Election bannerElection banner
Published:Updated:

ஒரு முன்னுதாரண கல்லூரி!

ஒரு முன்னுதாரண கல்லூரி!

##~##

ருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், ஐம்பதுகளைக் கடந்த பட்டதாரிகளை, ''எங்கே படித்தீர்கள்?'' என்று கேட்டால், அவர்களின் பெருவாரியான பதில், 'பூண்டி கல்லூரி’ என்பதாகத்தான் இருக்கும்.

 பூண்டி ஒரு சின்ன கிராமம். கிட்டத்தட்ட இந்தக் கிராமமே வாண்டையார் குடும்பத்துக்குத்தான் சொந்தம்.

வாண்டையார் குடும்பத்தினர் 1956-ம் ஆண்டு சுமார் 50 ஏக்கர் நிலத்தில் இங்கு திருபுட்பம் கல்லூரியைக் கட்டினார்கள். 'நாக்’ அமைப்பின் நான்கு நட்சத்திர அங்கீகாரத்தோடு, தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கும் திருபுட்பம் கல்லூரி, கல்வித் துறையில் தனியார் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணம். சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை, குறைந்த கல்விக் கட்டணம் என்று கிட்டத்தட்ட ஓர் அரசுக் கல்லூரிபோலவே மாணவர்களுக்குச் சலுகை காட்டுகிறார்கள் என்கிறார்கள் முன்னாள், இன்னாள் மாணவர்கள்.

ஒரு முன்னுதாரண கல்லூரி!

இப்போது 7,000 மாணவ - மாணவிகள் படிக்கிறார்கள். ஆண்டுதோறும் 200 மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. கல்லூரி வளாகத்திலேயே, அரசுப் பதிவு பெற்ற சித்த - ஆங்கில மருத்துவ மையம் இயங்குகிறது. மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிகிச்சை இங்கே இலவசம்.

ஒரு முன்னுதாரண கல்லூரி!

நூலகத்துக்கு என்றே தனி வளாகம். நாட்டின் சிறந்த 300 நூலகங்களில் ஒன்று என்ற பெருமையுடன் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த நூலகத்தில், லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. ''இந்த நூலகமும் கல்லூரியின் முகப்பில் உள்ள பிரமாண்ட தியான மண்டபமும் ஒவ்வொரு மாணவரும் தவறாமல் தினமும் வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு கட்டப்பட்டவை. கல்லூரியைச் சுற்றி உள்ள தோட்டங்களில் நெல்லும், காய்கறிகளும் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்துதான் விடுதி மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. 'முதலில் ஒழுக்கம், அடுத்துதான் கல்வி’ என்பது கல்லூரியின் தாளாளர் துளசி அய்யா வாண்டையாரின் கொள்கை. இயற்கை வேளாண்மையின் முக்கியம் மாணவர்களுக்கு பயன்பாட்டின் அடிப்படையில் தெரிய வேண்டும் என்பார் அவர். பூண்டிக் கல்லூரி தன் மாணவர்களுக்குத் தர விரும்புவதும் இதைத்தான்'' என்கிறார் கல்லூரி முதல்வர் எஸ்.சின்னையன்!

- சி.சுரேஷ் , படங்கள்: கே.குணசீலன்

ஒரு முன்னுதாரண கல்லூரி!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு