Published:Updated:

என் ஊர்!

நான் வேறு என் ஊர் வேறு இல்லைப்பா!

##~##

''என் பெயரை தனியாச் சொன்னா, என் சொந்தக்காரங்களுக்குக்கூட தெரியாது. ஆனா, என் ஊர்ப் பேரைச் சொன்னாலே என் பெயர் ஞாபகத் துக்கு வந்துடும். அப்படி ஒரு பிணைப்பு எனக்கும் என் ஊருக்கும்!''-  பெருமை பொங்கத் தன் ஊரின் கதை பேசுகிறார் தவில் வித்வான் 'அரித்துவாரமங்கலம்’ ஏ.கே.பழனிவேலு!

 ''பெருமாளின் தசாவதாரத்தில் எங்க ஊருக் கும் பங்கு உண்டு. சிவனின் அடியைக் கண்டு, பிரம்மனை பந்தயத்தில் வெற்றிகொள்ள விஷ்ணு வராக அவதாரம் எடுத்து மண்ணைத் துளையிட்ட ஊர் இது. 'ஹரி துவார மங்கலம்’ காலப்போக்கில் மருவி அரித்துவாரமங்கலம் ஆகிவிட்டது. சுமார் 1,400 வருஷப் பழமைமிக்கது இங்கு உள்ள பாதாள ஈஸ்வரர் கோயில்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்!

பெரிய தலைக்கட்டு எங்க ஊர். கிட்டத்தட்ட 1000 குடும்பங்கள் வாழ்கின்றன. இவ்வளவு பேர் வாழ்ந்தாலும், சாலை, மின்சாரம்னு அடிப்படை வசதிகளே இப்பதான் கிடைச்சிருக்கு. ஆனா, இந்த வசதிக் குறைவு எதுவும் எங்க ஊர்க்காரங்களோட வளர்ச்சிக்குத் தடையா இல்லை.

எனக்கு முன்னாடியே புகழ் பெற்ற ஆளுமைகள் பலர் இங்கே வாழ்ந்து இருக்காங்க. கோபாலகிருஷ்ண நட்டுவனாரும் வேணுகோபால் நட்டுவனாரும் எங்க ஊர்க்காரங்கதான். கோபாலசுவாமி ரகுநாத ராஜாளி யார் எங்க ஊர்க்காரர்தான்.

என் ஊர்!

எங்க அப்பாவும் தவில் வித்வான்தான். ஆனா, என்னவோ அவரால் பேர் எடுக்க முடியலை. அதனால், சின்ன வயசுலயே எனக்குத் தவில் ஆர்வம் வந்துடக் கூடாதுங்கறதில் அவர் குறியா இருந்தார். ஆனா, ரத்தத்தில் கலந்தது சும்மா இருக்குமா என்ன? அப்பா வுக்குத் தெரியாமல் தவில் எடுத்து வாசிக்க ஆரம்பிச்சேன். அப்ப எனக்கு ஏழு வயசு இருக்கும். நான் வாசிக்கறதைக் கேட்டு ரசிச்ச ஒரு பெரியவர் ரெண்டணா கொடுத்தார். கச்சேரியிலேயே அப்பா காலணா, அரையணாவும் சன்மானமா வாங்கிட்டு இருந்த காலம் அது. நான் அந்த ரெண்டணாவைக் கொண்டுபோய் அம்மாக்கிட்ட கொடுத்தேன். 'போய் முருகன் சந்நதியில் சூடம் வாங்கிக் கொளுத்துப்பா’ன்னாங்க. அப்ப முருகன்கிட்ட 'நான் ஒரு பெரிய தவில் வித்வான் ஆகணும்’னு வேண்டிக்கிட்டேன். இன்னிக்கும்   நான் உலகத்தில் எந்த மூலைக்குப் போனாலும், எந்தக் கடவுள் முன்னாடி நின்னாலும் மனசுல நினைச்சுக் கும்பிடறது எங்க ஊர் முருகனைத் தான்.

கொஞ்ச நாள்ல அப்பாவுக்குத் தெரிஞ்சு போச்சு. சரி, இவன் சொல்லித் திருந்த மாட் டான்னு முடிவு பண்ணி, 'வா நானே உனக்குச் சொல்லித் தர்றேன்’னுட்டு, தவில் மேல் வெறுப்பு வரணும்கிறதுக்காகவே ரொம்பக் கஷ்டமான விஷயங்களா சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சார். அப்புறமும், என் ஆர்வம் குறையாததால், திருச் சேறை முத்துக்குமார சுவாமி பிள்ளைகிட்ட சிஷ்யனாச் சேர்த்தார்.

அந்த நாள்ல ரேடியோவுக்குப் பெரிய மவுசு. ஊர்ல டீக்கடை உண்டு. புள்ளைக் கடைனு சொல்வோம். அங்க பேட்டரி ரேடியோ இருக்கும். மெதுபக்கோடா அங்கே ரொம்பப் பிரமாதமா இருக்கும். அப்ப நாங்க கண்ட சந்தோஷம் இது ரெண்டும்தான். சிறு பசங்க திருக்குளத்தில்கிடப்போம். கொஞ்சம் காசு வந்தா, அம்மாப்பேட்டை டாக்கீஸுக்குப் படத்துக்குப் போவோம்.

எங்க ஊரோட தனி ருசின்னா, விரால் மீன் சமையல். ஊர்ல நாலு குளங்கள் இருக்கிறதால், விராலுக்குப் பஞ்சம் வந்ததே இல்லை. இன்னொண்ணு... இளநீர்.

திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் நாயனார் நாடகம் போடுவோம். உள்ளூர்க் காரங்களே நடிப்பாங்க. மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது, அரிச்சந்திரா நாடகம். வெளி ஊரில் இருந்து ஆளுங்க வருவாங்க. ரெண்டுமே ரொம்ப விசேஷமா இருக்கும்.

என் ஊர்!

பின்னாடி வசதி வாய்ப்புகள் எவ்வளவோ பெருகினாலும், 1998 வரைக்கும் இங்கேயேதான் இருந்தேன். இப்பவும் சரி மாசத்துக்கு ஒரு தடவை இங்கே வந்துடுவேன். நாடி நரம்பு எல்லாம் பக்தியோட எங்க ஊர் கோயில்ல உட் கார்ந்து வாசிக்கிறதில் உள்ள சந்தோஷம் எனக்கு வேற எங்கேயும் கிடையாது. நான் வேறு, என் ஊர் வேறு இல்லைப்பா!''

- க.ராஜீவ்காந்தி, படங்கள்: ந.வசந்தகுமார்