Published:Updated:

பிரிவோம் சந்திப்போம்!

காவிரியில் இளசுகளின் ஆடிக் கொண்டாட்டம்

பிரிவோம் சந்திப்போம்!

காவிரியில் இளசுகளின் ஆடிக் கொண்டாட்டம்

Published:Updated:
##~##

காவிரி மாவட்டங்களில் எப்போதுமே ஆடிப் பெருக்கு என்றால் கூடுதலாகப் பொங்கிப் பெருகும் உற்சாகம்! அதுவும், திருச்சி, அம்மா மண்டபம் படித் துறையில் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து மட்டுமில்லாமல்; வெளி மாவட்டங்களில் இருந்தும்  பக்தர்கள் திரண்டு வந்து ஆடிப்பெருக்கைக் கொண்டாடுவார்கள். இந்த வருடமும் அப்படி கூடிய பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது அம்மா மண்டபம்!

திரும்பிய திசை எங்கும் புதுமண தம்பதியர் கூட்டம். திருமணத்து அன்று அணிந்து இருந்த மாலைகளை ஜோடியாக ஆற்றில் விடும் சடங்கை வெட்கமும் புன்னகையுமாக நிறைவேற்றினர். ''மாமா... மாலையை மட்டும் ஆத்துல விட்டுட்டு வாங்க. அக்காவை விட்டுடாதீங்க!''- ஒரு குறும்பு மச்சான் குரல்விட... மனைவியின் கையை இறுகப் பற்றிக்கொள்கிறார் புது மாப்பிள்ளை. புதுப்பெண் முகத்தில் வெட்கச் சிரிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரிவோம் சந்திப்போம்!

ஆற்றில் இடுப்பு அளவு தண்ணீருக்குப் போய்விட்ட புதுமண தம்பதியர், சுற்றிலும் கூடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்து, ஆற்றில் முழுக்குப் போடுவதா வேண்டாமா என்று புரியாமல் விழிக்க... ''அங்கே என்ன வேடிக்கை? சட்டுனு மூணு முழுக்குப் போட்டுட்டு வாங்க!'' என்று கரையில் இருந்து அதட்டல் உத்தரவு பிறப்பிக்கிறார் 'கறார்’ மாமியார்!

ஆடி மாதத்தில் மனைவியைப் பிரிந்திருந்த கணவன்மார்கள், கிடைத்த சந்தர்ப்பத்தில் மனைவியோடு பழகிக்கொள்கிறார்கள். ''மூணு வாரமா உன்னைப் பார்க்காம ஏங்கிப் போயிட்டேன் தெரியுமா?'' என்று ஓர் ஓரத்தில் இருந்து குரல் கேட்கிறது.

பிரிவோம் சந்திப்போம்!

படித் துறையில் வாழை இலைப் போட்டு, அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்துவைத்து வெல்லம் கலந்த அரிசி, பழங்கள், மஞ்சள் கயிறு, குங்குமம் வைத்து கொய்யா, ஆப்பிள், நாவல் பழங்களை வைத்த தீப ஆராதனை காட்டுகிறார்கள். இன்னொருபுறம் புரோகிதர்கள் வரிசையாக அமர்ந்து இருக்கிறார்கள். ஒரு சிலர் இவர்களை நாடி மந்திரம் ஓதி தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

திருமணம் ஆன பெண்கள்... தங்களது திருமாங்கல்யத்தைப் புதுப்பித்து கணவருடைய கைகளால் கட்டிக்கொள்ள... தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி, இளம்பெண்கள் கழுத்திலும், வாலிபர்கள் கைகளிலும் மஞ்சள் நூல் கட்டிக்கொண்டனர். ''என் கையால் மஞ்சள் கயிறு கட்டிகிட்ட இல்ல. அடுத்த வருஷம் பாரு... உன் தாலிக் கயிறைப் பிரிச்சு மாட்ட உன் புருஷனோடத்தான் இங்கே வருவ?''-

மஞ்சள் கயிறைக் கட்டியவாறே மாமி ஒருவர் கூற... ''போங்க மாமி!'' என்று நாணுகிறார் அந்த இளம்பெண்.

பிரிவோம் சந்திப்போம்!

''ஆடிப்பெருக்கை ஏன் கொண்டாடுறாங்க?''- பேரன் ஒருவன் கேள்வி எழுப்ப... ''ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாசம் 18-ம் நாள் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். தென் மேற்குப் பருவத்தில் ஆற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால், ஆறுகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். இதையே ஆடிப் பெருக்குனு சொல்லுவாங்க. பதினெட்டாம் பேறுன்னும் இதைச் சொல்வாங்க. உழவர்கள் இந்த நாளில் நம்பிக்கையுடன் விதை விதைப்பாங்க. இப்போ நெல், கரும்பு போன்றவற்றை விதைச்சாதான், தை மாசத்தில் அறுவடை செய்ய முடியும். அதுக்காக, வற்றாத நதிகளைக் கடவுளாகப் போற்றி வணங்கி, பூஜைகள் செய்து பின்னர் உழவு வேலையைத் தொடங்குவாங்க!'' என்று விளக்கமாகச் சொல்லிக்கொண்டு இருந்தார் ஒரு பாட்டி!

- ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்