Published:Updated:

தயிரா, மோரா... குளிர்காலத்துக்கு எது சிறந்தது? மருத்துவ விளக்கம்!

``பால் சார்ந்த உணவுகளையெல்லாம் குளிர்காலத்தில் தவிர்ப்பதே நல்லது!"

மோர்
மோர்

என்னதான் உணவுப் பிரியராக இருந்தாலும், பருவநிலை மாறும்போது அதற்கேற்றாற்போல உணவுமுறையை மாற்றி அமைத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில், குளிர்காலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், எவற்றையெல்லாம் தவிர்க்கலாம் என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, என்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த அறிவு, அவசியம்.

மோர்
மோர்

ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன் பேசும்போது, `பால் சார்ந்த உணவுகளையெல்லாம், குளிர்காலத்தில் தவிர்ப்பதே நல்லது' என்கிறார். குறிப்பாக, தயிர் உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டுமாம். ஏனென்ற காரணத்தையும் அவரே விளக்கிச் சொல்கிறார்.

``ஆயுர்வேத முறைப்படி, குளிர்காலத்தில் நிச்சயம் தயிர் சாப்பிடவே கூடாது. குறிப்பாக, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் தயிர் எடுத்துக்கொள்ளவே கூடாது.

தயிர்
தயிர்

காரணம் :

குளிர்காலத்தில், உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். காலநிலைக்கு நேரெதிராக உடலின் வெப்ப நிலை இருப்பதால், பசி உணர்வு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இதனாலேயே காரமான, மொறுமொறுப்பான உணவுகளைச் சாப்பிட வேண்டுமென்ற தூண்டுதல் அதிகமிருக்கும். அவற்றிலும் உஷ்ணத்தன்மை அதிகமாகவே இருக்குமென்பதால், அவற்றை உட்கொள்ளும்போது உடல் உஷ்ணம் இன்னும் அதிகரித்துவிடும். இதனால் தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்படலாம். அதனாலேயே இந்தக் காலகட்டத்தில் உஷ்ணம் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவோம். அந்த வகையில்தான், தயிரையும் தவிர்க்கவேண்டியிருக்கும். மீறி சாப்பிட்டால், தொற்றுப்பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

தயிர் சாப்பிடுவதால், சருமப் பிரச்னைகளும் ரத்தம் சார்ந்த பிரச்னைகளும் வரலாம். இவை, குளிர்காலத்தில் அதிகம் ஏற்படும் என்பதால், தயிர் சாப்பிடும்போது பிரச்னைக்கான வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும்.

தயிர் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், தயிருக்குப் பதிலாக மோர் எடுத்துக்கொள்ளலாம்.
ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்
ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்

ஆனால், எது மோர் என்பதில் தெளிவு தேவை. தயிரில் நீர் ஊற்றி, அதை மோரென உபயோகிப்பது தவறு. உண்மையில் அது, `தண்ணீர் தயிர்'. அவ்வளவே! வெண்ணெய் கடையும்போது மீதமாவதுதான் மோர்.

நீரிழிவு நோயாளிகளுக்கும் மோர் நல்லது
ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்

மோர் ஏன் நல்லது தெரியுமா?

மோர், அமிர்தத்துக்கு ஒப்பான உணவுப்பொருளென்றே ஆயுர்வேதம் சொல்கிறது. காரணம், இது எந்த வகையிலும் யாருக்கும் கெடுதலைத் தராது. நீரிழிவு நோயாளிகளுக்கும் மோர் நல்லது. குளிர்காலத்தில் மோர் குடிக்கும்போது, ரத்தக்குழாய்கள் சுத்தமடையத் தொடங்கும். ஆனால், பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த உணவையும், மதிய வேளைகளில் உட்கொள்ளவும். இரவில் கட்டாயம் உண்ண வேண்டாம்.

பால் பொருள்கள்
பால் பொருள்கள்

சளித்தொந்தரவு - சைனஸ் - தலைவலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், மோரைத் தவிர்ப்பது நல்லது. சாப்பிட்டே ஆக வேண்டும் என்பவர்கள், மோருடன் மிளகு / இஞ்சி சேர்த்து, உடன் சின்ன வெங்காயம் வைத்து சாப்பிடலாம்" என்கிறார் அவர்.

சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் இதுகுறித்துப் பேசினோம்.

``தயிர், மோர் இரண்டுமே ஓரளவுக்கு குளிர்ச்சியானவைதான். இருப்பினும், செரிமானக் கோளாறுகளை நீக்குவது, அசிடிட்டி பிரச்னையைத் தடுப்பது, மலச்சிக்கலைத் தடுப்பது என கூடுதலாகச் சில நன்மைகள் மோருக்கு உண்டு. தயிரைவிட அதிக அளவு வைட்டமின் சத்துகள் மோரில்தான் இருக்கின்றன. தயிர், நேரடியாக கபத்தை அதிகரிக்கும் இயல்புடையது என்பதால், குளிர்காலத்தில் அதனால் உடல் உபாதைகள் ஏற்படலாம். மோரில் லேக்டோபேசிலஸ் (Lactobacillus) என்ற நுண்ணுயிர்கள் இருப்பதால் தயிரைவிட மோர் சிறந்தது.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்
புளித்த மோர் கூடாது!

புளித்த மோர் வாதத்தை அதிகரித்துவிடும் என்பதால் அதைத் தவிர்க்கவும். புளித்த மோர், உடல் வலியையும் ஏற்படுத்தும். நீர் மோர்தான் சிறந்தது. எளிதில் சளி இருமல் பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்கள், குளிர்காலத்தில் தயிர் - மோர் இரண்டையுமே தவிர்ப்பதுதான் நல்லது" என்கிறார்.

Vikatan