Published:Updated:

36,499 பேர்... 13 ஆண்டுகள் ஆய்வு..!- புராஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் காளான்

பெ.மதலை ஆரோன்

வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை உணவில் காளான் சேர்த்துக்கொண்டால், புராஸ்டேட் புற்றுநோய் உருவாகும் பாதிப்பு 8 சதவிகிதம் குறையும்.

Mushroom
Mushroom

ஆண்களைப் பாதிக்கும் பொதுவான புற்றுநோயாக புராஸ்டேட் புற்றுநோய் பார்க்கப்படுகிறது. இந்த நோய் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகள் உலகெங்கும் நடத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் சர்வதேச புற்றுநோய் இதழில் நடத்தப்பட்ட ஆய்வில், 'வாரத்திற்கு மூன்று முறை காளான்களை உணவில் சேர்த்துக்கொண்டால், புராஸ்டேட் புற்றுநோய் உருவாகும் அபாயம் குறையும்' என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக 40 முதல் 79 வயதுக்குட்பட்ட 36,499 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களிடம் 13 ஆண்டுகள் 2 மாதங்கள் வரை ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வின் முடிவில், அவர்களில் 3.3 சதவிகிதம் பேருக்கு புராஸ்டேட் புற்றுநோய் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில், காளான்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

Mushroom
Mushroom
அதாவது, வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை உணவில் காளான் சேர்த்துக்கொண்டால், புராஸ்டேட் புற்றுநோய் உருவாகும் பாதிப்பு 8 சதவிகிதம் குறைகிறது. வாரத்துக்கு மூன்று முறைக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு, புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு 17 சதவிகிதமாகக் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வுகுறித்து அதன் தலைவர் ஷு ஜாங் கூறுகையில், 'காளான்களை அதிகம் உட்கொண்டவர்களுக்குப் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது என்று கண்டறியப்பட்டாலும், காளானில் இருக்கும் எந்தச் சத்து இதற்குக் காரணமாக விளங்குகிறது என்பது இன்னும் தெளிவற்றதாகவே இருக்கிறது. மேலும், எந்தெந்த வகை காளான்களை ஆய்வில் ஈடுபட்டவர்கள் உட்கொண்டார்கள் என்பது குறித்த தரவுகளும் சேகரிக்கப்படாததால், எந்த வகைக் காளான்கள் புற்றுநோய் தடுப்புக்குப் பயன்படுகின்றன என்றும் தெரியவில்லை. உண்ணக்கூடிய காளான்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால், நிச்சயம் நன்மையே கிடைக்கும்' என்று கூறியுள்ளார்.

Mushroom
Mushroom

நாம் உண்ணும் 100 கிராம் காளானில் 35 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதச்சத்து. காளான் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். இதுவரை 2,000 காளான் இனங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. உலக அளவில் 12,000 முதல் 15,000 வகையான காளான்கள் காணப்படுகின்றன. அவற்றில் விஷத்தன்மை உள்ள காளான்களைத் தவிர்த்துவிட்டு, உண்ணக்கூடிய காளான்களை மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.