Election bannerElection banner
Published:Updated:

வெளிச்சம் காட்டும் கல்வித் தாய்!

அரியலூர் ஆச்சர்யம்

##~##

திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரின் அறை அது. ஷெரின் காத்து இருக்கிறார். உடன் பரிதாபமாக நிற்கும் அந்தக் கல்லூரி மாணவரை இரண்டு  தினங்களுக்கு முன்புதான் தேர்வுக் கட்டணம் கட்ட வில்லை என்று விரட்டி அடித்து இருந்தது கல்லூரி நிர்வாகம். மாணவன் சார்பாக முதல்வரிடம் மேலும் சில தினங்கள் அவ காசம் கேட்டு மன்றாடுகிறார் ஷெரின். கெஞ்சல்... கொஞ்சம் மிஞ்சல்... எதற்கும் கல்லாக மசியாது இருக்கும் முதல்வர் காலில் ஒரு கட்டத்தில் தடால் என்று விழுகிறார் ஷெரின்.  அதிர்ச்சியோடு அவகாசத்தை நீட்டிக்கிறார் முதல்வர். மாணவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகி றார். அங்கே இங்கே அலைந்து, கொடுக்கப் பட்ட கெடுவுக்குள் அந்த மாணவனின் கல்விக் கட்டணம் ஷெரினால் கட்டப்படுகிறது. நா தழுதழுக்கும் மாணவனிடம் இருந்து விடைபெறுகிறார் ஷெரின். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், முந்தைய நாள் வரை ஷெரினுக்குக் கொஞ்சமும் அறிமுகம் இல்லாதவர் அந்த மாணவர்!

வெளிச்சம் காட்டும் கல்வித் தாய்!

 உங்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்க லாம். ஷெரினை அறிந்தவர்களுக்கு இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

யார் இந்த ஷெரின்?

சில வருடங்களுக்கு முன்பு அரியலூரில் 'வெளிச்சம் குழந்தைகள் மையம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார் ஷெரின். தமிழகம் முழுவதும் கல்விக்காக யார் எல்லாம்  அல்லாடுகிறார்களோ, அவர் களுக்கு எல்லாம் ஷெரினின் ஹாட் லைன் (96981 51515) உதவுகிறது. 35 வயது தான் ஷெரினுக்கு. ஆனால், சுமார் 600 மாணவ - மாணவியர், ஷெரினை 'கல்வித் தாய்’ என்று கொண்டாடுகிறார்கள்.

எம்.பி.பி.எஸ். தொடங்கி டீச்சர் டிரெய்னிங் வரை எந்தப் படிப்பானாலும், கவுன்சலிங், கல்விக் கட்டணம், வங்கிக் கடன், தங்கும் வசதி, பாடப் பொருள்கள் என அனைத்துக்கும் அபயம் அளிக்கிறார் ஷெரின். உதவும் நெஞ்சம் உள்ள ஸ்பான்சர்கள் பலர் குறித்து உள்ளங்கையில் தகவல்கள் வைத்து இருக்கும் ஷெரின், உரிய காலத்தில் உதவி தேவைப்படும் மாணவருக்கும் ஸ்பான்சர்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகிறார்.  மசியாத வங்கிகள், கல்லூரி நிர்வாகங்களுக்கு எதிராக, வீதியில் இறங்கியும் போராடுகிறார்.

''குடும்பத்தினரின் அரவணைப்பு கிடைக் காமல் வளர்ந்தவள் நான். என்னுடைய கறுப்பு நிறம், சமூக அளவில் என்னைத் தள்ளிவைத்தது. சிதைந்துப் போய் இருக்க வேண்டிய என்னுடைய வாழ்க்கையை, நெல்சன் மண்டேலாவின் 'உன் ஆற்றலை நீ இந்தச் சமூகத்துக்கு உணர்த்தும்போது, இந்தச் சமூகம் உன் புறத்தோற்றத்தை மறந்து விடும்’ என்ற வரிகள் புரட்டிப்போட்டன. என் சுயத்தை, அதன் ஆற்றலைத் தரிசிக்க விரும்பி னேன். அதன் வெளிப்பாடுதான் 'வெளிச்சம்’ அமைப்பு. இந்த முயற்சியின் பாதையில் ஆணாதிக்கம், சமூகத்தின் கோர வக்கிரம், சாதிய அடக்குமுறை, பணத் திமிர், ஏமாற்று அரசியல்... என எல்லா இருட்டுப் பக்கங்களையும் பார்த்து இருக்கிறேன். ஆனால், எல்லாவற் றையும் மீறி அரியலூரைச் சுற்றி உள்ள கிராமங்களில் ஏற்றப் பட்ட 'வெளிச்சம்’ இன்று மாநிலம் முழுவதும் ஏழை மாணவ, மாணவி களுக்கு ஒளி காட்டிக் கொண்டு இருக்கிறது.

சென்ற வருடத்தில் 'வெளிச்சம்’ தந்த பாதையில் படிப்பை முடித்தவர்கள் தாங்கள் பெற்ற உதவிக்குக் கைமாறாக, மாதத்தில் சில தினங்களை ஒதுக்கி அடுத்தகட்ட மாணவர்களுக்குக் கை கொடுக்கிறார்கள். தங்களது கிராமத்தில் காசு வாங்காது ட்யூஷன் வகுப்பாவது எடுக்கிறார்கள். தங்களைப்போல் சிரமப்படும் கல்லூரி மாணவருக்காகத் தெருத் தெருவாக உண்டியல் ஏந்தி 'கற்கை நன்றே’ என்று பிச்சை எடுக்கிறார்கள். 'வெளிச்சம்’ பிரகாசமாகத் தெரிகிறது. கடைசி ஏழை மாணவனுக்கும் அது வழி காட்டும்!''

-கம்பீரமாக ஒலிக்கிறது ஷெரினின் குரல்!

- எஸ்.சுமன்

வெளிச்சம் காட்டும் கல்வித் தாய்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு