என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

சிவாஜியின் இன்னொரு பாசமலர்!

சிவாஜியின் இன்னொரு பாசமலர்!

##~##

'அருள்மிகு ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயிலில் 1962-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 48 வருடங்கள் இறைப் பணியாற்றிய சாந்திக்கு, முதலாம் ஆண்டு நினைவு நாள்!’

 - திருச்சியில் வைக்கப்பட்டு இருக்கும் அந்த ஃப்ளெக்ஸ்களைப் பார்க்கும் அனைவரின் கண்களும் கலங்குகின்றன. திருவானைக்காவில் அமைந்து இருக்கிறது, அகிலாண்டேஸ்வரி - ஜம்புகேஸ்வரர் கோயில். யானை இறைவனை பூஜித்து, காவல் காத்த ஸ்தலம் என்கிறது ஸ்தல புராணம். அதனால், ஊருக்கு 'திருஆனைக்கா’ என்று பெயர். இப்படி யானையோடு நெருங்கிய தொடர்புடைய கோயிலில், கோயில் யானை சாந்தி இறந்துபோய் ஒரு வருடம் கடந்தும், புதிய யானை கொண்டுவரப்படாமல் பூஜை, புனஸ்காரங்கள் நடந்து வருவதும் சிவ பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.  

சிவாஜியின் இன்னொரு பாசமலர்!

''1962-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கொடுத்த யானை சாந்தி. தனது வீட்டில் இரண்டு வருடம் வளர்த்த யானையை, அதன் ஐந்தாவது வயதில் தானமாக அளித்தார். யானையை தனது குழந்தையைப்போல் பாசமாக வளர்த்து வந்த சிவாஜி, தனது மகள் சாந்தியின் பெயரையே யானைக்கும் சூட்டினார். திருச்சிக்கு வரும்போது எல்லாம் கோயிலுக்கு வந்து யானையைப் பாசமாகப் பார்த்துவிட்டுச் செல்வார் சிவாஜி. அவரது மனைவி கமலாவும் சாந்தி மீது மிகுந்த அன்போடு இருந்தார். சிவாஜியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன்கள் யானையின் பராமரிப்பை

சிவாஜியின் இன்னொரு பாசமலர்!

ஏற்றுக்கொண்டனர். அவரது மூத்த மகன் ராம்குமார் யானை இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் வந்து பார்த்துவிட்டு சென்றார். சாந்தியைப் பார்த்ததும், அவருக்கு சிவாஜியின் ஞாபகம் வந்துவிட்டதுபோல... யானையைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார்!'' என்று சிவாஜி குடும்பத்துக்கும் சாந்திக்கும் இடையேயான பாசப் பிணைப்பை விவரிக்கிறார்கள் கோயில் ஊழியர்கள்.

பக்தர்களுக்கும் சாந்தி ரொம்பவே செல்லம். காலை திருமஞ்சனம், மதியம் உச்சிக் காலை பூஜை இரண்டும் சாந்தியின் தினசரி பணிகள். சாமி புறப்பாடு நடக்கும் சமயங்களில் வீதியுலா உண்டு. 48 வருடங்களாக சாந்தி கோயிலில் சேவை செய்து வந்ததால், சாந்தியைத் தெரியாத திருவானைக்காவாசிகள் யாரும் இல்லை. இப்படி 48 வருடங்களாக இந்தப் பகுதி மக்கள் வாழ்வோடு கலந்துவிட்ட சாந்தி, கடந்த வருடம் ஜூலை 15-ம் தேதியோடு தனது உயிர்த் துடிப்பை நிறுத்திக்கொண்டாள்.

சாந்தியின் பாகனான ஜம்பு, ''வயதாகிவிட்டாலும் சாந்தி ஒரு குழந்தைதான். டீ, கூல்-ட்ரிங்ஸ் எல்லாம் குடிக்கும். எந்த நோய் நொடியும் அண்டாமல் ரொம்பவும் ஆரோக்கியமாகத்தான் இருந்தது. ஆனால், கடைசி ஒரு மாதமாக உடம்பு சரியில்லாமல் போய், ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டது. டிரிப்ஸ் ஏற்றின நிலையில்கூட கீழே படுத்துவிடவில்லை. இறப்பதற்கு ஒருநாள் முன்புதான் படுத்தது. மறுநாளே உயிர் பிரிந்துவிட்டது!'' என்று வருத்தப்பட்டார்.

சாந்தி இறந்த பின்னர், மனிதர்களுக்குச் செய்வதுபோலவே சாந்தி விரும்பிச் சாப்பிடும் பொருட்களைவைத்து 30-வது நாள் காரியங்கள் செய்தார்கள்.

சிவாஜியின் இன்னொரு பாசமலர்!

இப்போதும் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சாந்தி கட்டிவைக்கப்பட்டு இருந்த இடத்தை ஒரு சந்நிதியாக நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். சாந்திக்காக ஆசை ஆசையாகக் கொழுக்கட்டை செய்துகொண்டு வந்து ஊட்டி விடும் பக்தர்கள், இப்போது அதைச் சாப்பிட சாந்தி இல்லையே என்று வேதனை பொங்க திரும்பிச் செல்கிறார்கள்.

சாந்தி இறந்த பிறகு, அதற்குப் பதிலாக வேறொரு யானை கோயிலுக்கு வந்து இருந்தாலாவது பக்தர்களது வேதனை சற்றுக் குறைந்து இருக்கும். யானையை தானமாகப் பெறுவதற்கான சட்டதிட்டங்கள் நடைமுறைகள் இழுத்தடித்துக்கொண்டு இருப்பதால், இந்தக் கால தாமதமாம்.  முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில்தான் திருவானைக்கா வருகிறது. அதனால், தங்கள் யானை எதிர்பார்ப்பை அவர் விரைவில் தீர்த்துவைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கிறார்கள் திருவானைகாவாசிகள்!

- ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்