Published:Updated:

கொரோனாவை விரட்டுமா சுக்கு? வாட்ஸ்அப் வதந்தியும் மருத்துவர் விளக்கமும்! #FightCovid-19

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் உடலைத் தாக்கும்போது தொண்டைப் பகுதியில்தான் நான்கு நாள்கள் வரை தங்கியிருக்குமாம்.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் பெரும்பாலான மக்கள். கொரோனா பீதியில் உறைந்திருக்கும் அவர்களுக்கு கண்டது, கேட்டது, பார்ப்பது என எதிலாவது தீர்வு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பும் கவலையும் இருக்கிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் ஏராளமான ஆடியோ, வீடியோ தகவல்கள் பகிரப்படுகின்றன. கடந்த சில நாள்களாகப் பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது ஒரு ஆடியோ.

Whatsapp
Whatsapp

தமிழில் பேசும் அந்தப் பெண் கொரோனா தாக்காமல் இருக்க சில ஆலோசனைகளை அளிக்கிறார். ``சீரகம், மிளகு இவையெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதனால் தினமும் ஒருமுறை ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

`சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது சுப்ரமணியருக்கு மிஞ்சின கடவுளும் கிடையாது' என்று ஒரு சொலவடை உண்டு. அதனால் இரவு சுக்கு அல்லது இஞ்சியைத் தட்டிப்போட்டு வெந்நீர் வைத்துக் குடியுங்கள்.

Ginger
Ginger

கொரோனா வைரஸ் நுரையீரலைப் பாதிக்கும்போதுதான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது நுரையீரலுக்குள் செல்வதற்கு 5 நாள்கள் ஆகுமாம். அதற்கு முன்னால் இதுபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பின்பற்றி அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று நீள்கிறது அந்தக் குரல்.

இந்தத் தகவல்கள் உண்மைதானா? சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் கேட்டோம். ``இதில் தெரிவிக்கப்படும் அனைத்துக் கருத்துகளுமே உண்மை என்று சொல்ல முடியாது. கொரோனா வைரஸ் தொண்டைக்குள் நான்கு நாள்கள் தங்கியிருக்கும். அந்த மருந்துகளைச் சாப்பிடும்போது அவை வயிற்றுக்குள் சென்றுவிடும் என்பதெல்லாம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

Siddha doctor Vikram Kumar
Siddha doctor Vikram Kumar
`கொரோனா வதந்தி; நாட்டுப் பசு கோமியம் லிட்டர் ரூ.500’ - மேற்குவங்கத்தில் கைதான பால் வியாபாரி

ஆனால் சீரகம், மிளகு, சுக்கு போன்ற அஞ்சறைப்பெட்டி பொருள்களுக்கு நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. அதாவது பொதுவாகவே இவற்றுக்கு வைரஸை அழிக்கும் ஆற்றல் உண்டு. ஆனால் கொரோனா வைரஸை அழிக்கும் என்று சொல்ல முடியாது. அந்தப் பொருள்களுக்கு வைரஸ் எதிர்ப்பு ஆற்றல் (Anti Viral Activity) இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அதில் கூறப்பட்டிருப்பவற்றை நிச்சயம் எடுத்துக்கொள்ளலாமே தவிர, தீர்வாக எடுத்துக்கொள்ள வேண்டாம்'' என்கிறார் விக்ரம் குமார்.

அடுத்த கட்டுரைக்கு