Published:Updated:

காளவாய் வாழ்க்கை!

காளவாய் வாழ்க்கை!

காளவாய் வாழ்க்கை!

காளவாய் வாழ்க்கை!

Published:Updated:
##~##

விடிந்தும் விடியாத அதிகாலை. தலையில் தூக்குவாளி, ஒரு கையில் ஃபிளாஸ்க், இன்னொரு கையில் தண்ணீர் பாட்டிலுடன் கிளம்புகிறார் வனஜா. ''நாலு மணிக்கே எந்திரிச்சுப் போயிட்டாரு ஆம்பிளை. இந்நேரம் மண்ணு குழைச்சு செங்கல் அறுக்கறதுக்கு ரெடி பண்ணி இருப்பாரு. டீ கூட குடிச்சிருக்க மாட்டாரு. அதான் டீயும் காலை ஆகாரமும் எடுத்துட்டுப் போறேன்'' என்றபடி, நடையை விரைவாக எட்டிப்போடுகிறார் வனஜா.

 கணவன் வேலைக்குப் போனதும், சாணம் தெளித்து, வீடு கூட்டி, பாத்திரம் தேய்த்து, சமையல் செய்து, குழந்தைகளுக்குத் தனிப் பாத்திரத்தில் போட்டுவைத்துவிட்டு, தூக்குவாளியில் தனக்கும் கணவனுக்குமான சாப்பாட்டையும் ஃபிளாஸ்கில் டீயையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார் வனஜா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காளவாய் வாழ்க்கை!

வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் செங்கல் காளவாய்க்கு அரை மணி நேரத்தில் வந்து அடைகிறார். மண் குழைத்துக்கொண்டு இருக்கும் கணவனிடம் டீயைக் கொடுத்துவிட்டு புடவையில் இருந்து மண்ணும் சேறுமாக இருக்கும் நைட்டிக்கு மாறுகிறார். குழைத்த  மண்ணை அள்ளி அச்சில் போட்டு தரையில் வேகமாக அடிக்க ஆரம்பிக்கிறார். கைகள் மண் அள்ளுவதும் தெரியவில்லை; அது செங்கல்லாக மாறுவதும் தெரியவில்லை.

அடுத்த கொத்துக்கு (கணவன் மனைவி அடங்கிய ஒரு குழு) நகர்கிறோம்.

சிவக்குமார் மண்ணைக் குழைத்து தள்ளு வண்டியில்வைத்துக் கொண்டுவந்து கொட்ட, அதைக் செங்கல்லாக மாற்றிக்கொண்டு இருந்தார் அவரது மனைவி சத்யா. ''பேச ஏது நேரம்? இவ்வளவு மண்ணையும் கல் அறுத்தா 1,000 செங்கல் அறுக்கலாம். அதுவும் அவரும் வந்து அறுத்தாதான்... முடியும். இதுக்கே 11 மணி ஆயிடும். அதுக்குப் பிறகு நேத்து அறுத்த 1,000 செங்கல்லையும் புரட்டிப் போட்டுக் காயவைக்கணும். அதுக்குப் பொறவு முந்தா நாள் அறுத்த செங்கல்லை மால் (அடுக்கி) வைக்கணும். நாளைக்குக் செங்கல் அறுக்க, களிமண், சாதா மண் ரெண்டையும் கலந்து ஊறவைக்கணும். இதை எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்குப் போக அஞ்சு மணி ஆயிடும். அப்புறம் அடுப்படி, ராத்திரி சமையல்னு நேரம் சரியா இருக்கும்'' என்று தன் ஒரு நாள் வாழ்க்கையை விவரிக்கிறார் சத்யா.

காளவாய் வாழ்க்கை!

ஒரு நாள் அறுத்த 1,000 செங்கற்களையும் மூன்றாம் நாள் அடுக்கிவைத்த பின், அவற்றை எண்ணி எடுத்துக்கொள்கிறார் முதலாளி. இதற்கு  400 ரூபாய் கூலி. மண், தண்ணீர், அச்சு முதலான அனைத்தும் முதலாளி பார்த்துக்கொள்ள வேண்டும். அதை அறுத்துக் காயவைத்துக் கொடுப்பது இவர்களின் வேலை. திடீர் மழை பெய்து காயவைத்த செங்கற்கள் கரைந்து போய்விட்டால், கூலி கிடையாது. முதலாளியாகப் பார்த்து ஏதாவது கொடுத்தால்தான் உண்டு.

''கோடையில் ஆறு மாசம்தான் இந்த வேலை. மழைக் காலத்தில் முடியாது. அப்ப விவசாய வேலைக்குப் போயிடுவோம். ஆம்பிளைக்கு     200 ரூபாய், பொம்பளைக்கு 70 ரூபாய் கூலி கிடைக்கும். அதைவெச்சு ஒப்பேத்திக்குவோம். என்ன ஒண்ணு, திடீர்னு உடம்பு சரியில்லாமப்போச்சுன்னாதான் கஷ்டம். கையில இருக்கிற கொஞ்சக் காசும் கரைஞ்சு திரும்பவும் முதலாளிகிட்ட முன்பணம் வாங்கற மாதிரி ஆயிடும்'' என்கிறார் ராமலிங்கம்.

செங்கல் அறுக்கும் ஆட்களுக்கு பயங்கர டிமாண்ட். அதனால் 20,000 ரூபாய் வரை இவர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து தங்களிடம் தக்கவைத்துக் கொள்கிறார்கள் முதலாளிகள். தீபாவளி, பொங்கல் என்றால்... துணிமணி, போனஸ் எல்லாம் கொடுக்கிறார்கள். ஈரோடு, பவானி பக்கம் இருந்து வரும் காளவாய் முதலாளிகள் 50,000 ரூபாய் வரை கொடுத்து குடும்பத்தோடு அழைத்துப்போய் விடுகிறார்கள். அப்படிப் போகிறவர்கள் ஆறு மாதக் காலத்துக்கு ஊர்ப் பக்கமே திரும்ப முடியாது. நல்லது கெட்டது எதிலும் கலந்துகொள்ள முடியாது. ஆறு மாதங்கள் முடிந்து ஊருக்கு வரும்போது திரும்பவும் அட்வான்ஸ் கொடுத்து அடுத்த வருஷத்துக்கு ஒப்பந்தம் போட்டுவிடுவார்கள். கோடை ஆரம்பத்தில் லாரி எடுத்துக்கொண்டு வந்து அதில் ஏற்றிக்கொண்டு போவார்கள். இது தொடர்கதை.

நாலு மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் சுமதி, போகும் வழியில் விற்ற கருவாட்டை 15 ரூபாய்க்கு வாங்கிக்கொள்கிறார்.

''வேலை செஞ்ச அலுப்புல அது சாராயத்தைக் குடிச்சுட்டு வரும். ஏதாவது சுள்ளுன்னு இருந்தா தான் அரை வயித்துக்காவது சாப்பிடும். இல்லைன்னா ரெண்டு திட்டு திட்டிட்டு... வெறும் வயித்துல படுத்துடும்'' என்று சொன்ன சுமதி, ''ஏன்டி, அர்ச்சனா படற துன்பம் பார்க்க சகிக்கலைடி, பாவம் அவளுக்கு சீக்கிரம் விடிவு கிடைக்காதா?'' என்று அருகில் வரும் அனுசுயாவிடம் 'திருமதி செல்வம்’ அர்ச்சனாவுக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டே நடையைக் கட்டுகிறார்.

அர்ச்சனா பாவமா? சுமதி பாவமா?

- கரு.முத்து, படங்கள்: எம்.ராமசாமி