Published:Updated:

பிரிட்டிஷ்காரர்களை வியக்கவைத்த கும்பகோணத்தார்!

##~##

கும்பகோணக்காரர்கள் அட்டகாசமான ஓர் இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். 'நம்ம ஊர் மேதையை நாம் போற்றுவோம்’ என்பது இயக்கத்தின் பெயர். தங்கள் ஊரில் பிறந்த மேதைகளையும் அவர்களுடைய வாழ்க்கையையும் இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதே இவ்வியக்கத்தின் நோக்கம். இயக்கத்தைத் தொடங்கி இருப்பவர் கலை விமர்சகர் தேனுகா.

''கணித மேதை ராமானுஜன் கும்பகோணத்துக்காரர். இங்குதான் அவர் படித்தார். கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்கவில்லை. ஆனால், அவரது எண்ணத்தில் தோன்றிய நூற்றுக்கணக்கான கணிதத் தேற்றங்கள் லண்டனில் உள்ள ஹார்டி போன்ற கணித மேதைகளை வியப்பு அடையச் செய்தன. அக்காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட  நோபல் பரிசுக்கு இணையான  'ஃபெலோஷிப்’ விருது, அந்நாளில் ராமானுஜனுக்கு முதன்முறையாக வழங்கப்பட்டது. இன்றைக்கும் நிகரில்லா மேதை அவர். அறிஞர் சீனிவாச சாஸ்திரியும் அப்படித்தான். ஆங்கிலேயர்களே வியக்கும் வகையில் ஆங்கிலம் பேசியவர் அவர். 'சில்வர் டங் சீனிவாச சாஸ்திரி’ என்று அவரை அழைத்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள். இப்படி... தமிழ் இலக்கிய முன்னோடிகள் ந.பிச்சமூர்த்தி, கு.பா.ரா., எம்.வி. வெங்கட்ராம், தியாகி. எம்.என்.பத்மநாப அய்யங்கார், சதாசிவ பண்டாரத்தார் என நிறைய மேதைகளை அளித்த ஊர் கும்பகோணம். ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு ஊரின் பெருமையும் தெரியவில்லை. ஊர்க்காரர்களின் அருமையும் புரியவில்லை. இந்நிலையை மாற்றவே இந்த முயற்சி!'' என்கிறார் தேனுகா.

பிரிட்டிஷ்காரர்களை வியக்கவைத்த கும்பகோணத்தார்!

''புத்தகங்களைவிடவும் நேரடியான அனுபவங்களே குழந்தைகளை எளிதில் சென்றடையும். அதனால்தான், மேதைகள் வாழ்ந்த இடங்களை நோக்கி குழந்தைகளை அழைத்துச் செல்கிறோம்!'' என்கிறார் இயக்கச் செயல்பாட்டாளர்களில் ஒருவரான மார்ட்டின்.

இயக்கத்தின் முதல் செயல்பாடாகக் கடந்த வாரம் ராமானுஜனை நினைவுகூரும் வகையில், கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளை ராமானுஜன் வாழ்ந்த வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

திண்ணை, ரேழி, முற்றம், தாழ்வாரம்  என்று பாரம்பரிய அமைப்பில் கட்டப்பட்ட அந்தக் காலத்து வீடு அது. ராமானுஜன் வாழ்ந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்படுகிறது. அந்த வீடே குழந்தைகளிடத்தில் பரவசத்தை உருவாக்கியது. வீட்டில் இருந்த ராமானுஜனின் மார்பளவு சிலை, அவர் பயன்படுத்திய கட்டில், அவருடைய கையெழுத்து அடங்கிய ஆவணங் கள் ஆகியவற்றைப் பார்வையிட்ட குழந்தைகள், பின்னர் அருகில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ராமானுஜன் அருங் காட்சியகம் அமைந்து இருக்கும் இடம் இது. ராமானுஜன் தொடர்பான சேகரிப்புகள் யாவற் றையும் பார்வையிட்டார்கள் குழந்தைகள். ஒரு நாள் முழுவதையும் ராமானுஜனோடு செலவிட்டு அவர் நினைவுகளோடு திரும்பியவர்கள் எதிர்காலத்தில் கும்பகோணத்துக்குப் பெருமை சேர்ப்பது நிச்சயம்!  

-சமஸ்  

அடுத்த கட்டுரைக்கு