Published:Updated:

என் ஊர்!

நாடியம் நாட்கள்!

என் ஊர்!

நாடியம் நாட்கள்!

Published:Updated:
##~##

'கோலங்கள்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையிலும் முக்கிய இடம் பிடித்த திருச்செல்வம், தன் சொந்த ஊரான நாடியம் பற்றிய நினைவுகளை அசைபோடுகிறார்!

 ''நாடியம் என்றதுமே, கடல் காற்றும் தென்னை மரங்கள் சூழ்ந்த வீடுகளும்தான் என் நினைவுக்கு வரும். அந்த நாட்களில் கேரளாவில் உள்ள ஊர்களைப்போல இருக்கும் எங்கள் ஊர். பஞ்சாயத்துப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

பள்ளிக்கூடம்தான் எங்கள் கல்விக் கண் திறந்த கோயில். அப்போது அது தொடக்கப் பள்ளி. மேல்நிலைக் கல்விக்கு குருவிக்கரம்பைக்குப் போக வேண்டும். தமிழ் ஆசிரியராக இருந்த களிதீர்த்தம், மறக்க முடியாத ஆசிரியர். பொன்னிவளவன் பெட்டிக் கடை எங்கள் ஊர்ப் பிள்ளைகளின்  இளைப்பாறும் இடம். பழனிவேல் டீக்கடையில் காராச்சேவு பொட்டலம் ரொம்ப விசேஷம். அப்பா, சந்தோஷமாக இருக்கும் நாட்களில், நிச்சயம் பொட்டலம் கிடைக்கும். டீக்கடைக்குப் போனால், வேதரத்தினம் ஐயா, ஊருக்கே  நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டு இருப்பார். யார் விளக்கம் கேட்டாலும், சளைக்காமல் சொல்வார்.

பிள்ளையார் கோயிலும் பெரிய குளம் ஏரியும் சிறுவர்களின் சொர்க்க வாசல். எங்களுடைய எல்லா இன்ப, துன்பங்களிலும் பிள்ளையாருக்குப் பங்கு உண்டு, திருட்டு மாங்காய் உட்பட!

கிராமத்தின் உற்சாகம் எகிறுவது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் பதம்பக் கூத்து நிகழ்ச்சியில். ஒரு வெள்ளைத் துணியை நீள வாக்கில் கட்டிவிட்டு, அதற்குப் பின்னால் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில்  நடத்தப்படும் நாடகம். கையில் ராமர், ராவணன் தோற்றத்தில் அட்டைகளை வைத்துக்கொண்டு நடக்கும் அந்தக் கூத்தும் ராமனுக்கும் ராவண னுக்குமாக வெவ்வேறு குரலில் கூத்துக்காரரால் பேசப்பட்ட வசனங்களும் மறக்க முடியா தவை. எப்போதெல்லாம் பார்வையாளர்களுக்குச் சலிப்பு வரும்போல் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் தொப்புள்காரன், குடுமிக்காரன் என்ற இரண்டு பாத்திரங்கள் வந்துவிடும். என்னிடம் நாடக ஆர்வத்துக்கான விதைகளை விதைத்தவர் அந்தக் கூத்துக்காரர்தான் என்று சொல்லலாம்.

என் ஊர்!

அந்த நாட்களில் எங்கள் ஊரின் இன்னொரு கதாநாயகன் சண்முகம். என்னுடைய மாமா. பிற்காலத்தில் பெரிய தயாரிப்பாளராக வந்த ஏ.வீரப்பனும் மாமாவும் தோழர்கள். நாடக மயக்கத்தில் இரண்டு பேரும் நாகப்பட்டினத்துக்குப் போய் நாடக கம்பெனியில் சேர்ந்தார்கள். ஆனால், மாமாவை மட்டும் வீட்டில் பிடித்துக்கொண்டு வந்துவிட்டார்கள்.

கடற்கரைப் பகுதி என்பதால், எங்கள் உணவில் பெரும் பங்கு வகிப்பவை மீன்கள். செங்கனி மீன் சமையல் எங்கள் பகுதியில் ரொம்பப் பிரசித்தம். வெளியூரில் இருக்கும் ஊர்க்காரர்களைப் பார்க்கச் சென்றால், அவர்கள் முதலில் கேட்பது, 'வாளைக் கருவாடு கொண்டுவந்தியா?’ என்பதாகவே இருக்கும்.

என் ஊர்!

மனோரா - எங்களால் மறக்கவே முடியாத இடம். பக்கத்து ஊரில் இருக்கும் சிவன் கோயிலுக்கும் மனோராவுக்கும் சுரங்கப் பாதை உண்டு என்று ஒரு பேச்சு உண்டு. மனோரா உச்சியில் நின்று பார்த்தால், இலங்கை தெரியும் என்பார்கள். சின்ன வயதில் நாங்கள் ஏறி நின்று பார்க்கும்போது எதுவும் தெரியாது. ஆனாலும், 'அதுதான் இலங்கை... எனக்குத் தெரியுது’ எனப் பெருமைக்காகப் பொய் சொல்வது உண்டு.

ஊர் எல்லையில் இருக்கும் அய்யனார் சாமிதான் ஊரைக் கடல்கொள்ளாமல் பாதுகாக்கிறார் என்பது நம்பிக்கை. பள்ளிக்கூடம் அருகே மடம் ஒன்று இருக்கும். மன்னர்கள்தானே வரி வசூல் செய்வார்கள்? ஆனால், எங்கள் ஊரில் வரி வாங்குபவர்கள் சாமியார்கள். அடிக்கடி நிறைய சாமியார்கள் வந்து இங்கே தங்கி இருப்பார்கள். அவர்கள் வரும் குதிரைகளைக் கட்டிவைப்பதற்கு என்றே ஒரு வளாகமும் உண்டு.

என் ஊர்!

எங்கள் ஊரின் பழமையான கோயில், மாரியம்மன் கோயில். இடைப்பட்ட காலத்தில் சிதிலம் அடைந்து அழிந்தேவிட்டது. ஊர்க்காரர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து சமீபத்தில்தான் அந்தக் கோயிலைத் திரும்பக் கட்டினோம். அம்மன் கோயில் வந்ததில் இருந்து ஊரில் எல்லோருக்கும் எல்லாமும் நல்லதாகவே நடப்பதாக ஒரு நம்பிக்கை. நானும் அதை ஆழமாக நம்புகிறேன்!''

- சி.சுரேஷ், படங்கள்: செ.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism