Election bannerElection banner
Published:Updated:

ஒரு துணை நடிகரின் கதை இது!

ஒரு துணை நடிகரின் கதை இது!

##~##

சினிமாவில் ஜெயித்தவர்களின் கதை நமக்குத் தெரியும்... தோற்றவர்களின் கதை?  முத்துப்பேட்டை முஹம்மது காசிம் சொல்லும் கதை இது.

ஒரு துணை நடிகரின் கதை இது!

''விவரம் தெரியாத வயசுலயே எங்க அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டார். அதுக்குப் பிறகு சாப்பாட்டுக்கே தாளம் போடுற நிலை. நண்பர்கள் சும்மா அரட்டை அடிச்சுட்டு இருக்குறப்பல்லாம், 'நீ இருக்குற அழகுக்கு சினிமாவுல நடிக்கலாம்’னு உசுப்பேத்தி விட்டுட்டாங்க. நானும் 30 வயசுல எதைப் பத்தியும் யோசிக்காம சென்னைக்குக் கிளம்பிப் போயிட்டேன். அங்கே போய் விசாரிச்சப்ப, 'வடபழனி பக்கம் போனா அங்க நடிகர்களுக்கான ஏஜென்ட் வருவார்’னு சொன்னாங்க. வடபழனி போய் அவங்க சொன்ன 'முனாஸிஸ் ஸ்டுடியோ’ வாசல்ல நின்னேன். அங்கே வந்த ஒரு ஏஜென்ட், 'சினிமாவுல நடிக்க ஆள் வேண்டாம். ஷூட்டிங் நடத்தற பொருட்களைத் தூக்க எடுக்க எடுபிடி வேணும்’னு கேட்டார். எப்படியோ சாப்பாட்டுக்கு வழி கெடைச்சா சரின்னு  ஸ்டுடியோக்குள்ள காலடி எடுத்துவெச்சேன். என்னை மாதிரியே அங்க எடுபிடி வேலை செஞ்சுக்கிட்டு இருந்த காதர், ராமச்சந்திரன், மோகன் மூணு பேரும் சேர்ந்து ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்தோம். மெள்ள சினிமாவுல முகத்தைக் காட்டுற வாய்ப்புகள் வந்துச்சு. கூட்டத்துல நிக்குற, கூட்டத்தோட ஓடுற ஸீன்ல நடிக்க வெச்சாங்க. அப்பல்லாம் இப்படி நடிக்கிறவங்களுக்கு ஒரு நாள் சம்பளம் 10 ரூபாய். அந்த நாள்ல அதுவே பெரிய தொகை!

திடீர்னு ஒருநாள் எம்.ஜி.ஆர். சினிமாவுல நடிக்க வாய்ப்பு கெடைச்சது. போலீஸ் வேஷம். எம்.ஜி.ஆரைப் பார்க்கவே தவம் இருக்கும் கூட்டம். எனக்கோ அவர் கூடவே நடிக்கிற வாய்ப்பு. சொல்லவா வேணும்? 'மதுரை வீரன்’ ஷூட்டிங். அது ஒரு சண்டைக் காட்சி. எம்.ஜி.ஆர். தடுமாறி கீழே விழ... வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்ன நான் ஓடிப்போய் அவரைத் தாங்கிப் புடிச்சேன். அதில் இருந்து அவர் படத்தில் தொடர்ந்து ஏதாவது ஒரு ஸீன்ல நான் தலைகாட்டுற வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். 'மகாதேவி’, 'கணவன்’, 'நாடோடி’, 'கொடுத்து வைத்தவன்’, 'ராமன் தேடிய சீதை’னு பல படங்கள்.

ஒரு துணை நடிகரின் கதை இது!

அப்ப ஒருநாள் ஒரு ஏஜென்ட் 'வா உன்னை கலைஞர்கிட்ட அழைச்சுக் கிட்டு போறேன்’னு கூட்டிக்கிட்டுப் போனார். என்னைப் பார்த்த கலைஞர், 'நீ 'பூம்புகார்’ படத்தில் இளங்கோ அடிகளா நடிக்கிறியா?’னு கேட்டார். சரின்னேன். உடனே மொட்டை அடிச்சுட்டு 'பூம்புகார்’ படத்தில் இளங்கோ அடிகளா நடிச்சேன். இப்படி சிவாஜி, நம்பியார், நாகேஷ், மனோரமா, கமல்னு ஒவ்வொருத்தர்கூடவும் ஒவ்வோர் அனுபவங்கள். அப்ப எல்லாமே இனிச்சது!

வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமா குறைய... வீட்டுல ஏக கஷ்டம். சமையல் வேலைக்குப் போனேன். 5-க்கும் 10-க்கும் கஷ்டப்பட்டு காலத்தைத் தள்ளினேன். இன்னைக்கும் ஏழ்மை என்னைவிட்டுப் போகலை. ஆனா, காலம் போயிடுச்சே... சினிமா ஒரு பெரிய போதை சார்!''

- வீ.மாணிக்கவாசகம். படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு