Published:Updated:

வாழ்க்கையே தவம்!

வாழ்க்கையே தவம்!

##~##

திருச்சி - கரூர் சாலையில் காவிரியின் தென்கரை ஆன அல்லூரில் இருக்கிறது, திருவள்ளுவர் தவச்சாலை. திருக்குறளையே வாழ்வு நெறியாகக்கொண்டு வாழ்ந்து, தமிழ் ஆய்வுப் பணிக்குத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துவிட்ட இரா.இளங்குமரனார் நிறுவிய தவச் சாலை இது. இதுவரை 400 நூல்களை எழுதி இருக்கும் இளங்குமரனார், ஏறத்தாழ 4,000 மணமக்களுக்குத் தமிழ் நெறி திருமணங்களை நடத்தி இருக்கிறார். தமிழகத்தில் இவர் கால் படாத சொற்பொழிவு அரங்குகளைத் தேட வேண்டும். தனது பணிகளுக்காக, 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்று இருப்பவர்!

''என் 12-வது வயதில் திருக்குறளை முழுமையாக மனப்பாடம் செய்தேன். அப்போதே என் வாழ்வை திருக்குறள் நெறிப்படி அமைத்துக்கொள்வது என்று முடிவு எடுத்தேன். இளமை முதல் கவிதை எனக்கு இயல்பாகவும், எளிமையாகவும், எதுகை மோனையோடும் வந்து விழும். அதனால், பள்ளிக் காலத்தில் இருந்தே உரையாற்றத் தொடங்கிவிட்டேன். என்னுடைய 16-வது வயதில் எனக்குத் திருமணம் நடந்தபோது, அரசுப் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியர் பணியும் கிடைத்தது. அரசுப் பள்ளி என்பதால், 'கட்டுரை எழுதக் கூடாது. கூட்டங்களில் பேசக் கூடாது’ என்று தடை விதித்தார்கள். அதனாலேயே அந்த வேலையைத் துறந்தேன். வேறு ஒரு தனியார் பள்ளியில் சேர்ந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாழ்க்கையே தவம்!

திருமணமும் சரி, மற்ற சடங்குகளும் சரி... அவரவர் தாய்மொழியில் நடத்துவதே அறம். அதனால், 20 வயதில் இருந்து தமிழ் நெறியில் திருமணம், புதுமனை புகுதல், மணி விழா போன்றவற்றை நடத்த ஆரம்பித்தேன். சொற்பொழிவுகளுக்கும் சென்று வந்தேன். திருக்குறள் பற்றிய ஆய்வு, சொல் அகராதி தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதினேன்!'' என்பவர் திருச்சியில் குடி புகுந்த கதைக்கு வந்தார்.

''சொந்த ஊர் நெல்லை மாவட்டம். பணி ஓய்வு பெற்று இருந்தது மதுரையில். இருப்பினும் அங்கு இருந்து சொற் பொழிவுகளுக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்திவைக்கவும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் சென்று வருவது சிரமமாக இருந்தது. எனவே தமிழகத்தின் மையத்தில் இருக்கும் திருச்சியில் காவிரிக் கரையோரமாகத் தவச் சாலையை அமைத்து குடி புகுந்தேன்'' என்பவர், தனது இருப்பிடத்தில் ஓர் ஆய்வகத்தையும் நிறுவி உள் ளார். தமிழ் ஆய்வுப் பணிக்குத் தேவையான புத்தகங்கள் குவிந்துகிடக்கின்றன.

1860-ம் ஆண்டு வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியின் முதல் பதிப்பு இருக்கிறது. 'திருவிடர் கழகம்’ என்ற அமைப்பை விருதை சிவஞான யோசிகர் என்பவர் குற்றாலத்தில் 1913-ல் தொடங்கினார். அப்போது வெளியிடப் பட்ட நூல் இருக்கிறது. திவாகர நிகண்டு என்ற ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட நூல், பாவாணரின் கையெழுத்து படி... இப்படி பல அரிய பொக்கிஷங்கள் இங்கே இருக்கின்றன.

வாழ்க்கையே தவம்!

சங்க இலக்கியம், பிற்கால இலக்கியம், சிற்றி லக்கியம், இலக்கணம், அகராதிகள், கல்வெட்டு செப்பேடு, இசை நூல்கள், சமய நூல்கள் என அரிய நூல்கள் கொட்டிக்கிடக்கின்றன. ''ஆராய்ச்சி யில் ஈடுபட்டு இருப்போரும் நூல்களை எழுதுவோரும் இங்கே தேடி வருகி றார்கள். இங்கேயே அமர்ந்து படிக்கத்தான் அனுமதி. கொண்டுசெல்ல அனுமதி இல்லை. புத்தகங்களை குழந்தைகளைப்போல் கையாள வேண்டும். புத்தகங்களின் அருமை தெரியாத வர்களுக்கு அது தெரியாது!'' என்று சிரிக்கிறார் இளங்குமரனார்.

தற்போது 'செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம்’ என்ற நூலை எழுதும் பணியில் ஈடுபட்டு உள்ளார். ''தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன பொருள். எப்படி அந்தச் சொல் பிறந்தது என்பதைப்பற்றி ஆய்வு செய்யும் நூல். நடுவண் அரசின் நிதி உதவியால் எழுதுகிறேன். 4,000 பக்கங்கள் வரும்!'' - எழுத உட்காருகிறார் இளங்குமரனார்.

- ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்