Published:Updated:

என் ஊர்!

அப்போது திருச்சி கிராமமாக இருந்தது!

##~##

''திருச்சி நான் பிறந்த ஊர் அல்ல; என் காதல் மனைவியின் ஊர் இது. ஆனால், எனக்குள் இருந்த வரலாற்று ஆய்வாளன் பிறந்ததும் அவன் வளர்ந்ததும் இங்குதான்!'' - திருச்சியைப் பற்றிக் கேட்டதும் தன்னுடைய இளமைக் கால நினைவுகளுக்குச் சென்றுவிட்டார் வரலாற்றியலாளர் இரா. கலைக்கோவன்.

''நதிக்கரை வாழ்க்கையைப் படித்திருந்தபோதும் ஆற்றுப் பாய்ச்சலைப் பார்த்திராத சென்னைவாசி நான். என் மனைவி திருச்சியின் காதலி. திருமணம் ஆன கையோடு அவர் விருப்பத்தின்படி, திருச்சிக்கு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்!

வந்தேன். அப்பா வரலாற்று ஆய்வாளராக இருந்தபோதிலும் அப்போது என் நாட்டமெல்லாம் நான் படித்த மருத்துவத்தில்தான் இருந்தது.

ஒருநாள் உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் குருக்கள் சிகிச்சைக்காக என்னைப் பார்க்க வந்திருந்தார். சிகிச்சை முடிந்ததும் அந்தக் கோயிலின் சிறப்புகளைச் சொன்ன அவர், என்னை ஒருமுறை கோயிலுக்கு வருமாறு அழைத்தார். பழமையான அந்தக் கோயிலில் இருந்த சைக்கிள் ஓட்டியின் சிற்பம் எனக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. 'எப்படி இந்தப் பழமையான கோயிலுக்குள் இப்படி ஒரு நவீன சிற்பம்?’ என்று நான் கேட்டபோது அங்கிருந்த யாருக்கும் பதில் தெரியவில்லை. கோயிலைப் பற்றிய குறிப்புகளிலும் கிடைக்கவில்லை. பதிலை நானே தேடிப் புறப்பட்ட பயணம்தான் என்னை வரலாற்று ஆய்வாளன் ஆக்கியது! திருச்சி என்னை சுவீகரித்துக்கொண்டதும் இந்தப் பயணத்தின்போதுதான்.

தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இடம் திருச்சிக்கு உண்டு. சங்க கால உறையூரில் இருந்து ராஜாஜியின் உப்பு சத்தியாகிரக நடைப்பயணச் சின்னம் வரை. சோழர்கள் என்றாலே, தஞ்சாவூரும் பெரிய கோயிலும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதெல்லாம் பிற்காலம். அதாவது கி.பி. 900-க்குப் பின். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே முற்காலச் சோழர்களின் தலைநகரமாக இருந்தது உறையூர். சங்க இலக்கியங்கள் அனைத்திலும் உறையூரைப் பற்றிக் குறிப்புகள் உண்டு. இங்கு உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலும் மிகப் பழமையானது. பின்னாளில், தொல்லியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது கிடைத்த பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உறையூரின் புராதனப் பெருமைக்குச் சான்றுகள்.

என் ஊர்!

சங்க இலக்கியங்கள் மற்றும் வரலாற்று எச்சங்களின் அடிப்படையில் பார்த்தால், உறையூரும் கோட்டைப் பகுதியும்தான் இன்றைய திருச்சியின் பழமையான பகுதிகள். உறையூர் தவிர்த்து ஏனைய பகுதிகள் யாவும் சின்னச் சின்ன கிராமங்கள். இன்றைக்கு நகரின் மையப் பகுதியாக இருக்கும் தில்லை நகர், ஒரு காலத்தில் வயல்கள் நிறைந்த பகுதி. நான் திருச்சிக்கு வந்த காலத்தில்கூட சாலையின் இரு மருங்கிலும் நிறைந்த  வயல்வெளிகளைப் பார்த்து இருக்கிறேன்.

திருச்சி ஒரு முழுமையான நகரமானது ஆங்கிலேயர் காலகட்டத்தில்தான். ஆங்கிலேயர்கள் திருச்சியை ரொம்பவும் நேசித்தார்கள். இன்றைக்கு நகரின் பிரதான பகுதியாக இருக்கும் கன்டோன்மென்ட் பகுதி ஆங்கிலேயர்கள் உருவாக்கியது. திருச்சிக்காக பிரெஞ்சுக்காரர்களுடன் பல போர்களைச் சந்தித்தார்கள் ஆங்கிலேயர்கள். இன்றைக்கு 'மெயின் கார்டு கேட்’டாகக் காட்சி அளிப்பது ஆங்கிலேயர்கள் போரிட்டுக் காத்த கோட்டையின் எச்சம்!

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருச்சிக்கு முக்கிய இடம் உண்டு. உப்பு சத்தியாகிரகத்தை ராஜாஜி தொடங்கியது, முதல் காதி வஸ்திராலயம் தொடங்கப்பட்டது, முதல் கதர் புடவை நெய்யப்பட்டது எல்லாமே திருச்சியில்தான். ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டத்துக்காக திருச்சி வந்தபோது இங்கு திரண்ட கூட்டத்தைப் பார்த்து வியந்துபோனார் காந்தி. இவற்றுக்கு எல்லாம் அடித்தளமாக இருந்தவர் திருச்சி மருத்துவர் டி.எஸ்.எஸ்.ராஜன். அதேபோல, திராவிட இயக்க வரலாற்றிலும் மொழிப் போராட்டத்திலும் திருச்சிக்கு முக்கிய இடம் உண்டு. பெரியார் தான் பிறந்த மண்ணைவிடவும் அதிகம் நேசித்த மண் இது!

என் ஊர்!

எதிரியையும் வசீகரிக்கும் அழகு திருச்சிக்குச் சொந்தம். பல்லவ மன்னன் மகேந்திர வர்மன், இந்த ஊரின் வனப்பையும் செழிப்பையும் நேசிப்பதாகச் சொல்கிறான். சிராப்பள்ளிக் குன்றில் குடைவரை கோயிலை நிர்மாணித்தவன் அவன்தான். தமிழ்நாட்டின் முதல் கங்காதரர் சிற்பமும் இந்தக் குடைவரையில்தான் நாடகக் காட்சிபோல சித்தரிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட குடைவரைகள் உள்ள தமிழ்நாட்டில், நின்ற கோலத்தில் விநாயகரைப் பெற்றுள்ள ஒரே குடைவரை திருச்சி கீழ்க்குடைவரைதான். திருச்சியை வரலாறு மட்டுமா வளப்படுத்துகிறது? இங்கு வாழ்பவர்களும்தான். எளிமையும் பெருமிதமும் நிறைந்த மருத்துவர்கள் மக்களுக்காகவே வாழ்ந்த, வாழும் ஊர் திருச்சி. மருத்துவ முன்னேற்றங்கள் அதிகம் இல்லாத அந்த நாளில் மருத்துவர்கள் ஜோசப், தி.வ.ரெங்கநாதன், கோ. விசுவநாதம், அர.கணேசன், மதுரம், அனந்தகிரி எனப் பலர் புதிய முறைகளைக் கையாண்டு நோய் அகற்றிய பெருமை திருச்சிக்கு உண்டு. இப்படி திருச்சியில் வாழும் ஒவ்வொரு துறையினரும் திருச்சியை வளப்படுத்துகிறோம். திருச்சி எங்களை வாழ வைக்கிறது!''

- சந்திப்பு: சமஸ், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்