுநாள் கிடைக்கும் லாபத்தை நினைச்சு மனசைத் தேத்திக்குவோம்'' என்கிறார் சந்திரா. இவரைப்போல் 300-க்கும் மேற்பட்டவர்கள் கூடையில் மீன் வாங்கிப் போய் விற்கிறார்கள். சைக்கிளில் வியாபாரம் செய்கிறவர்கள் 100 பேருக்கும் மேல்.

வியாபாரிகள் வாங்காத பொடி மீன்களைச் 'சங்காயம்’ என்கிறார்கள். இந்தச் சங்காயத்தை வாங்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். இதை வாங்கிக் காயவைத்து கோழித் தீவனம் தயாரிப்பவர்களுக்கு லோடு ஏற்றிவிடுகிறார்கள். தரமான பெரிய இறால்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சில படகுகளில் பேசி வைத்துக்கொண்டு, மொத்த மீன்களையும் தாங்களே வாங்கி மற்றவர்களுக்கு மறு விற்பனை செய்கிறார்கள் சில பெண்கள். படகுக்காரர்கள் லாபமோ, நஷ்டமோ அவர்களிடம்தான் தங்கள் மீன்களைக் கொடுக்கும் நிலை.

பழையாறு மீனோய்ய்ய்ய்...

''காலையில 9 மணிக்கு அப்புறம் வரும் மீன்களை வாங்க ஆள் இருக்க மாட்டாங்க. அதனால, சில சமயம் சல்லிசான விலையில் நல்ல மீன்கள் கிடைக்கும். அதை வாங்கி ஐஸில் வைப்போம். மறுநாள் காலை நேரத்தில் அதை வித்துடலாம்.'' என்கிறார் பிரேமா.

கூடையில், மீன் வாங்கி, தலையில் வைத்துக்கொண்டே ஒரு பலாப் பழத்தை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு நகர் கிறார் ஒரு பெரியம்மா. இன்னொருவர் ஐஸ் கட்டி விற்பவரிடம் 15 ரூபாய்க்கு ஐஸ் கேட்டு வாங்கி, அது குறைவாக இருப்பதாகச் சண்டை போடுகிறார். மினி வேன் டிரைவரிடம் 100 ரூபாய் கடன் கேட்கிறார் ஓர் இளம்பெண். படி 30 ரூபாய் என்று சென்னாகுன்னி பொடியைக் கூவிக் கூவி விற்றுக்கொண்டு இருக்கிறார் மற்றொரு பெண்மணி. ''அந்தக் கூடையைத் தூக்கிப்போய் அலசிக்கிட்டு வாய்யா'' என்று ஆர்டர் போடுகிறார் ஓர் ஆயா. ஆயிரம் ஆண்கள் அங்கே இருந்தாலும், அங்கே அதிகாரம் முழுவதும் பெண்கள் கையில்தான் இருக்கிறது!

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism