Published:Updated:

`சாப்பிடும்போது மட்டும் இதைச் செய்யவே செய்யாதீங்க...!' - மருத்துவர் விளக்கம்

ஒருவர் விருப்பமான உணவை நீண்ட நாள்கள் சாப்பிடாமல் இருந்து, திடீரென்று சாப்பிடும்போது நிறைய சாப்பிடுவார்கள், அவசரமாகவும் சாப்பிடுவார்கள். அப்போது புரையேறுதல் நடக்க வாய்ப்பு உள்ளது. இவரது இறப்பில் அதுதான் நடந்திருக்கும்.

பரோட்டா
பரோட்டா

புதுச்சேரியைச் சேர்ந்த புதுமாப்பிளை ஒருவர் மனைவியுடன் செல்போனில் பேசியவாறு பரோட்டா சாப்பிட்டபோது உயிரிழந்தார். பரோட்டா துண்டு சுவாசக்குழாயில் சிக்கியதால் அவரது இறப்பு நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

பரோட்டா
பரோட்டா

புதுவை மாநிலம் லாஸ்பேட்டை அருகே உள்ள கருவடிக்குப்பம் பகுதி பாரதி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகசுந்தரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இவரின் மனைவி தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு, சாப்பிடுவதற்காக பரோட்டா வாங்கி வந்து சாப்பிட்டார். அப்போது மனைவியை செல்போனில் அழைத்துப் பேசிக்கொண்டே சாப்பிட்டிருக்கிறார். திடீரென அவரது பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டு முனகல் சத்தம் மட்டுமே வந்திருக்கிறது. இதனால் பதறிய சண்முகசுந்தரி, உறவினர்களுக்குப் போன் செய்து தன் கணவருக்கு என்னாயிற்று என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். அவர்கள் அங்கே சென்று பார்த்தபோது புருஷோத்தமன் இறந்து கிடந்துள்ளார்.

பரோட்டா
பரோட்டா

இதையடுத்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவர் சாப்பிட்ட பரோட்டாவின் ஒரு துண்டு சுவாசக் குழாயில் சிக்கியதே உயிரிழப்புக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை நிபுணர் சங்கரிடம் பேசினோம்.

``இந்தச் சம்பவத்துக்குப் புரையேறியதே முக்கியக் காரணம். ஒருவர் விருப்பமான உணவை நீண்ட நாள்கள் சாப்பிடாமல் இருந்து, திடீரென்று சாப்பிடும்போது நிறைய சாப்பிடுவார்கள், அவசரமாகவும் சாப்பிடுவார்கள். அப்போது புரையேறுதல் நடக்க வாய்ப்பு உள்ளது.

காது, மூக்கு, தொண்டை நிபுணர் சங்கர்
காது, மூக்கு, தொண்டை நிபுணர் சங்கர்

இவரது இறப்பில் அதுதான் நடந்திருக்கும். பேசிக்கொண்டே சாப்பிடும்போது உணவானது உணவுக் குழாயில் செல்வதற்குப் பதிலாக சுவாசக் குழாயில் சென்று அடைத்துக்கொள்ளும். இதுமட்டுமன்றி சிலருக்கு மூக்கடைப்பு, நரம்புத் தளர்ச்சி இருந்தாலும் புரையேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இன்னும் சிலருக்கு சாப்பிடும்போதே மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு” என்கிறார் டாக்டர் சங்கர்.