##~##

''அன்றைய அம்மையப்ப நல்லூர் என்பது 18 கிராமங்கள் சேர்ந்தது, நான் பிறந்த காவனூர் உட்பட. கலிங்கத்துப் பரணி எழுதிய ஜெயங்கொண்டர் வாழ்ந்த தீபங்குடி, தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்னு அழைக்கப்படுகிற மௌனி பிறந்த செம்மங்குடி, நாகஸ்வர மேதை பிச்சையா பிள்ளை பிறந்த குளிக்கரை... எல்லாம் இந்த மண்ணின் பகுதிகள்தான். ரொம்பவும் தொன்மையான ஊர். இன்றைய இதன் பெயர் அம்மையப்பன் தமிழ்நாட்டு வரலாற்றில், கலையில் தவிர்க்கவே முடியாத ஊர் எங்களோடது!''

 - அம்மையப்பனின் கதை சொல்லத் தொடங்கினார் எழுத்தாளர் சோலைசுந்தரபெருமாள்.

என் ஊர்!

''30 வருஷங்களுக்கு முன்னாடி எங்கள் ஊருக்கு வந்து இருந்தீங்கன்னா, சூரிய ஒளி இறங்குறதை நீங்கள் பார்க்க முடியாது. அவ்வளவு பசுமையான ஊர். ஒருபுறம் ஓடம்போக்கி, இன்னொருபுறம் வாளவாய்க்கால், மற்றொருபுறம் காட்டாறுனு தண்ணிப் பஞ்சம் இல்லாத ஊர். ஊர் முழுக்க மா, பலா, வாழை, கொய்யானு மரங்கள் அடர்ந்து இருக்கும். எனக்கு இன்னும் நல்லா நெனைப்பு இருக்கு. அந்தக் காலத்தில் எங்கத் தெருவில் 10 வீடுங்கதான் இருந்துச்சு. ஆனா, அந்தச் சின்ன தெருவுக்குள்ள ஆயிரத்துக்கும் மேல மரங்கள் இருந்துச்சு!

அந்தக் காலத்தில் தஞ்சாவூர் - திருவாரூர் ராஜபாட்டையில் இருந்திருக்கு அம்மையப்பன். இன்னிக்கு ஊருக்கு நடுவில் இருக்குற மஞ்ச சத்திரம் அதுக்கு ஓர் அத்தாட்சி. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு முன்பே சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் ஒண்ணு இங்கே இருந்து அழிஞ்சுப் போச்சு. அது இருந்த இடத்துக்குப் பக்கத்தில்தான் இப்ப நாங்க சொக்கநாதர் - மீனாட்சி கோயிலை எழுப்பி இருக்கோம். காலங்காலமாகப் பல சமூகங்களும் சேர்ந்து வாழும் ஊராகவே இருந்திருக்கு, எங்க ஊர். சமணர்களும் சௌராஷ்டிரர்களும்கூட பல நூற்றாண்டுகளா இங்கே இருக்காங்க.

என் ஊர்!

திராவிட இயக்க வளர்ச்சிக்கும் கம்யூனிஸ இயக்க வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளிச்சவங்க அம்மையப்பன்காரங்க. பெரியாரோட தீவிர தொண்டர்களில் ஒருத்தராக இருந்த காவனூர் செல்லப் பிள்ளை, கணேசன், ராஜாங்கம் மூணு பேரும் திராவிட இயக்கத்தை வளர்த்தவங்க. முத்தையா சேர்வையும் ந.தருமையனும் இந்தப் பகுதியில் கம்யூனிஸ இயக்கத்தை வளர்க்க ரொம்பவே பாடுபட்டவங்க. இவங்க ரெண்டு பேரும் தேர்ந்த சிலம்பு ஆட்டக்காரங்க. அந்த ஆட்டத்தையே இயக்க வளர்ச்சிக்கும் பயன்படுத்தினாங்க. அந்தக் கால அம்மையப்பனைச் சேர்ந்த 18 கிராமத்துக்காரவங்களும் மறக்கக் கூடாத அஞ்சு மனிதர்கள் தியாகராஜ பிள்ளை, ஆனைவடபாதி முத்துகிருஷ்ண நாயுடு, பெருந்தரக்குடி கோவிந்தராஜ் பிள்ளை, வீ.சாம்பசிவம், வே.சோமசுந்தரம். தன்னலம் கருதாமல் இந்தப் பகுதி மக்களுக்காக உழைச்சவங்க இவங்க.

என் ஊர்!

எங்க ஊரோட தனித்துவமான கலை- சிலம்பு ஆட்டம். அப்ப எல்லாம் அம்மையப்பன்னு சொன்னாலே, எதிர்த்து ஆடற ஆட்டக்காரவங்க அச்சப்படுவாங்க. அப்படி ஓர் ஆட்ட மரபு எங்க ஊருக்கு உண்டு. இப்ப குளிக்கரையில் மட்டும் கொஞ்சம் பேர் ஆடறாங்க. அதேபோல, அம்மையப்பனுக்குன்னு தனிக் கூத்து மரபும் உண்டு. எங்களோட பெரிய திருவிழாவே பிடாரி அம்மன் கோயிலில் நடக்குற வைகாசித் திருவிழாவும் தை மாச அமாவாசையில் தொடங்கி மாசி மாச பௌர்ணமியில் முடியும் காமன் தகனமும்தான். சதிராட்டத்தில் பேர் போன தங்கச்சி அம்மாள், ஆர்மோனியத்தில் பேர் வாங்கின நவநீதம், பிற்காலத்தில் பெரிய நாடகக்காரவங்களா இருந்த சகுந்தலா... இவங்க மூணு பேருமே எங்க ஊர்க் காரவங்கதான்!

சாப்பாட்டுல எங்க ஊரோட தனித்துவம் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் மொச்சைப் பயறும். எங்க ஊருக்கு வர்ற விருந்தாளிங்க இங்க நாங்க வைக்கிற 'கச்ச கருவாடு போட்ட மொச்சக் குழம்பை’ மறக்கவே மாட்டாங்க. சுத்துவட்டாரக் கிராமங்களுக்கு அந்தக் காலம் தொட்டு அம்மையப்பன்தான் சந்தை. அந்தக் காலத்தில் உழைச்சு, களைச்சு ஊர்த் திரும்பும் சுத்துப்பட்டு மக்களோட ஒரே சந்தோஷம் கிட்டுப் பிள்ளை கடை அல்வாவும் ஜுபிடர் டாக்கீஸ் நாடகங்களும். காவனூர் முக்குல கடைவெச்சு இருந்த கிட்டுப் பிள்ளை அல்வாவுக்குப் பண்ணையையே பறிகொடுத்த பண்ணையார்கள் உண்டுனு சொல்வாங்க. அப்படி ஒரு ருசி. அதேபோல, ஜுபிடர் டாக்கீஸ். வருஷத்தில் பாதி நாள் நாடகம், பாதி நாள் சினிமானு எங்களை சந்தோஷப் படுத்தின அரங்கம் அது!

இப்ப, திரும்பிப் பார்க்கும்போது ஊர் நிறைய மாறிட்டது தெரியுது. அன்னைய வாழ்க்கை இன்னைய ஊர்ல இல்லை. அந்த மாதிரி சமயங்களில் நான் என் புத்தகங்கள்ல மூழ்கிடுவேன். அதுல எனக்குப் பிடிச்ச என் ஊர் இருக்கு!''

- சமஸ், படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு