Election bannerElection banner
Published:Updated:

ஐந்து வரிகளில் அழகு தமிழ்!

ஐந்து வரிகளில் அழகு தமிழ்!

ஐந்து வரிகளில் அழகு தமிழ்!

ஐந்து வரிகளில் அழகு தமிழ்!
##~##

ள்ளிப் பாடப் புத்தகங்களில் இரண்டு வரி நோட்டு, நாலு வரி நோட்டு தெரியும். ஐந்து வரி நோட்டு?

திருவாரூர் மாணவர்கள் இடையே ஐந்து வரி நோட்டுகள் இப்போது பிரசித்தம். காரணம்... 'எழுத்தோலை கையெழுத்துப் பயிற்சி மைய’ நிறுவனர் ந.தமிழ்க்காவலன்!

''அரசுப் பள்ளி ஆசிரியன் நான். மாணவர்களுக்குக் கையெழுத்து என்பது மிகவும் முக்கியம். ஆனால், பல மாணவர்களுக்கு அது கை கூடுவது இல்லை. குறிப்பாக தமிழில்! இதற்கு ஓர் எளிய முறையைக் கண்டறிந்தால் என்ன என்று யோசித்தபோது, உதித்த எண்ணம்தான் ஐந்து வரி நோட்டு!

தமிழ் எழுத்துகளை கால் வட்ட எழுத்துகள், அரை வட்ட எழுத்துகள், முக்கால் வட்ட எழுத்துகள், முழு வட்ட எழுத்துகள், சாய்வுக் கோடு எழுத்துகள், படுக்கைக் கோடு எழுத்துகள், குத்துக்கோடு எழுத்துகள் என்று  ஏழு வகையான வடிவங்களில் பிரித்தேன்.

இதை அடிப்படையாகக் கொண்டு எளிய முறையில்  எழுதிப் பழக ஐந்து வரிகள் இருந்தால், பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. முயற்சித்தபோது, கச்சிதமாக இருந்தது. நாங்களே ஐந்து வரி நோட்டுகளை உருவாக்கினோம். இப்போது திருவாரூரில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்தக் கையெழுத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில தனியார் பள்ளிகளிலும் அவர்களாகவே முன்வந்து கற்றுச் சென்று, பயிற்சி அளிக்கின்றனர். தமிழ் மாணவர்கள் சிறந்த கையெழுத்துக்கான அடிப்படையாக எதிர்காலத்தில் ஐந்து வரி நோட்டுக்கள்தான் இருக்கும்!''

தன்னம்பிக்கை மிளிர்கிறது   தமிழ்க் காவலனின் வார்த்தைகளில்!

- ச.ஸ்ரீராம்
படங்கள்: செ.சிவபாலன்

தட்டிக் கேட்கும் பெட்டிக் கடைக்காரர்!

ஐந்து வரிகளில் அழகு தமிழ்!

பெரம்பலூர் ராம் தியேட்டர் அருகில் பெட்டிக் கடை வைத்து இருக்கிறார் ராம்ராஜ். லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிராக  அலட்டிக்கொள்ளாமல் போராடும்  போராட்டக்காரர்!

பொதுப் பிரச்னைகளை சட்டத்தின் உதவியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இயங் கும் இவருடைய அணி,  80 பேரை உள்ளடக்கியது.  எல் லோருமே சாமானியர்கள் தான். தத்தம் ஓய்வு நேரத்தில் பேசிவைத்து ஒன்றுகூடுகிறார் கள். சிறு விவாதம் மூலம் அத்தியாவசியமான பிரச்னை களைக் கையில் எடுக்கிறார்கள். முதல் படி மனுக்கள், இரண்டாம் படி தகவல் உரிமைச் சட்டம், மூன்றாம் படி  உண்மைகளை ஊருக்கு மத்தியில் உரக்கச் சொல்வது, நான்காம் படி நீதிமன்றத்தில் வழக்கு என்று திட்டமிட்டுச் செயல்படுகிறது ராம்ராஜ் அணி.

''எவ்வளவு நாள்தான் புலம்பிக்கிட்டே இருக்குறதுனு எனக்கு நானே கேட்டுக்கிட்ட கேள்விக்கான பதில்தான் இதெல்லாம்.  முதல்ல 'தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கம்’ தொடர்பால் தனிப்பட்ட வாழ்க்கையில் லஞ்சம் கொடுக்கவே கூடாதுனு முடிவு எடுத்தோம். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் 'மக்கள் மையம்’ மூலமா தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துறதுன்னு கத்துக்கிட்டோம். 'பாதிக்கப்பட்டோர் கழக’ செந்தமிழ்க் கிழாரோட சுய உதவிச் சட்டப் புத்தகங்கள் பொதுப் பிரச்னைகளுக்கு நீதிமன்றப் படிகளில் ஏறி வாதாடும் துணிவைக் கொடுத்துச்சு. இப்ப எங்களைக் கண்டாலே தப்பு செய்யும் அதிகாரிகள் நடுங்குறாங்க. ஒவ்வொருத்தரும் இப்படி முடிவு எடுத்தா தப்பு நிச்சயம் குறைஞ்சுடும். தப்பு பண்றவங்கதான் பயப்படணும்; தட்டிக் கேட்க ஏன் பயப்படணும்?'' என்கிறார் ராம்ராஜ் துணிச்சலாக!  

- எஸ்.சுமன்

படையல் போட்டு... திருஷ்டி ஓட்டு!

ஐந்து வரிகளில் அழகு தமிழ்!

மணமக்களுக்கு தேங்காய் அல்லது பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றுவது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். படையல் போட்டு திருஷ்டி சுற்றும் கதையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் நடக்கிறது இப்படி ஒரு திருஷ்டி படையல்!

இங்கு நடக்கும் திருமணங்களில் வழக்கமான திருமண சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்ததும் திருஷ்டி படையல் ஆரம்பமாகிவிடுகிறது. ஒரு போர்வை அளவுக்கு வாழை இலைகளைப் போட்டு, சோற்றைக் குவிக்கிறார்கள். அதன் நடுவே உரித்த முழுக்கோழி மஞ்சள் தடவப்பட்டு, வைக்கப்பட... அதன் கழுத்தில் கொஞ்சம் பூவைக் கட்டிவிடுகிறார்கள். தொடர்ந்து, சோற்றைச் சுற்றி பலப் பல வண்ணங்களில் செய்யப்பட்ட வடகம், வத்தல்கள், பழங்கள், பலகாரங்கள் என நிறைக்கிறார்கள். மணமக்களை அழைக்கிறார்கள். மாப்பிள்ளை மணப்பெண்ணின் அண்ணன் ஒரு தட்டில் வெற்றிலைப் பாக்கு, பணம் வைத்துக்கொடுத்து, திருஷ்டி கழிப்பதற்காக ஒரு மோதிரத்தையும் மாட்டி விடுகிறார். இப்படிச் செய்தால், மணமக்கள் மீதான திருஷ்டி கழிந்துவிடுமாம்.

''எங்கப் பகுதியில் மட்டும் காலங்காலமாகத் தொடரும் சடங்கு இது. கல்யாணத்துக்கு வர்ற எல்லார் கண்ணும் பொண்ணு மாப்பிள்ளை மேல விழும். அதைக் கழிக்கத்தான் இப்படி ஒரு சடங்கு. இந்த மாதிரி திருஷ்டி சுத்துறதுக்கு, பூதக்களம்னு பேரு. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது இல்லையா?'' என்கிறார் இப்படி ஒரு பூதக்களத்துக்கு வந்து இருந்த தமிழரசி!

- வீ. மாணிக்கவாசகம்
படம்: கே.குணசீலன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு