Published:Updated:

என் ஊர்!

ஊர் முழுக்கப் புலவர்கள்!

என் ஊர்!

ஊர் முழுக்கப் புலவர்கள்!

Published:Updated:
##~##

''ஒரு காலத்துல பெரிய காடா இருந்தது எங்க கிராமம். காட்டைத் திருத்தி நாடாக்கினாலும், அந்தக் காட்டுக்கே உரிய வளமும் குணமும் இன்னைக்கும் எங்க மண்ணுக்கு உண்டு.'' - தன் ஊரான இளங்காடு பற்றி சொல்லத் தொடங்கி,  நினைவுகளில் ஆழ்ந்தார் இயற்கை விவசாயப் போராளி நம்மாழ்வார்.

''தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய தலைக்கட்டில் ஒண்ணு இளங்காடு. ஜில்லாவிலேயே நில வரி கட்டுறதுல ரெண்டாவது இடம் எங்க ஊருக்குத்தான். சுத்துப்பட்டுக் கிராமங்களுக்கு எல்லாம்  இது தாய் கிராமம். ஒரு காடு எப்படி இதுதான்னு இல்லாம, எல்லாத்தையும் தருமோ... அப்படி நாங்க விதைச்ச எல்லாத்தையும் விளைச்சலாத் திரும்பத் தரும் மண். வயல் எல்லாம் நெல், வீட்டுக்கு வீடு முருங்கை, வாழை, மா, தென்னை, தோட்டத்துக்குத் தோட்டம் கத்திரி, வெண்டை, அவரை, பூசணினு விளையும். நாங்க எதுக்காகவும் வெளியூர்க்காரங்களை அண்டி இருக்க வேண்டிய சூழல் இல்லாமப் பார்த்துக்கிட்ட மண்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

அந்தக் காலத்தில் விவசாயம் எங்களுக்குப் பெரிய சுமையா இல்லை. அதனால, எங்க மக்கள்கிட்ட விவசாயத்தைத் தாண்டிய ஆர்வங்களும் சிந்தனைகளும் இருக்கும். ஒரு பக்கம் வைணவமும் இன்னொரு பக்கம் சைவமும் ஒண்ணோடு ஒண்ணு மோதாம, வலுவா இங்க வளர்ந்தது. திரௌபதி அம்மன் கோயில் எல்லா அடையாளங்களையும் தாண்டினது. வருஷத்தில் ஒரு வாரம் திருவிழா. கொடி ஏத்திட்டா, விடையாற்றி வரைக்கும் யாரும் வெளியில் போக, வர முடியாத கட்டுப்பாடுகள் உண்டு. தீமிதி ரொம்ப விசேஷமா இருக்கும். திருவிழா நாள்லயும் கோடை காலத்துலயும் நாடகமும் கதாகாலட்சேபமும் நடக்கும். இங்கே முக்கியமாக் கவனிக்க வேண்டிய விஷயம்... இந்தத் திருவிழாவும் நாடக மரபும் மற்ற ஊர்களிடம் இருந்து தனித்துவமானது.

அந்த நாட்கள்ல மகாபாரதக் கதைகளும் கம்பராமாயண சம்பவங்களும் எங்க ஊர்ல உள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் மனப்பாடம். ஊர்ல உள்ள பெரியவங்க, இளந்தாரிகளுக்குக் கோயில்ல பாடம் எடுப்பாங்க. பக்கத்துல ஐயாறு. அஞ்சு ஆறு கூடும் இடம். அங்கதான் புலவர் கல்லூரி. பசங்களை அங்கே அனுப்பினா, பரீட்சை எழுதவெச்சு புலவராக்கிடுவாங்க. ஒரு கட்டத்தில், இளங்காடு ஊர் முழுக்கப் புலவர்கள் ஆகிட்டாங்க. அப்பதான் எங்க ஊர் பெரியவங்க, 'வெறுமனே புலவருங்க மட்டும் அதிகமாகி ஊருக்குப் பிரயோஜனம் இல்லை. பல துறைகள்லயும் போயி ஊரை முன்னேத்துங்க’னு சொல்லி எங்களை  வெளி ஊர்களுக்குப் படிக்க அனுப்புனாங்க.

என் ஊர்!

அப்படிப் போன எங்க ஊர் பிள்ளைங்களுக்குக் கல்வி கொடுத்த கோயில், திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி அய்யர் பள்ளி. சந்தை, நாடகம், சினிமாவுக்கும் திருக்காட்டுப்பள்ளிக்குத்தான் போகணும். அந்த வயசுல எங்க ஊர் பிள்ளைகளோட சந்தோஷம்னா பங்குனி உத்தரத்தப்ப ஆறு தாண்டி போற அன்பில் மாரியம்மன் கோயில் திருவிழாவும், பரீட்சை லீவுல அழைச்சுகிட்டுப் போற மூணு சினிமாவும்தான். மற்ற நேரங்கள்ல ஆத்தங்கரையில கிடப்போம்!

கொஞ்சம் கொஞ்சமா வெளியில போனப்ப ஒரு மாற்றம் நடந்துச்சு. ஆன்மிகத்துல எவ்வளவு தீவிரமான பூமியா இது இருந்துச்சோ, அதே தீவிரம் பகுத்தறிவு ஈடுபாட்டுலயும் வந்துச்சு. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எங்க ஊர் இளைஞர்கள் தீப்பிழம்பா இருந்தாங்க. எங்க வீட்டுல அண்ணனுங்க எல்லாம் நல்ல படிப்பாளிங்க. வீட்டுல ஏகப்பட்ட புத்தகங்கள் குவிஞ்சுகிடக்கும். அப்புறம் கிராமத்துல நல்ல நூலகம், விளையாட்டுச் சங்கங்கள் உண்டு. புத்தகம் மேல ஆர்வம் வந்ததும் புத்தகங்கள் வழியா இன்னோர் உலகத்தைப் பார்க்க ஆரம்பிச்சதும் இப்படித்தான். ஒரு கிராமத்து சூழல்ல பிறந்து, வெளியே படிக்கப் போன எங்க ஊர் இளந்தாரிங்க ஒவ்வொருத்தரும் அவங்கவங்க துறையில பெரிய ஆளா வந்த பின்னணியும் இதுதான்.

என் ஊர்!

ஊரை முன்னேத்தணும்னுதான் வந்தோம். ஊர் எங்களை வளர்த்துச்சு. ஆனால், நாங்க ஊரை வளர்க்கத் தவறிட்டோம். இப்ப திரும்பிப் பார்க்கும்போது வேதனையா இருக்கு. எல்லா ஊர் மாதிரியும் நவீன விவசாயம் எங்க ஊரையும் சீரழிச்சுடுச்சு. ரசாயன உரமும் பூச்சிக்கொல்லிகளும் எங்க மண்ணோட இயல்பைத் தின்னுடுச்சு. இதோ, இன்னைக்கு 'காவிரியில மணல் கொள்ளை பெரிய அளவுல போயிடுச்சு. அதிகாரிங்க கண்டுக்கலை. நீங்கதான் வரணும்’னு கூப்பிடுறாங்க ஊர்க்காரங்க. எதுக்காக ஊரைவிட்டு வெளியே வந்தோமோ, அதுக்காக ஊர் கூப்பிடுது. இளங்காட்டுக்காரங்க ஊரைப் பழைய ஊராக மாத்த புறப்பட்டுக்கிட்டு இருக்கோம்!''

- சமஸ்,படங்கள்: கே.குணசீலன்