Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

தெட்சினாபுரம் கதையை நீயும் கேளய்யா!

##~##

''பெரிய வரலாற்றுச் சிறப்புகள் ஏதும் இல்லை. ஆனாலும், எங்க மண்ணு ஒரு புனித பூமி!'' பூரிக்கும் புன்னகையுடன் தன் ஊரின் பெருமையை சொல்லத் தொடங்கினார் 'தஞ்சை’ செல்வி. 'ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளய்யா...’ என்ற ஒரே பாடலில் மொத்த தமிழ்நாட்டுக்கும் வணக்கம் சொன்னவர்.  புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள தெட்சினாபுரத்தைச் சேர்ந்தவர்.

''தெட்சினாபுரம் பெரிய விவசாயக் கிராமம். ஊரே ஒரு பெரிய தோட்டமாகத்தான் இருக்கும். செடி, கொடி களும் மரங்களுமா ஊருக்கு உள்ள நடக்கும்போது வெயிலே மேல படாது. கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் இருக்காங்க. அத்தனை பேரும் தாயா, பிள்ளையாத்தான் பழகுவாங்க. இதை வெறும் வார்த்தைக்காகச் சொல்லலை. இது எங்க ஊரோட பண்பு.

என் ஊர்!

விவசாயத் தொழிலாளர்கள் நிறைஞ்ச ஊருங்கிறதால், எங்களோட எல்லா சந்தோஷமும் வயக்காட்டில் தான்.  காலையில் 6 மணிக்குக் கிளம்பி வயக்காட்டுக்குப் போனால், சாயங்காலம் 6 மணிக்குத்தான்  வீடு திரும்ப முடியும். அப்புறம், கஞ்சியோ கூழோ கரைச்சுக் குடிச்சுட்டு படுக்கையில் சாஞ்சா அன்னைய பொழுது முடிஞ்சுது!  

ஊரில் வேலை இல்லாத நாட்களில் வல்லத்தரா கோட்டை, மணியம்பள்ளம், பாலக்குடி, கல்லாலங்குடி, லெட்சுமிபுரம், வாண்டாகோட்டை, பூவரசங்குடி, கிங்கினிப்பட்டினு பக்கத்தில் எந்த ஊரில்  வேலை இருக்கோ, அங்க குடும்பத்தோடு கிளம்பிடுவோம். ஞாயித்துக்கிழமை வேலை முடிஞ்சு வீடு வந்ததுக்கு அப்புறம் வேங்கடகுளம் சந்தைக்குப் போய் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிட்டு, அப்படியே மீனோ, கறியோ வாங்கிட்டு வருவோம். அதுதான் ஒரு வாரத்துக்கான அசைவம். மத்த நாட்களில் அவசர கஞ்சிதான் உணவு. விருந்தாளி யாரும் வந்துட்டா, சனிக்கிழமைன்னா வெட்டன்விடுதி, வெள்ளிக் கிழமைன்னா புதுக்கோட்டை, வியாழக்கிழமைன்னா ஆலங்குடி, செவ்வாய்க்கிழமைன்னா மேட்டுப்பட்டினு பக்கத்துல வாரச் சந்தை கூடுற இடங்களுக்குப் போய் கறி வாங்கி வருவோம்.

என் ஊர்!

ஊருக்குள் ஒரே ஒரு டீக்கடைதான். விவசாய உளுந்து ஆராய்ச்சிப் பண்ணை இருக்கிற பக்கத்து ஊர் 'வம்பன்’தான் எங்களுக்கு எட்டுற தொலைவுல இருக்குற டவுன். டீக்கடைகள், மளிகைக் கடை, சாப்பாட்டுக் கடைனு  கொஞ்சம் வசதிகள் உள்ள ஊர், வம்பன். எங்க ஊருக்குப் போக இங்கேதான் பஸ் இறங்கணும். அங்கே இருந்து நாலு கி.மீ. தூரத்தில் இருக்கும் எங்க தெட்சினாபுரத்துக்கு யார் நடந்து  போயிட்டு இருந்தாலும், சைக்கிளிலோ, மோட்டார் சைக்கிளிலோ போறவங்க அவங்களை ஏத்திக்கிட்டுப் போவாங்க. எங்க வீட்டு விசேஷங்களுக்கு மத்த சாதியினர் மாமன் சீர் கொண்டுவருவார்கள். அதேபோல மற்ற சாதியினர் வீட்டுக்கு நாங்கள் சீர் கொண்டுபோவோம். விசேஷங்களை சாதி வித்தியாசம் இல்லாம எல்லோரும் ஒண்ணுகூடி நடத்துவோம்.

மாரியம்மன் எங்க ஊர் தெய்வம். வருஷத்துக்கு நாலு திருவிழா. ஆடித் திருவிழாவும், சித்திரைத் திருவிழாவும் ரொம்ப முக்கியம். அப்ப யாரும் வேலைக்குப் போக மாட்டாங்க. எல்லோருக்கும் கோயில்லதான் வேலை. ஆளுக்கொரு வேலையா  பிரிச்சு செய்வாங்க. அதேபோல திருவரங்குளம் திருவிழாவும் எங்க மக்கள் பங்கெடுத்துக்குற முக்கியமான நிகழ்ச்சி.

திருக்காட்டுப்பள்ளிக்கு வாக்கப்பட்டு, நான் தஞ்சை செல்வியாக மாறினாலும் மனசெல்லாம் நெறைஞ்சு இருப்பது புதுகை செல்வியாக 'மண்ணின் குரல்’ கிராமிய இசை நிகழ்ச்சி நடத்திய காலம்தான். தூங்கும்போதும் யாராவது 'தஞ்சை’ செல்வினு கூப்பிட்டால்கூட மனசு 'புதுகை செல்வி’னுதான் புத்திக்குச் சொல்லும்!''

- கரு.முத்து, படங்கள்: எம்.ராமசாமி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு