Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

பழமை பாதி... நவீனம் பாதி!

##~##

''ஆங்கிலேயர் கால இந்தியாவில் நாடு முழுவதும் இருந்த 537 சமஸ்தானங்களில், ஆங்கிலேயர்களால் சிறப்பு அந்தஸ்து அளிக்கப் பட்ட சமஸ்தானம் என்ற பெருமையுடன் திகழ்ந்தது புதுக்கோட்டை  சமஸ்தானம்!'' - புதுக்கோட்டையின் வரலாற்றைப் பெருமிதத் தோடு கூறத் தொடங்கினார் ராணி ரமாதேவி தொண்டைமான்.

''பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட் டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப் பட்டது. அந்தப் பெயருக்கு ஏற்றார்போல் அன்றைய காலகட்டத்தில் நவீனத்துக்கு ஓர் உதாரணமாக விளங்கியது புதுக்கோட்டை. தொண்டைமான் மன்னர்கள் உருவாக்கிய இன்றைய நவீனப் புதுக்கோட்டைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர், 1800-களின் இறுதியில் புதுக்கோட்டையின் நிர்வாகப் பொறுப்பை வகித்த சேஷையா சாஸ்திரி.

என் ஊர்!

புதுக்கோட்டை நகரை நவீனமாக நிர்மாணிப் பதற்காக ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸையும் புதுச்சேரியையும் பார்வையிட்டு வர, தனிக் குழுக்களை அவர் அமைத்தார். இதன் தொடர்ச்சியாக நகரின் நடுவில் அரண்மனை, அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் தலா நான்கு அடுக்கு முறையில் 16 வீதிகள், மழை நீரைச் சேமிக்கும் வகையில் மேட்டுப் பகுதியான மச்சுவாடியில் தொடங்கி காட்டுப் புதுக்குளம் வரை 36 குளங்கள் என்று புதுக்கோட்டை உருவானது.

என் ஊர்!

அந்தக் காலத்தில், புதுக்கோட்டையில் குடியிருப்புகளின் முன்புறம் கால்வாய்கள், பின் புறத்தில் கழிவு நீர்க் கால்வாய்கள் இருக்கும்.  இதனால், எவ்வளவு மழை பெய்தாலும் சாலைகளிலோ தெருக்களிலோ புதுக்கோட்டை யில் தண்ணீர் தேங்காது.  அக்காலத்தில் தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பல நகரங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த  நகரம் இது.

புதுக்கோட்டைக்கு என்று தனிக் கலாசாரம் உண்டு. பழமையும் நவீனமும் இரண்டறக் கலந்த கலாசாரம். புதுக்கோட்டையில் புழக்கத்தில் இருந்த அம்மன் நாணயங்கள்கூட தனித்துவமானவை. மன்னர் குடும்பத்தோடு இப்பகுதி மக்களுக்கு நெருக்கமான உறவு உண்டு. ஊரின் முக்கிய அடையாளம், திருக் கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில். இங்கு நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழா, சித்திரைத் திருவிழா போன்ற திருவிழாக் காலங்களில், சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்து, 10 நாட்கள் தங்கி மன்னர் குடும்பத்தோடு திருவிழாவைக் கொண்டாடிவிட்டு ஊர் திரும்புவது வழக்கம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 3.3.1948-ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜா ராஜகோபால தொண்டைமானால் கஜானா உட்பட அனைத்து நிர்வாகமும் முழுமையாக இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இன் றைக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி அலுவலகமாக இருக்கும் இடம், எங்கள் புதிய அரண்மனை. மன்னர் காலத்தில் இப்பகுதி கல்வி வளர்ச்சிக்காகவே  கட்டப்பட்டதுதான் மன்னர் கல்லூரி. அரசுத் தலைமை மருத்துவ மனையும் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இன்றைக்கு சென்னை அருங்காட்சியகத்துக்கு அடுத்து, தமிழகத்திலேயே முக்கியமான அருங்காட்சியகமாகத் திகழும் புதுக்கோட்டை அருங்காட்சியகம், 1910-ம் ஆண்டு மன்னர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இப்படி மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடந்த இடம் புதுக்கோட்டை.

ஒரு காலத்தில் புதுக்கோட்டையின் முக்கியத் தொழிலாக நெசவுத் தொழில் இருந்தது. குறிப் பாக திருவப்பூரில் தயாரிக்கப்படும் சாய வேட்டிக்கு என்று தனி மரியாதை உண்டு.

'எல்லாரும் கட்டும் வேட்டி
அந்த வேட்டி இந்த வேட்டி
என் புருஷன் கட்டும் வேட்டி

புதுக்கோட்டை சாய வேட்டி!’ என்ற தெம்மாங்குப் பாடல் மூலம் புதுக்கோட்டை நெசவுக்கு உள்ள பெருமையை அறியலாம். அதேபோல, மண்பாண்டத் தொழிலும்  பிரசித்திப் பெற்ற ஒன்று. இன்றும் மழையூர், திருவப்பூர் பகுதிகள் மண் பாண்டக் கலையில் தமிழக அளவில் பெயர் பெற்று திகழ்கின்றன.

கலைகள் செழித்த இடம் புதுக்கோட்டை. புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர்கள் தட்சிணா மூர்த்தி பிள்ளை, ரெங்கநாயகி, நாடக மன்னர் பி.யூ.சின்னப்பா, 'காதல் மன்னன்’ ஜெமினி கணேசன், ஏ.வி.எம் ராஜன் ஆகியோரின் சொந்த ஊர் புதுக்கோட்டைதான். தீரர் சத்தியமூர்த்தி, தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி போன்ற வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த மண் இது.

என் ஊர்!

புதுக்கோட்டையின் மிகப் பெரிய கொண் டாட்டங்கள் திருவப்பூர் மாரியம்மன் கோயில் பூத்திருவிழாவும் நார்த்தாமலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவும். இந்தத் திருவிழாக்களின்போது நடக்கும் கரகாட்டம், நாடகங்களுக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. உணவு என்று எடுத்துக் கொண்டால், முந்திரிக்கும் மீனுக்கும் முக்கிய இடம் கொடுப்பார்கள் எங்கள் ஊர்க்காரர் கள்.

ஒருபுறம் புதிய நாகரிக மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டாலும் கலாசார அளவில் இன்றும் தங்கள் மரபு களைப் பேணுபவர்கள் நாங்கள். கோயில் திருவிழாக்களில் தொடங்கி, வீட்டு விசேஷங் கள் வரை அனைத்திலுமே, இதைப் பார்க்க முடியும். பழைய பெருமையோடு புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கிறோம் நாங்கள்!''

-   ச.ஸ்ரீராம், படங்கள்: பா.காளிமுத்து

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு