Published:Updated:

வள்ளித் திருமணம் பார்க்கப் போவோமா?

வள்ளித் திருமணம் பார்க்கப் போவோமா?

வள்ளித் திருமணம் பார்க்கப் போவோமா?

வள்ளித் திருமணம் பார்க்கப் போவோமா?

Published:Updated:
##~##

ட்டுக்கோட்டையில் இருந்து சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பழஞ்சூர். ஆடி ஓடி, அலுத்துக் களைத்து, கயிற்றுக் கட்டிலில் மக்கள் விழும் நேரம், காற்றைக் கிழித்து ஒலிக்கிறது அந்தக் குரல்...

''கோமாளி வந்துட்டேன்
கூத்தும் ஆட வந்துட்டேன்
வாங்க வாங்க உக்காருங்க...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வந்த காலில் நிக்காதிங்க..!''  ஊர் மந்தையில் அமைக்கப்பட்டு இருக்கும் மேடையில் நடனமாடிக் கொண்டு இருக்கிறார் கோமாளி!

வள்ளித் திருமணம் பார்க்கப் போவோமா?

அம்மன் கோயில் திருவிழாவின் கடைசி நாளன்று நாடகம் நடைபெறுவது பழஞ்சூரின் பாரம்பரியப் பழக்கம். இந்த வருடம் அதற்கு 'வள்ளித் திருமணம்’ நாடகம்.

கோமாளியின் சேட்டைகள் துவங்கியவுடனேயே கலகலப்பு ஏறுகிறது கோயில் வளாகத்தில். ஜெகஜோதியாக விளக்கு வெளிச்சம். இரவு 11 மணிக்கு மின்னொளி ஜொலிக்கும் மேடையில் புதுக்கோட்டை ஹரிஹரன் ஸீன் கம்பெனியாரின் நாடகம் அரங்கேறவிருக்கிறது.  

''பாபன மதுரா நிலையே
பாண்டிய ராஜாதனையே...''
- உச்சஸ்தாயியில் கிளம்பும் குரல் அனைத்து ஒலிபெருக்கிகளையும் அதிர வைக்கிறது. நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் சேர்ந்து பாடுகிறார்கள். முதல் நாள் நாடகத்தில் பாடியதில் தொண்டைக் கரகரப்பு இருந்தால், இந்தப் பாடலின்போது  அது கரைந்துவிடுமாம்.

வள்ளித் திருமணம் பார்க்கப் போவோமா?

இசைக் கருவிகள் சுதியேற்றப்பட்டு இசை முழங்கத் துவங்க நாடகத்தின் கதாபாத்திரங்கள் மேடையை ஆக்கிரமிக்கிறார்கள்.  ராஜாபார்ட்டாக நடிக்கவிருக்கும் துரை செல்வம் செல்போனில் இரண்டரை மணிக்கு அலாரம் செட் செய்துவிட்டு நீட்டி நெளித்துப் படுத்துக்கொள்கிறார்.

மேடையில் நம்பிராஜனாக நடிக்கும் சூரிய மூர்த்தி, 'மானம் மும்மாரிப் பொழிகிறதா... முப்போகம் விளைகிறதா?’  என அதட்டி மிரட்டிக்கொண்டே, தனது மகளான வள்ளியைத் தினைக்கொல்லைக்கு காவலுக்குப் போகுமாறு அனுப்பிவைக்கிறார்.

தோழிகளோடு சென்ற வள்ளி ''ஆலோலம் சோ சோ'' எனப் பறவைகளை விரட்டியபடி பாடிக்கொண்டு இருக்கும்போது, அங்கு நாரதர் வருகிறார்.

நாரதராக நடிக்கும் முனியராஜ் மின் வாரியத்தில் ஜுனியர் இன்ஜினீயராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது முழு நேரமாக நாடக மேடையில் கலகம் செய்துகொண்டு இருக்கிறார்.  

பப்ளிக் ரெஸ்பான்ஸுக்கு ஏற்ப நாடகத் திரைக்கதையில் சட்சட்டென மாற்றங்கள் செய்து விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார்கள். தூக்கம் கண்களைச் சுழற்றினாலும், அதை உதறிவிட்டு கொட்டக் கொட்ட விழித்தபடி காத்திருக்கிறார்கள் கிராமத்தின் மூத்த குடிமக்கள்.

அதிகாலை 2.30 மணிக்கு செல்போன் அலாரம் அடிக்க, கை கால் உதறி எழும் துரை செல்வம், அடுத்த அரை மணி நேரத்தில்  'ராஜாபார்ட்’ ஆக உருமாறுகிறார்.  

ராஜாபார்ட் மேக்கப் முடியும் சமயம், மேடையில் இருந்து இறங்கி கூட்டத்துக்குள் புகுந்து புறப்படுகிறார் கோமாளி. அசந்து மறந்து உறங்கிக்கொண்டு இருப்பவர்களை உலுக்கி, 'ராஜாபார்ட் வரப் போறார் பாரு..! என்று  எழுப்பி விடுகிறார்.  

வள்ளித் திருமணம் பார்க்கப் போவோமா?

சரியாக 3.30 மணிக்கு ''சம்போ மஹாதேவா'' எனப் பாடியபடியே ராஜபார்ட் மேடையில் முகம் காட்ட, டாப் கியர் வேகத்துக்கு எகிறுகிறது நாடகம்.  அதன் பிறகு காலை ஆறரை வரை நாடகம் ராஜபார்ட் கட்டுப்பாட்டில்.  

வள்ளியை வேலன் கரம் பற்றும் கடைசித் தருணம் வரை சளைக்காமல் நாடகம் பார்த்துவிட்டுத்தான் கலைகிறது கிராமத்துக் கூட்டம். ''அவங்க ஆர்வத்துக்காகத்தான் இந்தத் தொழிலை விட்டுட்டுப் போகாம கெடக்கோம்!'' மேக்கப் கலைத்துக்கொண்டே கம்மிய குரலில் சொல்கிறார் ஸ்ரீபார்ட்டாக நடிக்கும் கற்பக வள்ளி. இவர் கொல்லங்குடி கருப்பாயிக்கு ஒருவகையில் பேத்தி முறையாம்!

ராஜாபார்ட், ஸ்ரீபார்ட் இருவருக்கும் ஒரு நாடகத்தில் நடிக்க 2,000 ரூபாய் சம்பளம். ''வருசத்துல நாலைஞ்சு மாசம் வேலை இருக்கும்ங்க. மத்த நாள்ல குருமார்கள்கிட்ட போய் பாட்டு சாதகம் பண்ணுவோம். புதுசு புதுசா ஸீன் போடுவோம். வரவுக்கும் செலவுக்குமே வருமானம் காண மாட்டேங்குது. ஆனா, இம்புட்டு வருசம் புழங்கும் தொழிலை விட்டுட்டுப் போக மனசே இல்லை. அதான் கஞ்சியோ கூழோ குடிச்சுட்டு கூத்து கட்டிக்கிட்டு இருக்கோம். மேடையில ராசாவா நடமாடுற சமயம் மட்டும்தான் உடம்புல உசுர் தங்கிக் கெடக்குப்பா!'' அந்தச் சமயம் மட்டும் 'ராஜாபார்ட்’ துரை செல்வம் கண்களில் மின்னல்!

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism