Published:Updated:

அண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி!

துறையூர் கொண்டாட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

ருக்குள் நுழைந்ததும், 'டும்ம் டும்ம் டுடுங்’ என்று ஒரு பக்கம் உருமி மேளம் அதிர... இன்னொரு புறம், 'ப்பூம்ம்ம்ம்ம்ம்’ என்ற எக்காளம் வாத்தியத்தில் இருந்து கிளம்பும் விநோத ஒலி, காதைக் கிழிக்கிறது. ஹோலிப் பண்டிகை போல சிறியவர், பெரியவர் என்று பேதம் இட்ல்லாமல் ஊர் மக்கள் அனைவரும் கலர்ப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் அள்ளிப்பூசி விளையாட... துறையூரில் களைகட்டியது செச்சை முனியாண்டவர் கோயில் திருவிழா!

 இன்னும் ஊரின் உள்ளே செல்லச் செல்ல நமக்கே உற்சாகம் கரை புரள்கிறது. முகத்தில் விதவிதமான கலர்ப் பொடிகளைப் பூசிக்கொண்டு, வேற்று கிரக ஜீவராசிகளைப்போல காட்சித் தருகிறது சிறுவர் கூட்டம். பள்ளிக்கூடத்துக்கு லீவு என்ற சந்தோஷம் அவர்கள் முகத்தில். இன்னொரு பக்கம் இளமைக் கொண்டாட்டம். ''டேய்... விடாதே, பிடி!''- ஓடுகிற இளைஞன் ஒருவனை துரத்திப் பிடிக்கிறார்கள் சக நண்பர்கள். அவனது தலையில் 'நச்’சென முட்டை ஒன்று உடைபட... 'ஹோ’வென ஆர்ப்பரிக்கின்றனர் மற்றவர்கள்.

அண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி!

கலர்ப் பொடி கொண்டாட்டத்தில் இளம் பெண்களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் ஓரமாக நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள். வீட்டு வாசலில் கண்ணைப் பறிக்கும் அழகழகான கோலங்கள் போட்டு தங்களது திறமையைக் காட்டுகிறார்கள். கண்களால் காதல் மொழி பேசியபடி இளம்பெண்கள் கூட்டத்தைக் கடந்து செல்கிறார்கள் இளைஞர்கள்.

துறையூர் பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ளது செச்சை முனி ஆண்டவர் திருக்கோயில். அவரை ஊர் மக்கள் செல்லமாக செச்சை முனி தாத்தா என்று அழைக்கிறார்கள். இந்தக் கோயிலில் செச்சை முனி ஆண்டவருக்குத் திருவுருவம் கிடையாது. வேல் ஒன்றுதான் தெய்வமாகக் கருதி வழிபடப்படுகிறது. வருடத்தின் 362 நாட்கள் 'வேல்’ உருவத்தில் காட்சி அளிக்கும் செச்சை முனி தாத்தா, ஆடி மாதம் கடைசி புதன் கிழமையில் இருந்து மூன்று நாட்களுக்கு மட்டும் முழு உருவமாகக் காட்சித் தருகிறார். ஏரியின் மறுகரையில் இருக்கும் செச்சை முனியின் தம்பியான ஜடாமுனி கோயிலில் இருக்கும் செச்சை முனியின் சிரசு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வேலில் பொருத்தப்படுகிறது. இதுதான் ஊச்சாத்துரை திருவிழா!  

மாலை 5 மணிக்கு ஆரம்பம் ஆகிறது திருவிழா. ஏரியின் மறுகரையில் அமைந்து இருக்கும் ஜடா முனி கோயிலில் இருந்து, முனியைப்போல வேடம் தரித்தவர் ஒரு கையில் சிரசையும் மறுகையில் வாளையும் ஏந்திக்கொண்டு மக்கள் கூட்டம் சூழப் புறப்படுகிறார். ஆக்ரோஷத்தோடு காணப்படும் அவரது முகத்தைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. துள்ளித் திமிறும் அவரை இருபுறமும் ஆட்கள் திமிறாமல் பிடித்துக்கொள்கிறார்கள். அவருக்கு முன்னே தாரைத் தப்பட்டைகள், எக்காள வாத்தியங்கள் முழங்க மக்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர்.

பாதையில் ஒவ்வொரு முச்சந்தியிலும் மூன்று அல்லது நான்கு பேர் காவி வேட்டி, குறுக்கு மாலை அணிந்து கையில் வாளுடன் காத்து இருக்கிறார்கள். முச்சந்தியை நெருங்கியதும் செச்சை முனி ஆண்டவர் அவர்களை நோக்கி ஆக்ரோஷத்துடன் ஓடி வருகிறார். அவர்களுடன் முனி சண்டையிடுவது போன்ற காட்சி அரங்கேறுகிறது. இறுதியில் வாளுடன் நிற்பவர்கள் தங்களைத் தாங்களே வெட்டிக்கொள்வது போன்ற பாவனையுடன் கீழே விழுகிறார்கள். இந்தக் காவு கொடுக்கும் நிகழ்ச்சியைக் 'கத்தி போடுதல்’ என்று அழைக்கிறார்கள். இப்படியாக ஊர்வலம் தெப்பக்குளம், கடை வீதி, வடக்கு வீதி என்று ஒவ்வொரு தெரு வழியாகவும் செல்கிறது. இடையிடையே முனியின் ஆவேசத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே மண் குடத்துடன் நிற்பவர்கள், அவர் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றுகிறார்கள். இரவு 8 மணிக்கு மேல் ஊர்வலம் முடிவுக்கு வருகிறது.

செச்சை முனி ஆண்டவரின் கோயிலுக்குச் சென்றதும், வேலின் மீது 'சிரசு’ சிருஷ்டிக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. நூற்றுக்கணக்கான பெண்கள் வரிசையில் திரண்டு வந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். ''மற்ற நாட்களில் பெண்கள் கோயிலுக்கு வர அனுமதி இல்லை. ஊச்சாத்துரை திருவிழாவின்போது மட்டுமே கோயிலுக்குள் வர முடியும்'' என்று விளக்கம் சொல்கிறார்கள்.

அதன் பின்னர் ஆரம்பம் ஆகிறது டெரர் திருவிழா. கோயிலின் ஒரு பக்கம் 30-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாக்களும் நூற்றுக்கணக்கான சேவல்களும் பலியிடத் தயாராகக் காத்து இருக்கின்றன. மஞ்சள் தண்ணீர் தெளித்து உத்தரவு பெறப்பட்டதும், துள்ளத் துடிக்க தலைகள் வெட்டப்படுகின்றன. கோழிகளின் தலைகள் மட்டும் அங்கேயே சமையல் செய்யப்படுகின்றன. கம கமவென விருந்து தயாராக... வருகிற அனைவருக்கும் பரிமாறப்பட்டு, விடிவதற்குள் திருவிழா நிறைவுக்கு வருகிறது!

-ஆர்.லோகநாதன், த.கார்த்திக் ராஜா, படங்கள்: ர.அருண்பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு