Published:Updated:

`1 ஆப்பிளில் 10 கோடி பாக்டீரியாக்கள்!' - அதிரவைக்கும் ஆய்வு முடிவு

ஜெனி ஃப்ரீடா

விதையிலும் விதையைச் சுற்றியுள்ள பகுதியிலும்தான் அதிக எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.

Apple
Apple ( Pixabay )

'An apple a day keeps the doctor away' என்பது உலகம் முழுவதும் பிரபலமான சொலவடை. 'தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியக் குறைபாடே ஏற்படாது; அதனால் மருத்துவரிடம் செல்லவேண்டிய அவசியமே ஏற்படாது' என்பதுதான் இதன் பொருள். நார்ச்சத்து, வைட்டமின் சி, பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழம், ஆப்பிள். அதுதவிர புரதம், கார்போஹைட்ரேட், சர்க்கரை, கொழுப்புச்சத்து எனப் பல்வேறு நன்மைகள் ஆப்பிள் பழத்திலிருந்து கிடைக்கின்றன.

Bacteria
Bacteria
Pixabay

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான பழமாக ஆப்பிள் இருக்கிறது. 'A for Apple' என்று மூன்று வயதிலேயே ஆப்பிள் மனதில் விதைக்கப்பட்டுவிடுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆப்பிளில், '10 கோடி பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன' என்ற அதிரவைக்கும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

ஆஸ்திரியா நாட்டில் உள்ள கிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு, 'ஜர்னல் ஃப்ராண்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜி' (journal Frontiers in Microbiology) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் கேபிரியேல் பெர்க் கூறும்போது, "ஆப்பிளின் தோல், சதைப்பகுதி, விதை, தண்டுப்பகுதி என அனைத்திலும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வின் முடிவில், 240 கிராம் எடையுள்ள ஓர் ஆப்பிளில் சுமார் 10 கோடி பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.

`1 ஆப்பிளில் 10 கோடி பாக்டீரியாக்கள்!' - அதிரவைக்கும் ஆய்வு  முடிவு
Pixabay

விதையிலும் விதையைச் சுற்றியுள்ள பகுதியிலும்தான் அதிக எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன" என்று தெரிவித்திருக்கிறார். 'பாக்டீரியாக்கள் இருப்பது சரி... அவை நல்ல பாக்டீரியாவா உடலுக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாவா?'

அதற்கும் பதிலளித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். "சமையல் செய்யும்போது உணவுப்பொருள், காய்கறிகள், பழங்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது. அதனால், சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள் நமது குடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகின்றன.

`1 ஆப்பிளில் 10 கோடி பாக்டீரியாக்கள்!' - அதிரவைக்கும் ஆய்வு  முடிவு
Pixabay

ஆப்பிளைப் பொறுத்தவரை, அவற்றில் உடலுக்கு நல்லது செய்யும் பாக்டீரியாக்கள் நிறைய இருக்கின்றன. இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆப்பிள்களை தோட்டத்துக்குச் சென்று பறித்தும், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஆப்பிள்களையும் ஆய்வுக்காகப் பயன்படுத்தினோம். அவற்றில் இயற்கையாக விளைவிக்கப்பட்டு ஃபிரெஷ்ஷாக பறிக்கப்பட்ட ஆப்பிள்களில்தான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாகக் காணப்பட்டன. அவைதான் சுவையிலும் மேம்பட்டதாக இருக்கின்றன" என்று ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.