Published:Updated:

டீக்கடை கச்சேரிக்குப் போவோமா?

டீக்கடை கச்சேரிக்குப் போவோமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

விடியலுக்கு அறிகுறியாகக் கிழக்கு சிவக்கத் தொடங்குகிறது. காக்கைகள், குருவிகள்கூட இன்னும் கூட்டைவிட்டு கிளம்பவில்லை. அந்த அதிகாலையிலேயே குமரமலைக்காரர்கள் வரிசை கட்டி டீக்கடை நோக்கிப் போகிறார்கள். ''என்னப்பா இந்தப் பழனிப் பய... நேத்து என்னமோ சொன்னானாமுல்ல'' எனப் பேச்சைத் தொடங்குகிறார் முருகேசன்.

 ''ஆமா கடலை மூட்டை கொண்டுபோனதில் ஏதோ பிரச்னையாம்!'' - இது சாமி.

சுப்பிரமணியன் தொடங்குகிறார், ''அட, ஆமாப்பா... எம் மருமவன் 'கடலை குடுக்கணும், எங்கே குடுக்குறது?’னு கேட்டான். சரி, நம்ம மருமவன்தானேனு நம்ம சொந்தக் காரப் பய மில்லில் சொல்லி 'நான் சொன்னேன்’னு சொல்லுடான்னேன். இவன் என்னடான்னா, களவாணிப் பய, கடலை மூட்டையை எப்படி கொண்டுபோயிருக்கான்? மூட்டையில் கீழேயும் மேலேயும் கடலையைவெச்சுட்டு நடுவால சரளைக் கல்லை அள்ளிப்போட்டு மூட்டையைத் தைச்சி கொண்டுபோய் இருக்கான். நான் சொன்னதை வெச்சு மில்லுக்காரனும் கடலைக்கு ஒரு ரேட்டைப் போட்டு பணத்தைக் கொடுத்துட்டான். பொறவால கடலையை மில்லில் அரைக்கப் போடுறப்பதேன் தெரிஞ்சிருக்கு உள்ள வெஷமம் பண்ணது. அவன் நம்மாளாச்சே, உடனே எனக்கு போன் போட்டு, 'உங்க ஊர்க்காரரு கடலை கொண்டுவந்தாரு. பணம் ஒரு ஆயிரத்தை மறந்துட்டுப் போயிட்டாரு. வந்து வாங்கிக்கச் சொல்லுங்க’ன்னான். நானும் வெவரம் தெரியாம இவனைக் கூப்புட்டு, 'பணத்தை விட்டுட்டு வந்துட்டியளாமே, போயி வாங்கிட்டு வாங்க’னு சொன்னேன். இவனும் நம்பி அங்க போயிருக்கான். போனதும் உட்காரவெச்சுட்டு பொறவு எனக்குத் தகவல் சொன்னாங்க. 'பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு வாடா’னு சத்தம் போட்டேன். அங்க ஒத்துக்கிட்டு வந்த பய, இங்க வந்ததும் 'ஒப்புரானே சத்தியமா நான் நல்ல கடலையைத்தேன் கொண்டுபோனேன். அவங்யதேன் மாத்தி சொல்றாங்ய’னு நாக் கூசாமச் சொல்றான்.''

டீக்கடை கச்சேரிக்குப் போவோமா?

''பணத்தக் குடுத்துட்டானாமா?''

''கொடுத்தாத்தானே திருப்பி இவங்கள விட்டுருப்பாய்ங்கே? சரி அதை உடு. மலையடிக்கிப் போனியா?''

''ஆமா நேத்துதேன் போய்ட்டு வந்தேன். மானமும் இறங்கி வர மாட்டேங்குது. அப்புறம் என்னத்தை வெவசாயம் செஞ்சி நம்ம பொழைக்கிறது?''

இதற்குள் பேப்பர் வந்து சேர, ஆளுக்கு ஒரு பேப்பராகப் பிரித்துக்கொண்டு, ''ஏத்தா இன்னோரு டீ, தாத்தா'' என்கிறார்கள்.

டீக் கடை முத்தம்மாவோ, ''இது ரெண்டாவது டீப்பா. கணக்கை மறக்காம குடிங்க'' எனச் சொல்லிவிட்டு டீயை நீட்டுகிறார்.

''எப்படித்தா மறப்போம்?'' என்றவாறே டீயை வாங்கிக்கொள்கிறார் சாமி.

''லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது''- தலைப்பைப் படித்தவர், ''ஆமா கோடிக் கணக்கில் வாங்குற அரசியல்வாதியள விட்டுட்டு அன்னாட செலவுக்கு வாங்குற ஆளுகளயா புடிக்கிறாக. கள்ளச்சாராய வேட்டையில் 16 பேர் கைதுனு நேத்து புடிச்சாக. இவங்களும் புடிச்சிக்கிட்டேதான் இருக்காக. அவங்களும் எரிச்சிக்கிட்டேதான் இருக்காக. சட்டம் சரியா இருந்தா இப்படித் தப்பு நடக்குமா?''

''சட்டத்தை என்ன பண்ணணும்?''

- முருகேசன் கேட்க சுப்பிரமணியன் ஆரம்பிக்கிறார். ''ஒரு கிராமத்தில் கள்ளச்சாராயம் இருக்குன்னா அந்தக் கிராமத்து வி.ஏ.ஓ-வை முதல்ல வேலையை விட்டு தூக்கணும். அவருக்குக் கீழ வேலை பாக்குற தலையாரிக்குத் தண்டனை கொடுக்கணும். அந்த ஏரியா போலீஸ்காரவுக மேல நடவடிக்கை எடுக்கணும். என்ன நான் சொல்றது?''

''ஆமா இப்ப நம்ம பேசிட்டா மட்டும் இப்பவே சட்டத்தைத் திருத்துற மாதிரிதான். அது தொலைஞ்சிட்டுப் போவுது. நாம உழைச்சா தான் நமக்குச் சோறு. நேரமாச்சி நான் வயக்காட்டுக்குப் போய்ட்டு வாரேன்'' என்று சாமி கிளம்ப, ''இருப்பா, நானும் வாரேன்'' என்று சுப்பிரமணியனும் கிளம்புகிறார்; கூடவே முரு கேசனும்.

அந்தக் கச்சேரி அத்துடன் முடிய அடுத்து வரும் இரண்டு பேர் அடுத்த கச்சேரியைத் தொடங்குகிறார்கள்!

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு