Published:Updated:

பிஸ்கட் குழந்தைகளின் உடல்நலனுக்கு ஆரோக்கியமானதா? - ஓரு மருத்துவ அலசல்

சு.சூர்யா கோமதி
HARIF MOHAMED S
பெ.மதலை ஆரோன்

குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளை ஸ்நாக்ஸ்களாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Biscuits
Biscuits

தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக, பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பழக்கும் முதல் இணை உணவாக பிஸ்கட் இருக்கிறது. கலர் கலரான விளம்பரங்களை நம்பி, குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்கள் அதிகம்.

பிஸ்கட்
பிஸ்கட்
pixabay

பெரும்பாலான தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸ்களை பிஸ்கட்டுகளால் நிரப்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பிஸ்கட்டுகள், குழந்தைகளின் நலனுக்கு ஆரோக்கியமானதா, அதில் என்ன சத்து உள்ளது, தினமும் எத்தனை பிஸ்கட்டுகள் வரை சாப்பிடலாம்... அதிக அளவில் பிஸ்கட்களைச் சாப்பிடுவதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்குமா? என்பது தொடர்பாக நிபுணர்களிடம் கருத்துக் கேட்டோம். முதலில் பேசியவர், குழந்தைகள் மற்றும் பொதுநலன் மருத்துவர் ஜெயந்தி.

"பிஸ்கட்டுகள், முழுக்க முழுக்க உடலுக்குத் தீங்கானவைதான். அது, குழந்தைகளின் வயிற்றை நிரப்புமே தவிர ஆரோக்கியத்தைத் தராது. பிஸ்கட் தயாரிக்க சேர்க்கப்படும் மைதா, குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட் , நிறமிகள், சுவையூட்டிகள் என எதுவுமே உடலுக்கு ஆரோக்கியமானது கிடையாது. மேலும், பிஸ்கட்டுகள் நீண்ட நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ஹைட்ரஜனேட் கொழுப்புகள் (பதப்படுத்தி) குழந்தைகளுக்கு ஒபிசிட்டி பிரச்னையை ஏற்படுத்தும்.

பிஸ்கட் குழந்தைகளின் உடல்நலனுக்கு ஆரோக்கியமானதா? - ஓரு மருத்துவ அலசல்

பிஸ்கட்டுகளில் எண்ணெய்த் தன்மை இல்லையெனினும், அதில் கலோரிகள் அதிகம். நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிஸ்கட் செரிமானம் ஆக, குறைந்தது ஒரு மணிநேரமாவது தேவைப்படும். குழந்தைகள், இரண்டு அல்லது மூன்று பிஸ்கட்டுகளை ஒரே நேரத்தில் சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இதனால்தான், அவர்களுக்கு பசியின்மை ஏற்படுகிறது. மற்ற உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்ப்பார்கள். 'என் குழந்தைகள் சரியாகவே சாப்பிட மாட்டேங்கிறான்' எனப் புலம்பும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளை மட்டுமே ஸ்நாக்ஸ்களாகக் கொடுப்பதை முதலில் தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலான குழந்தைகள், க்ரீம் பிஸ்கட்டுகளின் பிரியர்களாக இருப்பார்கள். சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிடுகையில், க்ரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை. க்ரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃப்ளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. மேலும், அதன் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லாருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

சில பிஸ்கட் பாக்கெட்டுகளில், சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த பிஸ்கட்டுகளில், சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரை சேர்த்திருக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதன் சுவைக்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோள மாவு, சுகர் சிரப் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும்.
குழந்தைகள் மற்றும் பொதுநலன் மருத்துவர் ஜெயந்தி

இனிப்பு பிஸ்கட்டுகளில்தானே இவ்வளவு பாதிப்பு... உப்பு கலந்த 'சால்ட் பிஸ்கட்டு'களை வாங்கிக்கொடுக்கலாமா? என நிறைய பெற்றோர்கள் கேட்பார்கள். உப்பு பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைகொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது, குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் பிரச்னையும் ஏற்படும்.

பிஸ்கட்டுகளுடன் சேர்த்து பால் கொடுப்பது, காபி கொடுப்பது போன்ற தவறுகளை நிறைய பெற்றோர்கள் செய்கின்றனர். ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது, உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து, குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம். சில பிஸ்கட் பாக்கெட்டுகளில், சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரை சேர்த்திருக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதன் சுவைக்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோள மாவு, சுகர் சிரப் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். இது, உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவைக் குறைப்பதோடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

பிஸ்கட்டில் உள்ள சத்துகள்
பிஸ்கட்டில் உள்ள சத்துகள்
விகடன்

இதுபோன்ற பிரச்னைகளுக்காகக் குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளே கொடுக்க வேண்டாமா? அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாதானம்செய்வது என்ற கேள்வி எழும்.

தவிர்க்க முடியாத சூழலில், குழந்தைகளுக்கு மாலை 4 மணிக்கு ஒரு பிஸ்கட் கொடுக்கலாம். அதன் பின் 6 மணி அளவில் ஒரு டம்ளர் பால், இரவு எட்டு மணிக்கு இரவு உணவு கொடுக்கலாம். க்ரீம் பிஸ்கட்டுகள் எனில், வாரம் இரண்டு முதல் மூன்று பிஸ்கட்டுகளே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் அல்லது வீட்டிலேயே தயார்செய்த சிறுதானிய பிஸ்கட்டுகளைக் கொடுக்கலாம்" என்றார், மருத்துவர் ஜெயந்தி.
குழந்தைகள் மற்றும் பொதுநலன் மருத்துவர் ஜெயந்தி

பிஸ்கட் இல்லையென்றால், பிறகு எவற்றை ஸ்நாக்ஸ்களாகக் கொடுத்தனுப்புவது என்கிற கேள்விக்குப் பதில் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த நியூட்ரிஷியன் நித்யா.

"கொழுப்பு, சோடியம், சர்க்கரை என ஆரோக்கியமற்ற பிஸ்கட்டுகளைக் கூடுமானவரை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதைத் தவிர்க்கலாம். சில தாய்மார்கள், ஆறு மாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு இணை உணவாக பிஸ்கட்டுகளைக் கொடுக்கின்றனர். இது, குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். எந்த பிஸ்கட்டுகளிலுமே இயற்கை உணவுக்கு இணையான சத்துகள் இருப்பது கிடையாது. எனவே, குழந்தைகளுக்கு இயற்கை உணவு அல்லது வீட்டில் தயார்செய்த உணவுகளை சாப்பிடக்கொடுப்பதே ஆரோக்கியமானது.

குழந்தை
குழந்தை
pixabay

குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸ்களில், நம் பாரம்பர்ய தின்பண்டங்களான கடலை மிட்டாய்,பாசிப்பருப்பு உருண்டை, உளுந்து வடை, பேரீச்சை, முந்திரி, பிஸ்தா, பாதாம், நட்ஸ் மற்றும் டிரை ஃப்ரூட்ஸை ஸ்நாக்ஸாகக் கொடுத்தனுப்பலாம். இவற்றில் உள்ள இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்துகள், குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு, தினம் ஒரு நிறத்தில் பழங்களை கொடுத்தனுப்பலாம். பழங்கள் கொடுத்தனுப்புகிறீர்கள் எனில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இவை நீண்ட நாள்களுக்குக் கெடாமல் இருக்க கெமிக்கல்கள் பயன்படுத்துவார்கள். எனவே, அவற்றைத் தவிர்த்து கொய்யா, பப்பாளி, சப்போட்டா, மாதுளை, அன்னாசி போன்ற பழங்களைக் கொடுத்தனுப்பலாம். முளைகட்டிய தானியங்கள்,வேகவைத்த சுண்டல்கள் போன்றவற்றை கொடுத்தனுப்பலாம்.

ராகி குக்கீஸ்
ராகி குக்கீஸ்
vikatan

மினரல்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தின்பண்டங்களாக எடுத்துக்கொள்ளும் குழந்தைகள், ஆரோக்கியம் உடையவர்களாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் உங்கள் கைகளிலே'' என்றார்.