Published:Updated:

''பாடைதான் சாமீ விசேஷமே!''

இது அணியாப்பூர் திருவிழா

''பாடைதான் சாமீ விசேஷமே!''

இது அணியாப்பூர் திருவிழா

Published:Updated:
##~##

''எங்க ஊர்த் திருவிழாவுக்கு வாங்க.  வித்தியாசமான அனுபவமா இருக்கும்!'' என்று அழைப்பு. திருச்சி மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதியான வையம்பட்டி அருகில் உள்ள அணியாப்பூர் கிராமத்தில் நுழைந்த உடன் நாம் பார்த்த காட்சியே படு வித்தியாசம்!  

ஊரின் மையப் பகுதியில் ஊர்க்காரர்கள் பலரும் கூடி இருக்க, ''அந்தத் தென்னை மட்டையை எடுத்து இங்கே வை'', ''கயித்தை நல்லா இறுக்கிக் கட்டு'' என்று கட்டளைக் குரல்கள் காதில் விழுந்தன. கிட்டே நெருங்கிச் சென்று பார்த்தால், பல்லக்கு வடிவப் பாடை ஒன்று தயாராகிக்கொண்டு இருந்தது. ''ஊரில் ஏதாவது பெரிய காரியமா? அப்ப இன்னிக்குத் திருவிழா கிடையாதா?'' என்று அப்பாவியாக நாம் கேட்க, ''பாடைதாங்க விசேஷமே!'' என்று பதில் வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பாடைதான் சாமீ விசேஷமே!''

மேள தாளம் முழங்க... கழுத்தில் மெகா சைஸ் மாலை போட்டு அழைத்து வரப்பட்டார், கிராமத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டவர், பாடையில் படுக்கவைக்கப்பட... அவரது கால் கட்டை விரல்களைக் கட்டி, நெற்றியில் காசு வைத்து, கறுப்புக் கண்ணாடி மாட்டி, இறந்தவருக்குச் செய்யும் இன்ன பிற சடங்குகளையும் செய்கிறார்கள்.

சித்ரகுப்தன் வேடம் அணிந்த ஒருவர், ''இவரின் ஆயுட்காலம் இன்றோடு முடிவடைகிறது'' என்று ஓலையைப் பார்த்து வாசிக்க, அடுத்து முன்னால் வருகிறார் எமதர்மன் வேடம் அணிந்த ஒருவர். இறந்தவர்போல படுக்கவைக்கப்பட்டு இருப்பவரின் கைகளை கயிறால் கட்டி, பிடித்து இழுக்கிறார் எமதர்மன். இதைத் தொடர்ந்து, இறுதி ஊர்வலம் ஆரம்பம். பாடையின் பின்னே பெண்கள் அழுது புலம்பியவாறு ஒப்பாரிவைத்துச் செல்கின்றனர்.

பாடை, கோட்டை மாரியம்மன் கோயிலை நெருங்க... இறக்கிவைக்கப்படுகிறது. இப்போது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் இறந்தவர்கள்போல் கீழே விழுகின்றனர். கோட்டை மாரியம்மனாக வேடம் அணிந்த ஒருவர், ''எனது பக்தர்களை உயிர்ப்பித்துத் தாருங்கள்'' என சிவபெருமான் வேடம் அணிந்தவரைப் பார்த்து வரம் கேட்க... அதை ஏற்றுக்கொள்ளும் சிவபெருமான், தீர்த்தத்தைத் தெளிக்க... அனைவரும் உயிர் பெற்று எழுகிறார்கள்.

''கோட்டை மாரியம்மனைச் சுத்துப்பட்டுல இருக்கும் கிராம மக்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். அம்மனுக்கு ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறைதான் திருவிழா. கிடாவெட்டு, பொங்கல், மாவிளக்கு பூஜைனு களை கட்டும் திருவிழாவோட இறுதி நாள்தான் இந்தப் பாடை ஊர்வல விழா. இறந்துபோன பக்தர்களைக்கூட அம்மன் உயிர் மீட்டுத் தருவாள் என்பதைக் காட்டுவதே இந்த விழாவின் நோக்கம்.

இந்தத் திருவிழாவில் பாடை ஊர்வலத்தில் சென்றவர் பெயர் தங்கவேல். ஒவ்வொரு திருவிழாவின்போதும் பாடையில் செல்பவர் யார் என்பதை அருள்வாக்கில் அம்மா தெரிவிப்பார். கடந்த மூன்று திருவிழாக்களின்போதும் தங்கவேலின் தந்தை புட்டபர்த்தி பாடை ஊர்வலத்தில் சென்றார். அவர் இறந்த பின்னர், அம்மன் அருள்வாக்கின்படி இந்த விழாவில் தங்கவேல் கலந்துகொண்டார். பாடையில் செல்பவர் மூன்று திருவிழாக்கள் முடிந்த பின்னர் இறந்துவிடுவார் என்பது ஐதீகம்'' என்கிறார்கள் ஊர் மக்கள்!

- ஆர்.லோகநாதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism