Published:Updated:

குழந்தைகள் உணவில், சர்க்கரை ஆபத்து! - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

ஜெ.நிவேதா

குழந்தைகள் உணவுகளில் கலக்கப்படும் சர்க்கரைச்சத்து... எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிறுவனம்.

குழந்தை உணவு
குழந்தை உணவு ( Pixabay )

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உணவு முதல் உறக்கம் வரை ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் பொதுவான அறிவுரை. காரணம், அப்படிச் செய்தால்தான் குழந்தையின் அடுத்தகட்ட உடல் வளர்ச்சிகள் அனைத்தும் சரியாகவும் சீராகவும் இருக்கும்.

இப்படியான உணவுகள் பல் பிரச்னைகள், உடல்பருமன், சர்க்கரை நோய் போன்றவற்றைக் குழந்தைக்கு ஏற்படுத்தும்
ஆய்வாளர்கள்

'நான் என் குழந்தையை சரியாகத்தான் பார்த்துக்கொள்கிறேன். முறையாக உணவு தருகிறேன்' என நினைக்கும் பெற்றோர், 'உங்கள் குழந்தைக்கு நீங்கள் சரியான உணவைத்தான் தருகிறீர்களா' என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் இது.

'நீங்கள் ஆரோக்கியம் என நினைக்கும் உணவுகூட ஆபத்தானதாக இருக்கலாம்' என்கிற அச்சத்தைத் தருகின்றன உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு முடிவுகள். நவம்பர் 2017 முதல் ஜனவரி 2018 வரையில் ஐரோப்பாவின் ஆஸ்ட்ரியா, பல்கேரியா, இஸ்ரேல், ஹங்கேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 516 கடைகளிலிருந்து வாங்கப்பட்ட 8000 குழந்தைகளுக்கான உணவுப்பொருள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

குழந்தை உணவு
குழந்தை உணவு
Pixabay

அவற்றில், மூன்றில் ஓர் உணவுப்பொருளில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆறு மாதத்துக்குட்பட்ட குழந்தைகள் உணவுகளிலும்கூட, அதே நிலைதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். பொதுவாக ஆறு மாதத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கு, தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்க வேண்டும் என்பதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை. ஆனால், அந்தக் குழந்தைகளுக்கும், ஐரோப்பிய அரசு சில உணவுகளை அங்கீகரித்துள்ளது. அப்படி அங்கீகரிக்கப்பட்ட உணவுகளிலும் அதே பிரச்னை இருப்பது ஆய்வாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

`இப்படியான உணவுகளைச் சாப்பிடுவதால், உடல்பருமன், சர்க்கரைநோய் போன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படும்' என வேதனை தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். மேலும், இத்தகைய உணவுப் பொருள்களின் லேபிள்களில், `குழந்தைகளுக்கு இது உகந்தது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை கடுமையாகச் சாடியுள்ளனர்.

ஆறு மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகள் உணவுகளிலும்கூட, சர்க்கரைச் சத்து நிறைந்திருந்தது
ஆய்வாளர்கள்
தாய்ப்பால்
தாய்ப்பால்
விகடன்
Vikatan

குறிப்பிட்டு அந்த நிறுவனங்களின் பெயர்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிடாவிட்டாலும்கூட, இப்படியான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் லேபிள்களை நீக்கவிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், `மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது உகந்ததல்ல' என்ற வாசகத்தைச் சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.