Published:Updated:

காவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்!

காவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்!

##~##

லிலை மீது ஆரோகணித்து இருக்கிறார்; பூதகணங்களின் தோளில் ஏறி இருக்கிறார்; ரிஷபம், காமதேனு, மயில், அன்னம், மான், சிங்கம் என்று விதவிதமான விலங்குகளின் மீது ஒய்யாரமாக அமர்ந்து இருக்கிறார்; சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்தவாறு, வீணை வாசித்தவாறு என்று விதவிதமாக போஸ் கொடுக்கிறார்... செப்டம்பர் வந்துவிட்டால், எங்கும் பிள்ளையார்தான்! விமர்சையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஏகப்பட்ட அலங்காரங்களுடனும் ஆர்ப்பாட்டங்களுடனும் ஊர்வலம் செல்லும் பிள்ளையார்கள், கடைசியில் கரையும் இடமும் விதமும் எல்லாருக்கும் தெரியும். உருவாகும் இடமும் விதமும்?

 தமிழ்நாட்டில் சுமார் 630 குடும்பங்கள் பிள்ளையார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடியில் உள்ள சில குடும்பங்களும் இவற்றில் அடக்கம். இந்த ஆண்டு இங்கு தயாராகும் 160 விநாயகர் சிலைகள், காவிரி மாவட்டங்களில் உள்ள 126 இடங்களை அலங்கரிக்கப் போகின்றன. இந்த ஊரின் பொம்மைக்கார் குடும்பத்தினர் பிள்ளையார் தயாரிப்பில் பிரசித்திப் பெற்றவர்கள். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பழனிவேலுவை 'எப்படி உருவாகிறார் பிள்ளையார்?’ என்ற கேள்வியுடன் சந்தித்தேன்.

காவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்!

''சுக்கா மாவு, சாக் பவுடர், பேப்பர் மாவு, கல்நார் மாவு... இது நான்கையும் படிகாரம் சேர்த்து காய்ச்சிய கிழங்கு மாவோடு சேர்த்துப் பிசைந்து, தேவையான அச்சில் இடுவோம். மூன்று நாட்கள் கழித்துப் பிரித்து எடுத்து, அதில் சிமென்ட் பேப்பரை ஒட்டி கெட்டிப்படுத்துவோம்.  இப்படி அச்சுகளின் மூலமாகத் தனித் தனிப் பாகமாக உள்ளவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து பசைவைத்து ஒட்டி விடுவோம். இப்படி ஒரு உருவத்துக்கு எட்டு முதல் அதிகபட்சம் 17 ஒட்டு வரை ஒட்ட வேண்டி இருக்கும். அது முழுமை அடைந்து நன்றாகக் காய்ந்த பின்னர், கருவை மர பிசினைக்கொண்டு தயாரிக்கப்பட்ட வண்ணத்தைத் தீட்டு வோம். இவ்வளவு வேலைகளையும் செய் தால்தான் வண்ண மயமான அழகுப் பிள்ளையார் தயாரா வார்'' என்று பிள்ளையார் உருவாவதை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் பழனிவேல்.

தலை, கழுத்து, தும்பிக்கை, கைகள், கால்கள் என்று ஒவ்வொன்றாக இணைக் கப்பட்டு மொத்தமாகப் பிள்ளையார் உருவா வது மிக அழகு. அதேபோல் வண்ணம் தீட்டி முடித்து அதற்கு கண் திறந்து வைத்ததும் அதன் தெய்வக்களை கூடுகிறது. மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவான விநாயகர்கள் விநாயகர்சதுர்த்திக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக வாகனங்களில் கிளம்புகிறார்கள்.

அந்தக் காலத்தில் களிமண் பொம்மைகளைச் செய்து அதற்கு வர்ணம் தீட்டி மயிலாடு துறையில் ரயில் ஏற்றி செட்டிநாட்டுப் பக்கம் போய் அங்கு தலையில் சுமந்து சென்று விற்பார்களாம். இப்போது அதற்கு வேலை இல்லை. ஆர்டர்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. பெருகிவரும் விநாயகர் பெருமையால் உட்கார்ந்த இடத்தில் தொழில் நடக்கிறது!

- கரு.முத்து

அடுத்த கட்டுரைக்கு