என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

சோழ மண்ணின் நுழைவாயில்...

##~##

''வாய் மணக்க தாம்பூலம், வெற்றிலையால் சிவந்த பற்கள், புகையிலைக் கீற்றின் நறுமணம் மற்றும் அது தரும் மயக்கத்தைக் காட்டும் கண்கள் ஆகியவற்றோடு வெற்றிலையைக் குதப்பி துப்பிவிட்டுப் போவதுபோல, வெளிப்படையான பேச்சுடன் விவாதங்களையும் கடந்து செல்கிற மக்கள் வாழ்கிற ஊர் எங்கள் சீர்காழி!'' கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறார் தமிழிசைக் கலைஞர், சீர்காழி சிவசிதம்பரம். 'சீர்காழி’ என்றவுடன் இவர் பாடலில் இருக்கும் சந்தோஷத் துள்ளல் பேச்சிலும் எதிரொலிக்கிறது.

'

என் ஊர்!

'சோழ மண்ணின் நுழைவாயில் சீர்காழி. பசுமை தொடங்குகிற இடம் அது. 'ஏலேய்... கொள்ளிடத்து வண்ட படிஞ்சதும் பேச்சு தடிக்குது’ என்று சீர்காழிக்காரர்களின் குரல் குணத்தை அடையாளப்படுத்துகிற வாசகங்களை இன்றும் காவிரி மண்ணில் கேட்க முடியும். ஒருபுறம் காவிரியில் இருந்து கிளை நதியாகப் பிரிந்து வாய்க்காலாகப் பாய்கிற கொள்ளிடம் கொடுக்கும் வளம் மறுபுறம் திருமுல்லைவாயல் கடற்கரை, பச்சைப் பசேல் விவசாயம், அபிராமி அந்தாதி வழிந்தோடும் ஒலிப்பெருக்கிகள் சூழ்ந்த கோயில் கோபுரங்கள் என சீர்காழி அவ்வளவு அழகு!

எங்களுடைய முன்னோர் நாகூரில் வாழ்ந்தவர்கள். மிட்டாய் வியாபாரம். வியாபாரத்தைப் பெருக்க நகரங்களை நோக்கிச் சென்றார்கள். அப்படி நாங்கள் வந்தடைந்த இடம் சீர்காழி. நாகேஸ்வரா கோயில் அருகில் இந்தப் பகுதியில் முதல் மிட்டாய்க் கடை திறந்தவர்கள் நாங்கள்தான்.

திருஞானசம்பந்தர் பிறந்து மூன்று வயதில் ஞானப் பால் அருந்திய இடமும் சீர்காழிதான். ஞானசம்பந்தர் அருந்திய பாலின் சில துளிகள், பிரம்மபுரீஸ்வரர்-திரிபுரசுந்தரி திருக்கோயில் குளத்திலும் விழுந்ததாலோ என்னவோ, இங்கே இசையும் ஆன்மிகமும் தழைத்தோங்குகிறது என்பார்கள் ஊர்ப் பெரியவர்கள். இன்றைக்கும் சீர்காழியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் முதல் தீர்த்தமாக அந்தக் குளத்து நீரைத்தான் அருள்வார்கள். நான் சென்னை இசபெல்லா மருத்துவமனையில் பிறந்து இருந்தாலும் எனக்குக் கொடுக்கப்பட்ட முதல் தீர்த்தமும் திருக்குளத்து நீரே!

என் ஊர்!

விவசாயமும் மீன் வளமும் சீர்காழியின் முக்கியப் பொருளாதாரங்கள். வயிற்றுக்கு வஞ்சனை செய்யாதவர்கள் சீர்காழிக்காரர்கள் என்றால் அது மிகையாகாது. 'ரத்னா கஃபே’, 'மங்கள விலாஸ்’, 'சீர்காழி ஆயர்பாடி மெஸ்’, பரோட்டாவுக்குப் பேர் போன 'கட்ட முதலியார் கடை’, முட்டை பொடி மாஸ், லாப்பாவுக்குப் பேர் போன 'முருகன் கடை’ என எங்கள் ஊர் உணவகங்கள் பெயரைச் சொன்னாலே நாவில் நீர் ஊறும்.  எள், வெள்ளம் சேர்த்து செக்கில் ஆட்டிய எண்ணெயைக்கொண்டு செய்த விரால் மீன் குழம்பை கை அகல இட்லியுடன் தொட்டுச் சாப்பிட சீர்காழிக்குத்தான் வர வேண்டும்!

அந்தக் காலத்தில் சீர்காழியில் ஐந்து திரையரங்குகள் இருந்தன. இப்போதுபோல சேர், பெஞ்ச் எல்லாம் கிடையாது. மூங்கிலால் செய்யப்பட்ட ஈஸி சேர்கள்கொண்ட திரையரங்குகள் அவை. திரையரங்குகள் இருந்தபோதும் நாடகங்களும் கச்சேரிகளும் வளர்ந்துதான் வந்தன. எம்.ஜி.ஆர். நடித்த 'இன்பக் கனா’ நாடகம் இங்குதான் அரங்கேறியது.

என் ஊர்!

அப்போது இருந்ததுபோலவே இப்போதும் பல வீடுகளில் திண்ணைகள் இருக்கின்றன. வீட்டுக்கு யார் வந்தாலும் தாம்பூலத் தட்டும், ஒரு சேர், காபியும் திண்ணைக்கு வந்துவிடும். அப்படியான உபசரிப்பு சீர்காழிக்கே உரித்தானது. வெற்றிலை போடும் முறையை வைத்து உங்களின் மனப்பாங்கை, குணத்தைத் தெரிந்துகொள்பவர்களாக சீர்காழி மனிதர்கள் இருக்கிறார்கள்.

தோணியப்பர் ஆலயம் மற்றும் சீகன் பால்கு ஜூபிலி ஆலயம், திருமுலைப்பால் உற்சவம், 'ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்திய கதை’ கொண்ட கழுமலை கோயில், தனியார் மற்றும் அரசு இரண்டின் கூட்டுறவோடு தொடங்கப்பட்ட முதல் பாலிடெக்னிக், மாணவர் விடுதி, அதனோடு இணைந்த எல்.எம்.சி. மேனிலைப் பள்ளி ஆகியவை தரும் பெருமைகளோடு நாகஸ்வர இசையும் தேவாரமும் இடையறாது ஒலித்து, மக்களை இன்புற்றிருக்கச் செய்யும் சீர்காழி... என்றும் உன் பேர் வாழி!''

- ந.வினோத்குமார், படங்கள்: எம்.ராமசாமி