என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

நிஜ கில்லிகளின் சந்திப்பு!

காவிரி கபடி ஹீரோக்களின் ஃப்ளாஷ்பேக்!

##~##

லக்குடி பொத்தாரி, காக்கா ஜெகந்நாதன், விஸ்ணம்பேட்டை அம்பல்ராஜ், ரவிச்சந்திரன், பால்ராஜ், பண்டரிநாதன்...

 -முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் தங்களுடைய அனல் கிளப்பும் கபடி ஆட்டத்தால், காவிரி மாவட்டங்களைக் கலக்கிய நிஜ கில்லிகள். கால வெள்ளத்தால் ஆளுக்கொரு திசைகளில் சிதறிவிட்ட இவர்களை பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் சந்திக்க வைத்தோம். இளமைக் காலத்தில் அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றங்கரையில் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

நிஜ கில்லிகளின் சந்திப்பு!

''எல்லாரும் ஒண்ணா சந்திப்போம்னு நெனைச்சுக்கூடப் பார்க்கலை!'' என அம்பல்ராஜ் பரவசப்பட, ''இதே 25 வருஷத்துக்கு முன்னால இருந்தா, இப்படி சாதாரணமா நின்னு பேசிக்கிட்டு இருக்க முடியுமா... ஊரே கூடியிருக்கும். அதுவும் ஊருக்குள்ள பொத்தாரி வந்திருக்காராங்குற விஷயம் தெரிஞ்சா, சுத்துப்பட்டு கிராமங்கள்ல இருந்து இளவட்டப் பயலுவள்லாம் படை எடுத்துடுருப்பாங்கள்ல!'' என்கிறார் பண்டரிநாதன்.

''பொத்தாரி விளையாடுறாருனா அன்னிக்குக் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பார்வையாளர்கள் வருவாங்க. இவ்வளவுக்கும் மேட்ச் பார்க்க அப்பெல்லாம் காசு குடுத்து டிக்கெட் வாங்கணும். சென்னையில நடந்த போட்டியில திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக அணிக்காக விளையாட நான், பொத்தாரி எல்லாம் போயிருந்தோம். எதிர் அணியா வந்திருந்த சோழன் போக்குவரத்துக் கழக அணி வீரர்கள், திடீர்னு பொத்தாரியோட காலைத் தொட்டுக் கும்பிட்டாங்க. இது அப்ப ரொம்பவே பரபரப்பாப் பேசப்பட்டுச்சு!'' என அம்பல்ராஜ் பேசிக்கொண்டே போக, ''யப்பா என்னையும் கொஞ்சம் பேச விடுங்க!'' என கரகர குரலில் பேச்சைத் தொடங்கினார் பால்ராஜ்.

''அப்ப கபடியில் 'பொத்தாரி கேம்’னு ஒரு தனி ஸ்டைலே இருந்துச்சு. எதிர் அணி ஏரியாக்குள்ள, தொடையைத் தட்டிக்கிட்டே டான்ஸ் ஆடுற மாதிரி, அப்படியே அங்க இங்க நகர்ந்து, திடீர்னு முரட்டுக் காளை மாதிரி சீறிப் போயி, ஒரே சமயத்தில் கையால, தலையால, காலால நாலஞ்சிப் பேரை அவுட் ஆக்கிடுவார்!'' என்கிறார் பால்ராஜ்.

நிஜ கில்லிகளின் சந்திப்பு!

''என்னைவிட காக்கா ஜெகந்நாதன்தான் நிறைய சாதிச்சு இருக்கார். இந்தப் பகுதி இளைஞர்களுக்குத் தன்னோட சொந்தச் செலவில் பயிற்சி கொடுத்து, அவங்களை அகில இந்திய அளவில் பேர் எடுக்கவும்வெச்சவர் அவர்'' என்று பாராட்டுகளை மடைமாற்றுகிறார் பொத்தாரி.

''நீங்க மட்டும் என்ன சாதாரண ஆளா, எதிர் டீம் ஆளோட கெண்டைக் காலை அப்படியே ஒரே கையால் புடிச்சி தூக்கிக் கீழே தள்ளிடுவீங்க.  ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவா இருந்த வடநாட்டுக்காரங்களே உங்களைக் கண்டா நடுங்குவானுங்களே. திருச்சியில் உங்க ஆட்டத்தைப்பார்த்து மிரண்டு போய்தானே சீஃப் கெஸ்டா வந்திருந்த டி.ஐ.ஜி. போலீஸ்ல வேலை போட்டுக் கொடுத்தார்?'' என ரவிச்சந்திரன் ஆட்டத்தை நினைவுகூர்ந்தார் காக்கா ஜெகந்நாதன்.

''அம்பல்ராஜ் மட்டும் சும்மாவா? கேப்டனாகவும்  ஆல் ரவுண்டராகவும் கலக்குனவருல்ல அவரு? 1982-ம் வருஷம் நம்ம அம்பல்ராஜ் கேப்டனா இருந்தப்பதான், சென்னை பல்கலைக் கழக அணி, குஜராத்துல நடந்த அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கபடி போட்டியோட இறுதி ஆட்டத்தில், மங்களூர் பல்கலைக்கழக அணியை தோற்கடிச்சுது. இந்திய அளவிலான சிறந்த வீரர் விருதும் ஜெயிச்சாரே!'' என அம்பல்ராஜின் பெருமைகளை நோக்கி பேச்சு நகர்கிறது.

''ஆனா, நெருக்கடியான நேரங்கள்ல நம்ம பால்ராஜ்தான் என்னைக்கும் ஹீரோ. கொஞ்சம்கூட பதற்றம் இல்லாம எதிர் டீமை பிரிச்சி மேஞ்சுடுவார்'' என பால்ராஜைப் பெருமைப்படுத்துகிறார் அம்பல்ராஜ்.

''நம்மள விடுப்பா, எந்நேரமும் நாம பயிற்சி எடுத்துக்கிட்டே இருந்ததுனால் நல்லா  விளையாடினோம். ஆனா, நம்ம பண்டரி, பயிற்சிக்கே வர மாட்டார். தன் ஹோட்டல்லயும், கடையிலும்தான் இருப்பார். ஆனா, மேட்ச் அன்னிக்கு வந்து அசத்திடுவாரு!'' என காலக்கெடு இல்லாமல் நகர்கிறது பேச்சு.

தூரத்தில் 'ஆ.. கபடி.. கபடி.. கபடி!’ என்று சடுகுடு ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் சில சிறுவர்கள்!

-கு.ராமகிருஷ்ணன், படங்கள்: எம்.ராமசாமி