ஒவ்வாமையை ஏற்படுத்தும் குளுட்டன் உணவுகள்... யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

குளுட்டன் ஃப்ரீ டயட் சமீப காலமாக மிகவும் பிரபலமாகியுள்ளது. குளுட்டனை எல்லோரும் தவிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் `சீலியாக்' (celiac) எனப்படும் நோய் உள்ளவர்கள் அவசியம் குளுட்டன் ஃப்ரீ உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
எப்போதும் இல்லாத அளவுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வு கடந்த சில மாதங்களில் மிகவும் அதிகமாகி உள்ளது. குறிப்பாக, இந்தக் கொரோனா காலத்தில் மக்களின் கவனம் சிறந்த சத்தான, மருத்துவ குணமுள்ள உணவுமுறையைக் கடைப்பிடிப்பது மற்றும் நோயற்ற வாழ்வு பக்கம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

உணவே மருந்து என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், பலருக்கு சில வகை உணவுகள் ஒவ்வாமையாக மாறிவிடுகிறது. அவற்றில் ஒன்றுதான் குளுட்டன் கலந்த உணவுகள்.
குளுட்டன் என்பது ஒரு வகை புரதம். பசைத்தன்மை நிறைந்தது. கோதுமை, பார்லி போன்ற தானிய வகைகளில் இந்த குளுட்டன் அதிகம் காணப்படுகிறது. ஒட்டும் தன்மை, நெகிழ்வுத் தன்மை மற்றும் மெல்ல எளிதான தன்மை போன்றவை குளுட்டன் உணவுகளின் இயல்புகள். இதனால் இதை பிரட், பிஸ்கட், ரஸ்க், பேக்கரி உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
குளுட்டன் ஃப்ரீ டயட் சமீப காலமாக மிகவும் பிரபலமாகியுள்ளது. குளுட்டனை எல்லோரும் தவிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் `சீலியாக்' (celiac) எனப்படும் நோய் உள்ளவர்கள் அவசியம் குளுட்டன் ஃப்ரீ உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

வயதான சிலருக்கு மட்டுமே இந்தப் புரதத்தை ஜீரணிக்க சகிப்புத் தன்மை இல்லாமல் இருக்கும். அவர்கள் மட்டுமே குளுட்டன் ஃப்ரீ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இவர்களுக்கு குளுட்டன் உள்ள உணவுகளான சப்பாத்தி , பிரட், ரவை அல்லது சேமியா உண்ணும்போது வயிற்றுவலி, அடிக்கடி மலம் கழிப்பது, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, அதீத சோர்வு, மலச்சிக்கல், போன்ற அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் `உணவு சகிப்புத் தன்மை டெஸ்ட்' (உணவு இன்டாலரன்ஸ்) செயதுகொள்ள வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட அந்த உணவுகளைத் தவிர்க்கலாம்.
உடல் எடையைக் குறைக்க பலரும் இந்த குளுட்டன் ஃப்ரீ உணவுமுறையைப் பின்பற்றுகிறார்கள். இதற்குப் போதுமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை. பேலன்ஸ்டு டயட் எனப்படும் சமச்சீர் உணவு வகைககளை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் உடலுக்கு எல்லா சத்துகளும் கிடைக்கும்.

நம் அன்றாட வேலைகளைச் செய்ய உடல் சார்ந்த சக்தியை மட்டும் அல்லாமல் நம் மூளையையும் சீராக இயங்க வைக்க சமச்சீர் உணவுகள் அவசியம். எல்லா தானியங்கள், காய்கறிகள், புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், முட்டை, பால் மற்றும் தயிர், மீன் போன்றவற்றை நம் உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சமச்சீர் உணவுகள், மூளை ஆரோக்கியம், ஞாபகசக்தி, கவனம், கிரகிக்கும் தன்மை ஆகியவற்றை அதிகரிப்பவை.
குளுட்டன் உள்ள உணவுகள்
கோதுமை
பார்லி
கம்பு
ஓட்ஸ்
பிரட்
பிஸ்கட்
ரஸ்க்
ரவை
சேமியா
பெருங்காயம்
மைதா
கஞ்சி மாவு

குளுட்டன் ஃப்ரீ உணவு வகைகள்
பழங்கள்
காய்கறிகள்
முட்டை
பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளான தயிர், பனீர், வெண்ணெய், நெய், கோவா
அரிசி உணவுகள்
மக்காச்சோளம்
எல்லா வகையான மீன்கள்
அசைவ உணவுகள்
தினை வகைகள்
கீன்வா
தண்டுக்கீரை விதை மாவு
பழுப்பரிசி
குளுட்டன் உள்ள உணவுகளை உட்கொள்ள முடியாதவர்கள் கம்பு மாவு, மக்காச்சோள மாவு, பலா மாவு, மரவள்ளிக்கிழங்கு மாவு, அரிசி மாவு, தண்டுக்கீரை விதை மாவு போன்றவற்றில் தோசை மற்றும் சப்பாத்தி செய்ய கோதுமை மாவுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.

குளுட்டன் ஃப்ரீ டயட்டை மருத்துவர் அல்லது உங்கள் உணவு ஆலோசகர் பரிந்துரையின்படி பின்பற்றப்பட வேண்டும்.
வெளியில் உணவகங்களில் சாப்பிடும்போது எந்த உணவுகளில் கோதுமை சேர்த்திருத்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டு உணவு உட்கொள்ள வேண்டும். ஃபுட் லேபிள் எனப்படும் அட்டவணை எல்லா பாக்கெட் உணவுகளிலும் இருக்கும். இதை அவசியம் பார்த்து வாங்குவதைப் பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- ஸ்ரீமதி வெங்கட்ராமன், கிளினிக்கல் டயட்டீஷியன் அண்டு வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட்