Published:Updated:

2K kids: ஆரோக்கியம் வேண்டுமா..?! - டூ’ஸ் அண்டு டோன்ட்’ஸ்!

- அ. நெடு விண்வெளி கல்பனா

பிரீமியம் ஸ்டோரி

‘`வாழ்க்கை முறை மாற்றம், நம் உடலில் ஏற்படுத்தும் பிரச்னைகள் பல. அதைச் சரிசெய்து கொள்ளவில்லை என்றால் ஆரோக்கியமும் ஆயுளும் விலையாகக் கொடுக்கப்படும். குறிப்பாக, புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்’’ என்று சொல்லும் சென்னை, செல்லம்மாள் மகளிர் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆ.அன்புசெல்வி தந்த தகவல்களும் தீர்வுகளும் இங்கே!

உணவே விஷமா?

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வது இரைப்பை குடல் புற்றுநோய் பாதிப்பை உண்டாக்கலாம். உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைக்கும்போது, அதில் உள்ள பீனால் உணவுப் பொருள்களில் கலந்து மார்பகப் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது.

பருமன்... வரிசைகட்டும் நோய்கள்!

கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த உணவுப் பொருள்களால் உடல் பருமன் ஏற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், மாதவிடாய் பிரச்னைகள், ரத்த அழுத்தம், இதய படபடப்பு, நீரிழிவு, தைராய்டு பிரச்னைகள் என நோய்கள் வரிசைகட்டுகின்றன. அதிக கலோரிகள் உள்ள உணவு மார்பகப் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆபத்தைத் தூண்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புகையிலை... 14 வகை புற்றுநோய்!

புகையிலை பயன்படுத்துவதால் 14 வகை புற்றுநோய்க்கான வாய்ப்பு உண்டாகும் ஆபத்து உள்ளது. புற்றுநோய் பாதிப்புகள் 25% - 30% உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன. அதில், 87% உயிரிழப்புகள் நுரையீரல் புற்றால் ஏற்படுகின்றன என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

மது... மிக ஆபத்து!

மதுப் பழக்கத்தால் இரைப்பை, உணவுக்குழாய், குரல்வளை பாதிப படை கின்றன. இந்த உறுப்புகளில் புற்றுநோய் உருவாகும் ஆபத்தும் அதிகமுள்ளது. இவை தவிர, மார்பகப் புற்று, கல்லீரல் புற்று, பெருங்குடல் புற்று என மதுப் பழக்கத்தால் ஏற்படக்கூடிய புற்றுநோய்கள் பல. எத்தில் ஆல்கஹாலால் உண்டாகும் ஃப்ரீ ராடிகில்கள், டிஎன்ஏ மற்றும் புரோட்டீன் உடன் இணைந்து ஆல்கஹாலுடன் தொடர்புடைய புற்றுநோயை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாசு மற்றும் கதிரியக்கம்!

காற்று மாசுபாடு சுவாசக் கோளாறு முதல் நுரையீரல் புற்றுவரை உருவாக்குகிறது. ஆவியாகும் கரிமக் கலவைகள், மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவை குழந்தைகளுக்கு ரத்த புற்றுநோயும், பெரியவர்களுக்கு மூளைக்கட்டி உருவாகும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. அலைபேசியில் நீண்ட நேரம், தொடர்ந்து பேசும்போது, கதிரியக்கத்தால் 10 ஆண்டுகளில் மூளைக்கட்டி உருவாகக்கூடிய ஆபத்துள்ளது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

2K kids: ஆரோக்கியம் வேண்டுமா..?! - டூ’ஸ் அண்டு டோன்ட்’ஸ்!

புற்றுநோய்... உணவிலேயே மருந்து!

25,000-க்கும் மேற்பட்ட இயற்கை பொருள்கள் புற்றுநோய்க்கு எதிரான திறன் மிக்கவையாக அறியப்படுகின்றன.

தர்பூசணி, ஆப்ரிகாட், தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்றவை புற்றுநோய் உருவாகும் ஆபத்தை வெகுவாகக் குறைக்கும்.

வெங்காயம் மற்றும் ஆப்பிளில் உள்ள குர்செடின் புற்றுக் கட்டிகள் உருவாவது மற்றும் பரவுதலைத் தடுக்க வல்லது.

திராட்சை, பெர்ரி , வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்படும் ரெஸ்வெராட் ரோல் அனைத்து வகை புற்று ஆபத்திலிருந்தும் காக்கும்.

பூண்டில் உள்ள டைலில் டை சல்பைடு என்ற வேதிப்பொருள், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் செல்கள் அதிகம் பெருகாமலும் நோய் உடலின் வேறு பகுதிக்குப் பரவாமலும் தடுக்கும் தன்மை கொண்டது.

இஞ்சியில் உள்ள ஜின்சரால் ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயலாற்றுவதுடன் நோய்க் கட்டி வராமல் தடுக்கிறது.

முழு தானியங்களான கோதுமை, அரிசி, கம்பு போன்றவற்றில் உள்ள வைட்டமின் ஈ ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மார்பகப் புற்று நோய், கல்லீரல் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது.

கிரீன் டீ, பிளாக் டீ புற்று ஆபத்தைத் தவிர்க்கிறது.

பெருஞ்சீரகத்தில் உள்ள அனிதோல் பால் சுரப்பிகள் உருவாக்கும் கட்டியைத் தடுக்கிறது.

மஞ்சளில் உள்ள கர்குமின் புற்று கட்டிகள் உருவாதலைத் தடுக்கிறது.

மொத்தத்தில், உடலியல் மாற்றங்கள் வராமல் தவிர்க்க சிறந்த வாழ்வியல் முறைகளான சூழ்நிலைக்கு உகந்த சரிவிகித உணவு முறை, போதிய ஓய்வு மற்றும் உறக்கம், முறையான உடற்பயிற்சிகள் எனப் பின்பற்றி நலமோடும் வளமோடும் வாழலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு