
கொரோனா நோயாளிகளுக்குப் பழங்கள் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு.
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த விதவிதமான டயட் அட்டவணைகள் சமூகவலைதளங்களில் வலம் வந்துகொண்டேயிருக்கின்றன. தமிழகம் தொடங்கி வடஇந்தியாவில் வழங்கப்படும் டயட் சார்ட்கூட காணக்கிடைக்கிறது. அதன் பின்னணியைக்கூட ஆராயாமல் பலர் அப்படியே பின்பற்றவும் செய்கின்றனர்.

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் பல மருத்துவமனைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும் வைட்டமின் சி சத்து கிடைக்க வேண்டும் என்றும் பல்வேறு பழங்கள், பழச்சாறுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், கொரோனா நோயாளிகளுக்கு பழங்கள் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். குளிர்ச்சியான பழங்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் சென்னையில் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் சித்த மருத்துவர் வீரபாபு.
``பழங்கள் பொதுவாக கபத்தை அதிகரிக்கும் தன்மை உடையவை. கொரோனா வைரஸ் நோயில் நுரையீரலில் தொற்று ஏற்படுவதால் குளிர்ச்சி தரும் பழங்கள், தயிர்சாதம் போன்றவை நோயின் தீவிரத்தை அதிகரிக்கும். அதனால் பழங்கள், எலுமிச்சைச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். உடல் வெம்மையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெம்மையைக் கொடுக்கும் அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்வற்றை கொரோனா நோயாளிகள் குறைவான அளவு எடுத்துக்கொள்ளலாம். பிற அனைத்து வகையான பழங்களையும் இந்த நேரத்தில் தவிர்த்துவிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தையும் தவிர்த்துவிட வேண்டும்.
சித்த மருத்துவத்தில் வழங்கப்படும் கபசுரக் குடிநீர் உடலை வெம்மையாக்க வைக்க உதவும். இஞ்சிச்சாறு எடுத்துக்கொள்வதிலும் தவறில்லை. லேசான, மிதமான, தீவிர அறிகுறிகள் உள்ளவர்கள் என அனைத்துவகை கொரோனா நோயாளிகளும் இதைப் பின்பற்ற வேண்டும்.

ஆரோக்கியமாக இருப்பவர்கள் அனைத்து வகையான பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். சளி, இருமல் தொந்தரவு இருப்பவர்களும் குளிர்ச்சியானவற்றைத் தவிர்க்கலாம். காய்கறிகளில் சற்று மிளகுத்தூள் சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். பொதுவாகவே அனைவரும் இதுபோன்ற நோய் பரவும் நேரங்களில் உணவில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார் அவர்.